மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் முழு மரியாதையுடன் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், 46, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 29ம் தேதி பெங்களூருவில் காலமானார். அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மைதானத்தின் வெளிபுறத்தில் 5 கி.மீ., தூரம் வரை ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழ் நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா, அர்ஜுன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜீனியர் என்.டி.ஆர்., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
உயர்கல்வி படிக்க சென்ற புனித் மூத்த மகள் திரிதி நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பினார். தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். புனித் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீ கன்டீரவா ஸ்டுடியோ அருகிலேயே புனித் உடல் இன்று காலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்கள் மழையிலும், பனியிலும் ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர் ராஜ்குமார். இந்த நிலையில் அவர் மறைந்த பிறகு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.