மலையாள திரையுலகில் பல வருடங்களாக மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மறைந்த நடிகர் திலகன். தமிழில் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படம் மூலமாக அறிமுகமாகி அந்த முதல் படத்திலேயே, தனது வசனங்களால், அலட்டல் இல்லாத நடிப்பால் இன்று வரை ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்டு வருபவர். அதேசமயம் மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்தபோது அவர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்தது.
திலகனின் கடைசி காலகட்டத்தில் அவர் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்பதும் கசப்பான உண்மை. சமீபத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான போது கூட திலகனின் மகள் கூறும்போது திலகனின் பிரச்சனையை தீர்த்து வைக்க உதவுவதாக கூறி ஒரு முன்னணி நடிகர் தன்னை தவறாக அணுகினார் என ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இன்னொரு பக்கம் மம்முட்டிக்கும் திலகனுக்கும் இடையே மிக பெரிய கருத்து வேறுபாடு ஒரு பகையாகவே உருவாகி இருந்தது என்றும் சொல்லப்பட்டு வந்தது.
திலகனின் மூத்த மகன் நடிகர் ஷம்மி திலகன் தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது இன்னொரு மகனான ஷோபி திலகன் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “மம்முட்டிக்கும் என் தந்தைக்கும் இடையே எந்த ஒரு பகையும் இல்லை. இதெல்லாம் வெளியே இருப்பவர்கள் இட்டுக்கட்டி உருவாக்கிய கதைதான். இவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் அன்பு இருந்தது. அன்பு இருக்கும் இடத்தில் கருத்து வேறுபாடுகளும் இருக்கும் தானே.. அப்படித்தான் இருவருக்கும் அவ்வப்போது ஏதாவது சலசலப்பு ஏற்படும். ஆனாலும் இருவரும் அன்பை விட்டுக் கொடுத்ததில்லை.
என் தந்தை தனது கடைசி நாட்களில் 33 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது பல பேர் வந்து பார்த்தார்கள். அப்போது நடிகர் மம்முட்டியும் தனது மகன் துல்கர் சல்மானுடன் மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் என் தந்தையை அவரால் சந்திக்க முடியவில்லை. அப்போது என் தந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் சென்ற மம்முட்டி, திலகன் எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவர். எப்படியாவது அவரை எங்களிடம் திருப்பிக் கொண்டு வந்து விடுங்கள் என கேட்டுக்கொண்டார். அதை நான் அருகில் இருந்தே பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.