தினமலர் விமர்சனம்
இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மானின் கதை என படப்பிடிப்பில் இருக்கும்போதே பரபரப்பை கிளப்பிய எஸ்.ஜே.சூர்யாவின் படம் தான் இசை. ஆனால் இது இளையராஜாவின் கதையும் அல்ல, ஏ.ஆர்.ரஹ்மானின் கதையும் அல்ல, எஸ்.ஜே.சூர்யாவின் இசையிலும், இயக்கத்திலும் வௌிவந்திருக்கும் அவர் பாணி இசை கதை.
கதைப்படி, தமிழ் திரையுலகையே தன் இசையில் வசியம் செய்து வைத்திருக்கும் வெற்றிச்செல்வன்-சத்யராஜின் இசை குழுவில், சில இசை கருவிகைள திறம்பட வாசிக்கும் இளைஞர் ஏ.கே.சிவா எனும் எஸ்.ஜே.சூர்யா, ஒருகட்டத்தில் வெற்றி-சத்யராஜிடமிருந்து பிரிந்து, திரையுலகில் தனித்து கொடி நாட்டுகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதில் தன் வீட்டு வாயிலில் கால் கடுக்க நின்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை எல்லாம் இழந்து எஸ்.ஜே.சூர்யாவின் வெற்றியால் வேலை வெட்டி இல்லாமல் தவிக்கிறார் சத்யராஜ்.
இந்நிலையில் இயற்கை சப்தங்களை வைத்து ஒரு இசை ஆல்பம் உருவாக்கி புகழ்பெற வேண்டும் என இயற்கை கொஞ்சும் மலைவாச ஸ்தலத்திற்கு செல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அங்கு நாயகி ஜெனி எனும் சாவித்திரியுடன் காதல் வயப்படும் எஸ்.ஜே.சூர்யா, அவரை கல்யாணம் கட்டிக்கொண்டு சென்னை திரும்புகிறார். இந்த சமயத்தில், ஏ.கே.சிவா-எஸ்.ஜே.சூர்யாவை, அவரது கார் டிரைவரில் தொடங்கி காரியதரசி வரை கடுப்பேற்றுகின்றனர். எல்லாம் வெற்றிச்செல்வன்-சத்யராஜிடம் இவர்கள் விலை போன காரணம் தான்.
எஸ்.ஜே.சூர்யாவின் இதுமாதிரி உதவியாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு சூர்யாவை மனரீதியில் பின்வாங்க செய்து தான் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறும் எண்ணத்தில் காய் நகர்த்துகிறார் தற்சமயம் வேலைவெட்டி இல்லாத வெற்றிச்செல்வன். ஒருக்கட்டத்தில் சூர்யாவின் காதல் மனைவியின் கருவையும் திட்டம்போட்டு கலைக்கும் அளவிற்கு வெற்றி வெறியில் வெற்றிச்செல்வன் களம் இறங்குகிறார். இறுதி வெற்றி சூர்யாவுக்கா.?, சத்யராஜ்க்கா..? என்பது இசை படத்தின் இழுவிசை போல் பாயும் மீதிக்கதை!
இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சிவாவாக எஸ்.ஜே.சூர்யா பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். தன் சொந்த படம், தானே இயக்கம், தானே இசை... என்பதால் அடிக்கடி குளோசப்பில் வந்து பயமுறுத்தவும் செய்கிறார். இடைவேளைக்கு பின் சத்யராஜின் கைகூலிகளால், சூர்யா படும் மன உளைச்சல் காட்சிகள், தொழிலில் இடையூறு செய்பவர்களால் நம் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவத்தை படம் பிடித்து காட்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருப்பது எஸ்.ஜே.சூர்யாவின் திறமைக்கு சான்றாக இருக்கிறது. அதேநேரம், உள்ளே குதிக்குதா குதிக்குதா என ஆரம்ப காட்சிகளில் கதாநாயகியுடன் எஸ்.ஜே.சூர்யா, இதயத்தை இடம் மாற்ற முயலும் முத்தக்காட்சிகள் இளைஞர்களை வேண்டுமானால் உசுப்பேற்றும், குடும்பத்தோடு படம் பார்க்க வந்திருப்பவர்களுக்கு குமட்டும்! எஸ்.ஜே.சூர்யா படத்தில் இதெல்லாம் சகஜம் தானே..?!
ஜெனியாக வரும் புதுமுகம் சாவித்திரி, காதல் காட்சிகளிலும் சரி, இடைவேளைக்கு அப்புறம் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக, கணவர் குழம்பும் இடங்களில் எல்லாம் தானும் குழம்பி பேதலித்து நிற்கும் காட்சிகளிலும் சரி, கூண்டில் மாட்டிய எலியாக தவித்து நடித்திருப்பது சூப்பர்!
வில்லன் வெற்றிச்செல்வன்-சத்யராஜ், ஏ.கே.சிவாவை அறிமுகம் செய்யும் இயக்குநர் அழகம் பெருமாள், பாதிரியார் தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு, குணசேகரன் உள்ளிட்டவர்களும் பலே சொல்லும் அளவிற்கு பக்காவாக நடித்திருக்கின்றனர்.
குழந்தைங்கிறது என்னில் பாதி, உன்னில் பாதி..., மச்சும் கிடையாது மாடியும் கிடையாது..., குதிக்குதா குதிக்குதா... உள்ளிட்ட வசனங்களில் திரும்பிபார்க்க வைத்துள்ள எஸ்.ஜே.சூர்யா, பாவ மன்னிப்பு கேட்க வரும் கதாநாயகியை வளைக்க தம்பி ராமைய்யா இடத்திலிருந்து கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் காட்சிகளில், தம்பி ராமைய்யா குரலிலேயே மிமிக்கிரி செய்திருந்தார் என்றால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது ஏமாற்றம்.
இதுமாதிரி, ஒருசில ஏமாற்றங்களையும், அளவுக்கு அதிகமான எஸ்.ஜே.சூர்யா பாணி விரச காட்சிகளையும் தவிர்த்துவிட்டு, சௌந்தர்ராஜனின் ஔிப்பதிவு, எஸ்.ஜே.சூர்யாவின் இசை, மதன்கார்க்கியின் பாடல் வரிகள் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளை மட்டும் மனதில் கொண்டு இசையை கண்டு களித்தோம் என்றால், இசை தமிழ் சினிமாவுக்கு புது விசை! புது திசை!! என்பது புலப்படும்!!!