தினமலர் விமர்சனம்
''கஜினி'' படத் தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், பரத்-நிலா ஜோடி நடித்து பல்வேறு போராட்டங்களை சந்தித்து வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கில்லாடி''.
கதைப்படி இளம் இரத்தமும், தைரியமும் நிரம்பிய ஒரு கூட்டமே தன் பின்னால் இருப்பதாக நம்பும், 'கில்லாடி' காலேஜ் ஸ்டூடண்ட் பரத், வூட்டுக்கு அடங்காத ஊருக்கு நல்ல பிள்ளையான பரத், தன் மகள் நிலாவை(அடாவடி தாய் மாமன் வின்சென்ட் அசோகன் உடனான கட்டாய திருமண நிச்சயம் பிடிக்காமல் வீட்டை விட்டு கிளம்பி) காதலித்து கடத்திவிட்டதாக தவறாக கருதும் ஊர் பெரிய மனுஷி ரோஜாவும், அவரது அடாவடி தம்பி வின்சென்ட் அசோகனும், பரத் வீட்டில் இல்லாத நேரம் அவரது வீட்டில் புகுந்து, பரத்தின் அப்பா டெல்லி கணேஷ் உள்ளிட்டோரை உருட்டி மிரட்டி பரத்தின் தங்கையை தூக்கி கொண்டு போகிறது.
இதில் வெகுண்டெழும் பரத், ரோஜா, வின்சென்ட் அசோகனிடம் தனக்கும், நிலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... தான் அவருக்கு டூ-விலரில் லிப்ட் தான் கொடுத்தேன் என நடந்ததை எடுத்து கூறியும் நம்ப மறுக்கின்றனர். கூடவே நிலாவை ஒப்படைத்துவிட்டு உன் தங்கையை பத்திரமாக மீட்டுச் செல்... எனும் பணயம் வேறு வைக்கின்றனர். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த பரத், நிலாவைத்தேடி கண்டுபிடிக்கிறார். அதன்பின் நிலாவை, ரோஜா-வின்சென்ட் அசோகனிடம் ஒப்படைத்தாரா.? அல்லது நிலாவையே காதலித்தாரா..? தங்கையை காப்பாற்றினாரா...? என இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமும், விறுவிறுப்புமாக பதில் சொல்கிறது ''கில்லாடி'' படத்தின் கில்லாடித்தனமான மீதிக்கதை!
பரத் முந்தைய படங்களை காட்டிலும் ரொம்பவே பாய்ந்து பாய்ந்து அடித்து, உதைத்து துவைத்து நடித்திருக்கிறார்.
நிலா ரொம்ப நாளைக்கு அப்புறம் திரைவானில் கவர்ச்சிகரமாக பளபளத்திருக்கிறார்.
அங்கையர் கன்னியாக ரோஜா, அதிரடியாக கர்ஜிக்கிறார், வில்லியாக ஜொலிக்கிறார். அம்மணி, க்ளைமாக்ஸில் சைலண்ட் ஆகி நல்லவர் ஆவது மட்டும் நம்பும்படியாக இல்லை!
டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன், அவிநாஷ், இளவரசு, பிரேம் உள்ளிட்டோரில், பரத்தின் அண்ணனாக வரும் பிரேம் உருக்குகிறார்.
செல் முருகனின் டாஸ்மாக், கஸ்டமர்களுக்கும், பார் உரிமையாளருக்குமான காமெடி ஹைலைட்!
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, கே.எஸ்.செல்வராஜின் ஔிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் உள்ள (இந்த காலத்திலும் பரத், ''காலேஸ் ஸ்டூடண்ட் மேல கைய வச்சா...'' என டயலாக் பேசுவது உள்ளிட்ட...) லாஜிக் மீறல்களை மறக்கடிக்க செய்து, கில்லாடியை கமர்ஷியல் கில்லாடியாக தூக்கி நிறுத்தி இருக்கின்றன என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், ''கில்லாடி'' - ''அதிரடி!''