தினமலர் விமர்சனம் » விஸ்வரூபம்
தினமலர் விமர்சனம்
வெளிவருவதற்கு முன்பே தடை, தாமதமென்று உலகை விறுவிறுப்பாக பேச வைத்த "விஸ்வரூபம்", வெளிவந்த பின்பும் அதே உலகை வியக்கவும் வைத்திருக்கிறது! "உலக நாயகன் எனும் அடைமொழிக்கேற்ப கமல், உலக தரத்திற்கு தந்திருக்கும் உன்னதமான தமிழ்ப்படம் தான் "விஸ்வரூபம்"!
கதைப்படி கதக் நாட்டிய கலைஞரான கமல் அமெரிக்காவில் அழகிய இந்திய வம்சாளி இளம் பெண்களுக்கு கதக் கற்றுத்தருகிறார். பெண் தன்மையுடன் வாழும் கமலின் நடை, உடை, பாவனைகள் எதுவும் பிடிக்காமல், அமெரிக்கன் சிட்டிசன் எனும் பெருமையான அடையாளத்திற்காகவும், தனது உயர் கல்விக்காகவும் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் கமலை கட்டிக் கொண்டு மாரடிக்கும்(!) பூஜா குமாருக்கு, உடன் உள்ள ஒருவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்புக்கு கமல் எதிர்ப்பு காட்டக்கூடாது... என்பதற்காக அவர்(கமல்) ஏதும் காதல் குற்றங்கள் செய்கிறாரா...?! என கண்காணிக்க ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை அமர்த்துகிறார்கள் பூஜாகுமாரும் அவரது காதலரும் சேர்ந்து!
அந்த துப்பறியும் நிபுணர் மூலம் கமல் இந்து அல்ல ஒரு இஸ்லாமியர் என்பதும், அந்த துப்பறியும் நிபுணர் கொல்லப்படுவதின் மூலம், கமல் அமெரிக்க சட்டத்திட்டத்திற்கு புறம்பாக ஏதேதோ... செய்கிறார் என்பதும் தெரியவருகிறது! அப்படியென்றால் கமல் தீவிரவாதியா...? எனக்கேட்டால் அதுதான் இல்லை... அதுதான் விஸ்வரூபம் படத்தின் கதையே...
அதாகப்பட்டது, கமல் ஒரு இந்திய ரா உளவுப்பிரிவு அதிகாரி. காஷ்மீரி அப்பாவுக்கும், தமிழ் அம்மாவுக்கும் பிறந்தவர். தலிபான் தீவிரவாதி வேடத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களுக்கு போர் பயிற்சிகளை கற்றுத் தருகிறார் கமல். அவர்கள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அல்கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, அமெரிக்காவை தகர்க்க தலிபான்கள் போடும் சதி திட்டத்தை, உதவியாளர் ஆண்ட்ரியா, உயர் அதிகாரி சேகர் கபூர் உள்ளிட்டோருடன் அமெரிக்கா போய் (ஆரம்பத்தில் அமெரிக்க போலீஸ்க்கு தெரியாமலும், அதன்பின் அமெரிக்க போலீஸின் உதவியுடனும்...) முறியடிப்பது தான் "விஸ்வரூபம்" படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மொத்த கதையும்!
இந்த கற்பனை கதையை காண்போர் கண்களும், கனத்த இதயங்களும் கூட மிரளும் வகையில் மிகமிக பிரமாண்டமாக அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக படமாக்கியிருக்கும் காரணத்திற்காகவே கமலுக்கு "கங்கிராட்ஸ் சொல்லலாம்!
கதக், கலைஞர் விஸ்வநாத்தாகவும் சரி, விசாம் அகமது காஷ்மீரியாகவும் சரி, கமலால் மட்டுமே கலக்க முடியும் என்பதை "ஃபிரேம் டூ ஃபிரேம்" நிரூபித்திருக்கிறார் கலைஞானி கமல்ஹாசன். "என் மனைவிக்கு சிக்கனை பிடிக்கும், எனக்கு என் மனைவியை பிடிக்கும்..." என்னும் சாதாரண வசனங்களில் தொடங்கி, "கடவுளுக்கு நான்கு கைகள் இருந்தால் சிலுவையில் எப்படி அடிக்க முடியும்...? அதனாலதான் நாங்க கடவுளை கடல்ல தூக்கி போட்டுவிடுவோம்..." எனும் சிந்திக்க தூண்டும் கூர்மையான வசனங்கள் ஒவ்வொன்றிலும் கமலின் குசும்பும், கூர்மையான கருத்துக்களும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.
