சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் | நான் தற்கொலை செய்தால் அரசு தான் பொறுப்பு : நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை விரக்தி | தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ் | ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை |
தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். மற்ற பண்டிகை நாட்களை விட தீபாவளிக்கு படங்கள் வெளியாவதை ஒரு பெருமையாகவும் நடிகர்களும், இயக்குனர்களும் பார்ப்பார்கள். ஒரு காலத்தில் தீபாவளிக்கு பத்து படங்கள் வரையிலும் வந்ததுண்டு. ஆனால், போகப் போக அது நான்கைந்து படங்கள், ஓரிரு படங்கள் எனக் குறைந்துவிட்டது. இந்த 2023ம் வருட தீபாவளிக்கு நான்கு படங்கள் வருகின்றன. “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா, ரெய்டு” ஆகிய படங்கள் இந்த வாரமே வெளியாகின்றன.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன்
2014ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாசி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'ஜிகர்தண்டா' படம் வெளிவந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் போல இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். இப்போதெல்லாம் இரண்டாம் பாகப் படத்தில் முதல் பாகத்தில் நடிக்காத வெவ்வேறு நடிகர்களும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ரவுடியாகவும், எஸ்ஜே சூர்யா இயக்குனராகவும் நடித்துள்ளார்கள் என படத்தின் டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் எஸ்ஜே சூர்யா. அது இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸ் நடித்து கடைசியாக வெளிவந்த 'சந்திரமுகி 2' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' அவருக்கு வெற்றியைத் தரும் என திடமாக நம்புகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களைத் தரும் இயக்குனராக இருக்கிறார். இந்தப் படத்திலும் அதைத் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்கச் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
ஜப்பான்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - கார்த்தி, அனு இம்மானுவேல்
“குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி” படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள படம் இது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய முந்தைய படங்கள் கமர்ஷியல் ரீதியிலான படங்களா இல்லாமல் இருந்தது. அவற்றை இயக்குனர் சார்ந்த படங்கள் என்று சொல்ல வேண்டு. ஆனால், இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார்.
'ஜப்பான்' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும் போது கார்த்தி நடித்து வெளிவந்த 'சிறுத்தை' படம் போன்ற ஒரு கலகலப்பான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் இருக்கிறது. கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களில், தோற்றங்களில் கார்த்தி நடிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் தொடர்ந்திருக்கிறார்.
“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்” ஆகிய இரண்டு படங்களுக்கு இடையில்தான் இந்த வருட தீபாவளிக்கான முதன்மைப் போட்டி. இரண்டில் எந்தப் படம் முந்தப் போகிறது என்பது நவம்பர் 10ம் தேதி தெரிந்துவிடும்.
ரெய்டு
இயக்கம் - கார்த்தி
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா
அறிமுக இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா. இந்தப் படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
விக்ரம் பிரபு நடித்து கடைசியாக வெளிவந்த 'இறுகப்பற்று' படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தனி கதாநாயகனாக ஒரு இடத்தைப் பிடிக்க அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்த 'ரெய்டு' படம் அதற்கு உதவியாக இருக்குமா என்பது நாளை மறுநாள் நவம்பர் 10ம் தேதி இப்படம் வெளியான பின் ரசிகர்களே தீர்ப்பளிப்பார்கள்.
கிடா
இயக்கம் - ரா வெங்கட்
இசை - தீசன்
நடிப்பு - பூ ராமு, காளி வெங்கட்
சில சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம். மறைந்த நடிகரான பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க வணிக மயமாக இருக்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது இது மாதிரியான வாழ்வியலை சொல்லக் கூடிய படங்களும் வருவது நிறைவாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. படம் பார்த்த அனைவருமே படத்தைப் பாராட்டி படக்குழுவினருக்கு ஊக்கமூட்டினார்கள். அதே அளவு ஊக்கம் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களும் தந்தால் இம்மாதிரியான படங்களும் அதிகம் வர வாய்ப்புள்ளது. இப்படம் நவம்பர் 11ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா” ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
குறைவான படங்கள் இந்த வருட தீபாவளிக்கு வந்தாலும் அவை நிறைவான படங்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.