பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது. அதன்பின் அந்தப் படத்தை ஓடிடியிலும் அதிகம் பேர் பார்த்து ரசித்தனர். இப்போது டிவியில் ஒளிபரப்பினால் கூட நிறைய பேர் பார்க்கிறார்கள்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து உருவான 'சலார்' படம் இந்த வாரம் டிசம்பர் 22ம் தேதி தமிழிலும் வெளியாக உள்ளது. 'பாகுபலி' படம் மூலம் தமிழிலும் மிகவும் பிரபலமான பிரபாஸ் இந்தப் படத்தின் கதாநாயகன். தமிழில் சில படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் தான் படத்தின் கதாநாயகி. இப்படி தமிழில் நன்கு பிரபலமான நடிகர்கள், நடிகை நடிக்கும் 'சலார்' படத்தை இங்கு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வெளியிடுகிறார்கள்.
இப்படம் குறித்து யு டியூபில் வெளியான டீசர், டிரைலர் மூலம் மட்டுமே ரசிகர்களுக்கு படம் பற்றி தெரிய வந்துள்ளது. இன்று படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட உள்ளார்கள். ஹிந்தியிலும், தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அளவுக்கு இங்கு எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து இங்கு வெளியான மூன்று படங்களுமே வசூல் ரீதியாக தோல்வியடைந்து நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. அதை 'சலார்' சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.