தினமலர் விமர்சனம் » மறந்தேன் மன்னித்தேன்
தினமலர் விமர்சனம்
"மறந்தேன் மன்னித்தேன்" மொத்தபடமும் 1986-ல் ஆந்திராவில் உள்ள தவலேஸ்வரம் என்ற பகுதியில், ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கின் பின்புலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இசை இப்படத்தின் பெரும்பலம்!
தமிழகத்தில் இருந்து சில தலைமுறைக்கு முன் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்து அங்குள்ள கோதாவரி ஆற்றின் கரையோரம் உள்ள மீனவ கிராமத்தில் மீன்பிடித்து வாழும் ஆதிக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த லட்சுமி மஞ்சுவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஒரு படுபயங்கர மழை நாளில் ஆந்திரா - பங்காரப்பேட்டை கிராமத்தில் ஆதியின் குடிசை வீட்டு முன் திருமணம் நடந்தேறுகிறது. திருமணம் முடிந்த அடுத்த நொடி வசதியான வீட்டுப்பெண் டாப்ஸி காரில் வந்து இறங்கி, மணமகனுக்கு ஒரு பெரிய தங்க மோதிரத்தை மாட்டி விட்டு, ஆதியின் காதில் ஏதோ கிசுகிசுத்து செல்கிறார். அதேமாதிரி காஞ்சிபுரத்தில் இருந்து வரும் லட்சுமி மஞ்சுவின் முதலாளி துரைபாபு, ஒரு தங்கசங்கலியை லட்சுமிக்கு பரிசாக கொடுத்து அதை ஆதியின் கையால் போட சொல்லிவிட்டு லட்சுமி மஞ்சுவின் காதில் வில்லசிரிப்புடன் ஏதோ ஓதிவிட்டு போகிறார்.
லட்சுமி - ஆதியை சந்தேகமாக பார்க்க, ஆதி - லட்சுமியை சந்தேக கண்கொண்டு துளைக்க, அதிர்ச்சியில் உறைந்த இருவரையும் அம்போ என விட்டுவிட்டு ஊர்மக்கள் மொத்தபேரும் வெள்ள அறிவிப்பால் தப்பித்தோம், பிழைத்தோம்... என ஓடிப்போகின்றனர். மணக்கோலத்தில் வெள்ளத்தில் சிக்கும் ஆதி - லட்சுமி மஞ்சுவை காப்பாற்றி கரை சேர்க்க போராடுகிறார். கூடவே டாப்ஸியுடனான தன் காதல் கதையையும் கூறி முடிக்கின்றார். உங்களுக்காவது ஒரு காதல், என் வாழ்க்கையில் மூன்று-நான்கு ஆண்கள், அதில் ஒருவன் தான் இந்த துரைபாபு என்று குண்டைத்தூக்கி போடுகிறார் லட்சுமி மஞ்சு. லட்சுமி மஞ்சு கூறிய கதைகள் ஆதியை அதிர்ச்சிக்குள் மூழ்கடித்தனவா...? அல்லது மழை வெள்ளம் அவர்களை மூழ்கடித்தனவா...? அல்லது இரண்டிலுமே இருவரும் தப்பித்தனரா...? என்பது "மறந்தேன் மன்னித்தேன்" படத்தின் வித்தியாசமான மீதிக்கதை!
கோதாவரி ஆற்றில் மீன்களைப்பிடித்து அதை விற்று, அதில் வரும் பணத்தில் சீட்டாடுவதும், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், முதலாளியின் மகள் டாப்ஸியை திருவிழாவில் பார்ப்பதும், டாப்ஸி விழுந்து விழுந்து ஆதியை காதலிப்பதும், அதனால் டாப்ஸியின் அப்பா இவரை பழிவாங்குவதும், பழிக்கு பழியாக டாப்ஸியை, ஆதி அவரது சம்மதத்துடனேயே சூறையாடுவதுமாக ஆதி வெளுத்து வாங்கியிருக்கிறார்.
டாப்ஸி, லட்சுமி மஞ்சு, இருவருமே இரண்டு எபிசோடுகளிலும் போட்டி போட்டு நடித்து "மறந்தேன் மன்னித்தேன்" படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றனர். அதிலும் ஆதியுடனான டாப்ஸியின் அந்த படுக்கையறைகாட்சிகள் ரசிகர்களை டாப் கியரில் எகிறவைக்கும் சமாச்சாரங்கள். ஆதியின் பிளாஷ்பேக்கில் இருக்கும் சுவாரஸ்யம், லட்சுமி மஞ்சுவின் ப்ளாஷ்பேக்கில் சற்றே மிஸ் ஆவது போரடிக்கிறது.
மற்றபடி, "மறந்தேன் மன்னித்தேன்" ஆரம்பத்திலும் இறுதியிலும் மொத்தமாக இருபது நிமிடங்கள் வரும் அந்த மழை-வெள்ளக்காட்சிகளும், கோதாவரி மீனவ கிராமக்காட்சிகளும் பிரமாதம். பழனிக்குமாரின் பிரமாண்ட ஒளிப்பதிவும், இசைஞானியின் பிரமாதமான இசையும், குமார் நாகேந்திராவின் இயக்கத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் அதை மறக்கவும் மன்னிக்கவும் செய்கின்றன!
மொத்தத்தில், "மறந்தேன் மன்னித்தேன்" - "பார்க்கலாம் மன்னிக்கலாம்!!"