தினமலர் விமர்சனம் » அம்புலி
தினமலர் விமர்சனம்
ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".
ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!
அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!
மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!
திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!
கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!
ஆக மொத்தத்தில்
"அம்புலி", தமிழ் சினிமாவின்
"டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!
------------------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
பூமாடத்திபுரம் கிராமத்து மக்களை வருடக்கணக்கில் மிரட்டும் துர்க்கனவு அம்புலி. பக்கத்து சோளக்காட்டுக்கு இரவில் செல்பவர்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிடும் அம்புலி யார் என்பதற்கு அவர்களிடம் விடையும் இல்லை.
அதனுடன் மோத துணிவும் இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டுவிக்கும் அம்புலியை வேட்டையாட இரு கல்லூரி இளைஞர்கள் துணிகிறார்கள். சீசன் முடிந்த இந்த த்ரில்லர் கதையை 3டி தொழில்நுட்பத்துடன் விறுவிறு சம்பவங்களால் தடதட ரேஸ் ஆக்கியிருப்பதுதான் அம்புலியைக் கவனிக்க வைக்கிறது.
அம்புலியின் ஆதி அந்தத்தைக் கிளறப் புறப்படும் அஜய், ஸ்ரீஜித், சனம், ஜோதிஷா ஆகியோரிடம் புதுமுகங்களுக்கான தடுமாற்றம் இல்லை. கிராமத்தினரைப் பகுத்தறிவு பேசி உசுப்பும் ஜெகன், அம்புலியின் கதை தெரிந்த மருத்துவச்சி கலைராணி, பீதியை மறக்க தண்ணியடிக்கும் கல்லூரி வாட்ச்மேன் தம்பி ராமையா போன்றோர் அம்புலிக்கு வெயிட் சேர்க்கிறார்கள்.
சோளக்காட்டைக் காவல் காக்கும் செங்கோடனாக பார்த்திபன் சில காட்சிகளில் வந்தாலும் நச். அம்புலியின் ரிஷிமூலத்தில் வருகிற அப்பாவி அம்மா கேரக்டருக்கு உமா ரியாஸ் பொருத்தம். உடலை வைத்தே காமெடி பண்ணும் கோகுல்நாத்தை அம்புலி கேரக்டருக்கு பயன்படுத்தியிருப்பது பாராட்ட வைக்கும் புத்திசாலித்தனம்.
விஞ்ஞானத்தின் கோர விளையாட்டை வைத்த அம்புலியின் மர்மம் தீர்க்கப்படுவதில் லாஜிக் சொதப்பினாலும் உறுத்தவில்லை. ஆளரவமற்ற கல்லூரியும் இருளில் மயங்கி நிற்கும் சோளக்காடும்தான் படத்தின் நிஜ ஹீரோக்கள். கலை இயக்குநர் ரெமியனுக்கு அழுத்தமான ஒரு சபாஷ். சிரத்தையான கோணங்களால் ஒளிப்பதிவாளர் சதீஷ் கவனிக்கத்தகுந்த டெக்னீஷியன்களின் பட்டியலில் இடம்பிடிக்கிறார். வெங்கட் பிரபு, சங்கர், சாம்ஸ், சதீஷ், மெர்வின் சாலமன் என ஒரு டீமே இசைக்காகக் கைகோர்த்து அசத்தியிருக்கிறது.
இரண்டாம் பார்ட் எடுக்க வசதியாக அம்புலி தப்பிக்கட்டும், தப்பில்லை. ஒரு விஞ்ஞான அதிசயமான அம்புலியை இவ்வளவு அஜாக்கிரதையாகவா அரசு வைத்திருக்கும்?
அம்புலியில் திருஷ்டிப் பொட்டுகள் அதிகம். ஆனாலும் அதன் மிரட்டல் குறையாததுதான் ஆச்சரியம். இரட்டை இயக்குநர்களான ஹரிசங்கர், ஹரீஷ் நாராயணன் பாராட்டுக்குரியவர்கள்!
அம்புலி - மர்ம நாவல் ரசிகர்களுக்கு ஒரு பரிசு.
குமுதம் ரேட்டிங் - ஓகே