ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
இந்தியத் திரையுலகத்தையே வியக்க வைத்த படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் வசூல் ஹிந்திப் படங்களைக் காட்டிலும் அதிகமாகப் பெற்று இப்போது வரையிலும் முதலிடத்தில் உள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக விலைக்கு வியாபாரமாகியுள்ள படம்.
ஆந்திரா, தெலங்கானாவில் சிறப்பு சலுகையாக இப்படத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறது மாநில அரசுகள். அதனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் இந்தப் படத்தின் வசூல் மிக அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், மற்ற மொழிகளில் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதற்கு அதற்கான முன்பதிவுகளே சாட்சியாக உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, வட இந்திய மாநிலங்களில் படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்கிறார்கள்.
இந்தப் படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கதை. படத்தில் தெலுங்கு நேட்டிவிட்டிதான் அதிகம் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் 'பாகுபலி 2' படத்தில் அவர்களுக்குத் தெரிந்த அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் இருந்தார்கள். மேலும் 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய படங்களை தமிழிலும் நேரடியாகப் படமாக்கியதாக படக்குழு அறிவித்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கில் மட்டுமே நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாக சமுத்திரக்கனி மட்டுமே இருக்கிறார்.
ஹிந்தி ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தெரிந்த முகங்களான ஆலியா பட், அஜய் தேவகன் ஆகியோர் இருந்தாலும் படத்திற்கான வெளியான பிரமோஷன் வீடியோக்களில் அவர்களுக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது.
இந்தியா முழுவதும் சுற்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கூட ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ராஜமவுலி ஆகியோர் மட்டுமே முழுமையாகக் கலந்து கொண்டனர். ஆலியா பட் சில இடங்களுக்கு மட்டுமே சென்றார். படத்தின் போஸ்டர்களில் கூட ராம்சரண், ஜுனியர் என்டிஆர் தவிர மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
'பாகுபலி' படங்களின் பாடல்கள் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் 'நாட்டு' பாடல் மட்டுமே ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படம் ஓடும் நேரம் 3 மணி நேரம் 2 நிமிடம். அவ்வளவு நேரம் படத்தைப் பார்க்க தனி பொறுமை வேண்டும். உருவாக்கம், அதாவது மேக்கிங் மிகப் பிரம்மாண்டமாக, டெக்னிக்கலாக மிரட்டலாக உள்ளது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி படத்தின் கருவும், கதையும் சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றியும், வசூலும் பெற முடியும் என சமீபத்தில் வந்த 'ராதேஷ்யாம்' மீண்டும் நிரூபித்துள்ளது.
நாளை இந்நேரம் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிலை என்ன என்பது நன்றாக தெரிந்துவிடும். ரசிகர்களை படம் திருப்திப்படுத்தினால் 'பாகுபலி 2' படத்தை விடவும் வசூல் சாதனை செய்யும் என்றே திரையுலகினர் சொல்கிறார்கள். நல்லதே நடக்கட்டும், உலக அளவில் ஒரு இந்திய சினிமா பேசப்படட்டும்.