‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
கடந்த மாதம் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகில் உள்ள பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் நடிகை ஒருவர் நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்குமாறு சித்திக் மனு தாக்கல் செய்ய, அதனை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து காவல்துறையால் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக நடிகர் சித்திக் தலைமறைவானதுடன் உச்ச நீதிமன்றத்திலும் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இந்த ஜாமின் இரண்டு வாரம் மட்டுமே செல்லுபடி ஆகும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு சித்திக் கட்டுப்பட வேண்டும் என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் போலீசாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து நடிகையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “சம்பந்தப்பட்ட நடிகை எட்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்திற்கு இப்போது 2024ல் புகார் கொடுத்தது ஏன்” என்கிற கேள்வியையும் எழுப்பினர். அதற்கு நடிகையின் தரப்பில், அந்த சமயத்தில் சித்திக் போன்ற பிரபலத்தை எதிர்த்து புகார் கொடுக்க துணிச்சல் வரவில்லை என்றும் சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து பலரும் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதால் தானும் புகார் அளிக்க முன் வந்ததாக குறிப்பிடப்பட்டது.