சமீபத்தில் கர்நாடக மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் கர்நாடக மாநில திரைத்துறையினர், விளையாட்டு துறையினரை அழைத்து பேசினார். குறிப்பாக கேஜிஎப் பட குழுவினரையும், காந்தாரா படக்குழுவினரையும் அழைத்து பாராட்டினார். இந்தச் சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ரிஷப் ஷெட்டி கூறுகையில், ‛‛பாரத பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கை நாங்கள் விவாதித்தோம். பிரதமரின் தொலைநோக்குத் தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அந்த ஊக்கம் எங்களின் மிகப்பெரிய பலம்'' என பதிவிட்டுள்ளார்.