ஐய்யப்பன் பக்தி படங்கள் தற்போது அதிக அளவில் தயாராகிறது. மலையாளத்தில் வெளிவந்த மாளிகைபுரம் படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழில் தயாராகும் படம் சன்னிதானம் பி.ஓ.
சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ராஜீவ் வைத்யா இயக்குகிறார்.
படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. இயக்குனர் விக்னேஷ் சிவன் கிளாப் அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
சபரிமலை பின்னணியில் உருவாகும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.