தினமலர் விமர்சனம் » ஆடு புலி
தினமலர் விமர்சனம்
பெரிய இடத்து பெண்ணுக்கும், அந்த பெரிய இடத்துக்கு பல வகையிலும் தொல்லை தரும் பாசமும், பண்பும் நிறைந்த நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும் ஏற்படும் வழக்கமான காதல் கத்திரிக்காய் சமாச்சாரங்கள் தான். ஆனால் அந்த வழக்கமான கதையை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பது தான் ஆடுபுலி படத்தின் பலம்!
கதைப்படி ஹீரோ ஆதிக்கு, ஹீரோயின் பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் கிரீன் சிக்னல் காட்ட ஆதியின் குடும்பமும் கிரீன் சிக்னலே காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது. அது முதல்வர் ஆகத்துடிக்கும் அமைச்சர் ஒருவரிடமிருந்து... என்பது தான் ஆச்சர்யம்! ஆதி-பூர்ணாவின் காதலுக்கு அமைச்சரிடமிருந்து எதிர்ப்பு இடைஞ்சல் வரக்காரணம் என்ன...? அதை மீறி ஆதி-பூர்ணாவை கரம்பிடித்தாரா...? இல்லையா என்பதுதான் "ஆடுபுலி" படத்தின் மொத்த கதையும்!
ஆதி, இதயக்கனி எனும் எம்.ஜி.ஆர்., பட டைட்டிலேயே தன் பாத்திரப் பெயராக கொண்டு படம் முழுக்க அவர் பாணியிலேயே புகுந்து விளையாடி இருக்கிறார். அவரது முந்தைய படங்களான மிருகம், ஈரம் அய்யனார் போன்ற படங்களை காட்டிலும் இதில் மேலும் ஒரு முன்னேற்றம் தெரிகிறது ஆதியின் நடிப்பில்... சபாஷ்!
அதேபோல் பூர்ணாவும் தன் முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் தேறியிருக்கிறார். பிரபு, ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்களும் படத்தில் இருப்பது சிறப்பு! ஆனால் இவர்கள் எல்லோரையும் விட அகிம்சையும், அடாவடியும் ஒருங்கே கொண்டர் மினிஸ்டர் தில்லை நாயகனாக வரும் மாஜி நாயகர் சுரேஷூம், அவரது உதவியாளர் மயில்சாமியும் பண்ணும் கலாட்டா தியேட்டரை அதிரவைக்கிறது.
சுந்தர்.சி.பாபுவின் இசையும், ராஜவேலின் ஒளிப்பதிவும் விஜய்பிரகாஷின் எழுத்து இயக்கத்தில் "ஆடுபுலி" யை "வேட்டை புலி" ஆக்கியிருக்கிறது!
மொத்தத்தில் "ஆடுபுலி-வசூல் புலி!"