பெண் தன்மையுடன் இருக்கும் கமல் தொழுகிறேன் பேர்வழி... என சடாரென்று வில்லன்களை பந்தாடி தன் மனைவி பூஜா குமாருடன் தப்பிக்கும் இடத்தில் தொடங்கும் விறுவிறுப்பு விஸ்வரூபம் படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் பெரும் பலம். அந்த இடத்தில் ரசிகர்களின் வாய்கள், தம்மையும் அறியாமல் கமல் - கமல் தான் என முணுமுணுப்பதும், காதை பிளக்கும் விசில் சப்தமும், கைதட்டல்களால் அரங்கு அதிர்வதும் கண்கூடு.
கமல் மாதிரியே தீவிரவாதி உமராக வரும் ராகுல் போஸ், கமலின் உயர் அதிகாரி சேகர் கபூர், கமலின் மனைவி நிருபமாக வரும் பூஜாகுமார், உதவியாளர் சஸ்மிதாக வரும் ஆண்ட்ரியாவும், நாசர், சலீம்(ஜெய்தீப்) உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே!பலே!!
ஆப்கானிஸ்தான் மலை பிரதேசங்கள், அமெரிக்காவின் அழகிய நகரங்கள், வானில் சீறிப்பாயும் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், துப்பாக்கி ரகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் த்தரூபமாக நம் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக்கியிருக்கும் சானுஜான் வர்கீஸின் ஒளிப்பதிவும், குணால் ராஜனின் ஒலிப்பதிவும், சங்கர்-ஹாசன்-லாயின் இசைப்பதிவும், மதுசூதனனின் விஷூவல் எபக்ட்ஸூம், கெளதமியின் உடை அலங்காரங்களும், லால்குடி இளையராஜாவின் கலை-இயக்கமும், மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பும், விஸ்வரூபத்தின் பிரம்மாண்டங்கள் பெரும் ப்ளஸ் பாயிண்டுகள்.
இந்தப்படத்தை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்த்ததைவிட இந்துக்கள் தான் எதிர்த்திருக்க வேண்டும்... என சொல்லாமல் சொல்லும் சில காட்சிகளை விஸ்வரூபத்தில் கமல் வலிய திணித்திருப்பதும், அதை., இந்துக்கள் எதிர்க்காததும் ஏன் என்பது புரியாத புதிர்...!!
விஸ்வரூபத்தை முழுநீள் ஆக்ஷ்ன் படமாக தந்திருக்கும் கமல், ரொமான்ஸ் காட்சிகளில் வழக்கம் போல் கவனம் செலுத்தாதது கமல் ரசிகர்களை சற்றே ஏமாற்றம் கொள்ள செய்தாலும் உலகதரத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தந்திருப்பதற்காக கமலுக்கு "ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்!
மொத்தத்தில் "விஸ்வரூபம்" கமலின் "வியத்தகுசொரூபம்"! "வெற்றிரூபம்"!!--------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சிதைக்க எதிரிகள் போடும் சதித் திட்டத்தை இந்திய உளவாளி கமல் முறியடிக்கும் சாகசக் கதை.
கதக் நாட்டியக்காரராக இருக்கும்போது பெண்மையின் நளினம், எதிரிகளைக் கண்ணாலேயே ஈர்க்கும் மாய்மாலம், ஒன்றும் தெரியாத குழந்தை போல காட்சி தரும் முஸ்லிம் வேடம், அவர் யார் என்று தெரியும்போது ஏற்படும் அசுரத்தனம், உளவாளியாக மாறும்போது உண்டாகும் ஹீரோத்தனம் என்று உலக நாயகன் என்றால் சும்மாவா? மனிதர் விஸ்வரூபத்தில் தசாவதாரத்தையும் காட்டுகிறார்.
அதுவும் அவரது மனைவி, வேறு தொடர்பில் இருப்பது தனக்கு தெரியும் என்பதைக் காட்ட கண்ணை விழித்துக் கொண்டே குறட்டை விடும் அந்த ஒரு காட்சி போதுமே! க்ளாஸ்!
