மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி படம் வெளிவருகிறது. இதுதான் என் கடை படம் என்று அறிவித்த உதயநிதி, இதுதான் எனது கடைசி சினிமா பேட்டி என்று நிருபர்களிடம் கூறினார்.
அவர் அளித்த பேட்டி : முதல் முறையாக ஒரு அரசியல் படத்தில் நடித்துள்ளேன். படத்தில் வடிவேலு தான் ஹீரோ. அவர் மாமன்னன், நான் வெறும் மன்னன் மட்டுமே. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் பார்த்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடிக்கும்போது, 'மாமன்னன்' எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். என் கடைசி படம் என்பதால் மாரி செல்வராஜிடம் ஒரு படம் பண்ண கேட்டேன். அவர் விக்ரம் மற்றும் தனுஷிடம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார். அவர்களிடம் நானே பேசுகிறேன் என கூறி எனக்காக அவர்கள் விட்டு கொடுத்த பின் மாமன்னன் படத்தில் நடித்தேன்.
இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் இருப்பதால் இதில் நடிக்க முதலில் பயந்தேன். ஆனால் இயக்குனர் தான் தைரியம் கொடுத்தார். இது அப்பா பையன் கதை என்றார். வடிவேலு இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு இயக்குனர் பயந்தார். எப்படி இவரை வைத்து வேலை வாங்குவது, சண்டை வருமா என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. பிறகு நான் தான் வாங்க அதெல்லாம் ஒரு பிரச்னையும் வராது என்று கூறி நடிக்க துவங்கினோம். நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும்.
கமல் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்து டெஸ்ட் லுக் எல்லாம் எடுத்தோம். முதல்வர் அழைத்து அமைச்சர் ஆக்க போறேன் படம் எதுவும் வேண்டாம் என்று சொன்னார். அந்த தகவலை முதலில் கமல் சாரிடம் தான் சொன்னேன். வருத்தப்படுவார் என நினைத்தேன். எப்போது வந்தாலும் இந்த கதை உங்களுக்கானது என்று கூறி அரசியல் பணிக்காக வாழ்த்தினார்.
மாமன்னன் படம் பிறகு நான் நடிக்க வாய்ப்பு இல்லை. முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
சமூகவலைதளங்களில் தேவர் மகன் பற்றிய சர்ச்சை குறித்து நான் என்ன சொல்றது. எப்போதோ பேசியதை வைத்துக் கொண்டு இப்போது சண்டை போடுகிறார்கள். மாரி படத்தில் விலங்குகளுக்கும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் சில பன்றிகள் என கூடவே வரும். பஹத் பாசிலின் தீவிர ரசிகன் நான். அவரின் மஹிஷிண்டே பிரதிகாரம் படத்தை தமிழில் நிமிர் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்தேன். அர்ப்பணிப்பு உள்ள ஒரு நடிகர்.
விஜய் அரசியலுக்கு வருகிறேன் என இதுவரை நேரடியாக சொல்லவில்லை. வருவதும், வராததும் அவர் விருப்பம். ஒரு நிகழ்ச்சியை வைத்து நாம் எதுவும் முடிவு செய்ய முடியாது. முதலில் அவர் அரசியலுக்கு வரவட்டும், தனது கொள்கையை சொல்லட்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். அது நம்மோடு ஒத்து போக வேண்டும். அப்போது தான் ஆதரவு தருவது பற்றியெல்லாம் பேச முடியும். இப்போது அவர் ஆரம்ப நிலையில் தான் உள்ளார்.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.