நடிகராக உழைத்ததைப் போலவே இயக்குநராகவும் அதே அளவு கமல் பங்காற்றியிருப்பது பளிச்சென்று தெரிகிறது. காட்சியமைப்புகள், கேமரா கோணங்கள், ஒரு கண் அசைவிலேயே சீனை நகர்த்தும் ஜாலவித்தைகள், லொக்கேஷன்கள் என்று ஒவ்வொன்றிலும் அவரது உழைப்பு உ.கை.நெ!
பூஜா குமார் யதார்த்தம், தன் கணவன் தனக்கு பொருத்தமில்லை என்று நினைத்துத் தடுமாறும்போது, பின்னர் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைப் புரிந்து கொண்டு, மிரண்டு திரும்பும்போது சரியான பேலன்ஸ்.
ஆண்ட்ரியா படம் முழுக்க சும்மா வருகிறார். கதக் நடனத்தில் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். தலைவர், ஒரு கிஸ்ஸாவது அடித்திருக்கலாம்!
முல்லா உமராக வரும் ராகுல் போஸ் மனதில் பதிகிறார். டப்பாவில் இருந்து கண்ணைச் சுத்தம் செய்து அணிந்து, தொண்டையின் அடி ஆழக் குரலில் பேசும்போதே ஒரு அச்சம் ஏற்படுகிறது பலே.
ஆப்கானிஸ்தானில் டாக்டராக ஆசைப்படும் சிறுவன், அதைத் தடுக்கும் தந்தை சும்மா கையை வைத்து சுடுவது போல பாவனை செய்ய, அந்த டிஷ்யூம் ஒவ்வொருவருக்காகத் தொற்றிக் கொள்ளும் காட்சியும், அந்தச் சிறுவனை ஊஞ்சலாட வைக்க கமல் முயல, அவன் நகர்ந்துவிட, மறுநாள் தற்கொலை வெடிகுண்டாக மாறப்போகும் இளைஞன் குழந்தைமாதிரி ஊஞ்சல் ஆடுவதும் கவிதை.
படம் முழுக்க சீரியஸ்தனத்தையும் தாண்டி மெலிதாக ஆக்கிரமிக்கும் புன்முறுவல் தரும் சுவையை கையாண்டிருக்கும் நேர்த்தி கமல்ஹாசனைத் தவிர யாருக்கும் வராது. அமெரிக்க ஜால்ராவைக் குறைத்திருக்கலாம்.
அம்மாஞ்சி மாதிரி இருக்கும் கமல், கை கட்டை அவிழ்த்தவுடன் தொழுகையை முடித்துவிட்டு, சிங்கமாய்ச் சீறிப்பாய்ந்து எதிரிகளைப் பந்தாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
கரகரவென கழுத்து அறுபடும் காட்சி, பாதி உடல் மட்டும் துடிக்கத் துடிக்க வந்து விழும் காட்சி, கை துண்டாகும் காட்சி என்று சில நிழல்கள் மனத்தை கூறுபோடுகின்றன.
சானு வர்கீஸின் ஒளிப்பதிவு மெய்மறக்க வைக்கிறது. அமெரிக்காவாகட்டும், ஆப்கானிஸ்தானத்து செட்டாகட்டும் நிஜமாகவே எதிரில் அது இருப்பது போல் காட்டியிருப்பதற்கு கைதட்டலாம்.
“உன்னை காணாத’ கதக் பாடலில் கமல் காட்டும் பாவத்தையும், நளினத்தையும் வேறு எந்த நடிகராலும் சத்தியமாகச் செய்ய முடியாது. அந்தக் காட்சியமைப்பும் கொள்ளை கொள்கிறது. இசை சங்கர் எசான் லாய். ரீரெக்கார்டிங்கில் காட்சிகளுடன் போட்டி போட முடியாமல் திணறுவது தெரிகிறது.
கடைசிக் காட்சியை காணும்போது கமல் பார்ட் - 2 வை முக்கால்வாசி எடுத்து முடித்து பாக்கெட்டில் வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது இந்தியாவில் நடக்கப் போவதால் யாரும் கவலைப்பட வேண்டாம், கமல் இங்கேயேதான் இருக்கப் போகிறார்.
விஸ்வரூபம் - தமிழில் ஓர் உலகப் படம்!
ஆஹா: கமல் கமல் கமல்
ஹிஹி: அங்கங்கே குழப்பும் காட்சியமைப்புகள்
குமுதம் ரேட்டிங்: நன்று