ஒத்த ஓட்டு முத்தையா,Otha votu muthaiya

ஒத்த ஓட்டு முத்தையா - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : சினி கிராப்ட் புரொடக்ஷன்
இயக்கம் : சாய் ராஜகோபால்
நடிகர்கள் : கவுண்டமணி, யோகிபாபு, ரவிமரியா, ஓ.எ.கேசுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக் காளை, கூல் சுரேஷ், சென்ட்ராயன்.
இசை : சித்தார்த் விபின்
வெளியான தேதி : 14.02.2025
நேரம் : 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் : 2.25/5

கதை சுருக்கம்
அரசியல்வாதியான கவுண்டமணி தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவரின் சகோதரிகள் தங்களுக்கு பிடித்த மூன்று பேரை ஒரே குடும்பம் என சொல்லி பெண் கேட்க வர சொல்கின்றனர். அதே வேளையில் பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்து, சொத்தை அபகரிப்பதற்காக திருட்டுக் குடும்பமான சிங்கமுத்துவும் பெண் கேட்க வருகிறார். இதனிடையே இடைத்தேர்தல் வருகிறது. தேர்தலில் கட்சி சார்பில் நிற்க அவருக்கு சீட் கொடுக்காததால் சுயேட்சையாக கவுண்டமணி போட்டியிடுகிறார். கட்சி சார்பில் யோகி பாபு வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதோடு ஆளுங்கட்சி அமைச்சரான ஓ.ஏ.கே. சுந்தர், தன் அரசியல் எதிரி கவுண்டமணியை தோற்கடிக்க ரவி மரியாவை வேட்பாளராக நிறுத்துகிறார். பரபரப்பாக நடந்த இந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார்? தங்கைகளுக்கு தான் நினைத்தபடி திருமணத்தை கவுண்டமணி நடத்தினாரா? என்பதே படத்தில் மீதி கதை.

படம் எப்படி இருக்கு
நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக, அரசியல் வாதியாக களமிறங்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு தான் அவர் இந்த படத்தில் மட்டுமல்ல, வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருப்பது அவருக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் நல்லது என்ன தெரிகிறது.

எதிர்க்கட்சி வேட்பாளராக தேர்தலில் நின்று ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கியதால் ஒத்த ஓட்டு முத்தையா என்ற அரசியல் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். பழைய படி பஞ்ச் வசனங்கள் பேசினாலும் எடுபடவில்லை. இந்த வயதில் அவருக்கு ஆக்ஷன் காட்சி வேற வைத்து இயக்குனர் கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை காமெடி நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்கு வழியில்லை. பல காமெடி படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குனராக இருந்தும் படத்தில் காமெடி எடுபடாமல் போனது பெரிய ஏமாற்றம். ஓரிரு காமெடிகளும் கடியாக இருக்கிறது. அதோடு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அத்தனை அரசியல் நிகழ்வுகளையும் பட்டியலிட்டு காட்சியாக வைத்துள்ளார் இயக்குனர். திராவிட கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் வரை கொண்டு வந்து விட்டார்.

காத்தவராயன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் பின்னணி இசை அமைத்துள்ள சித்தார்த் விபின் பொறுமையை சோதிக்கிறார். பாடல்களும் ரொம்ப சுமார்.

பிளஸ் & மைனஸ்
பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு தமிழக அரசியல் கள சம்பவங்களை பங்கமாக கலாய்த்து இருப்பது ஓரளவு ரசிக்க முடிந்தாலும், திரைக்கதையும் காட்சிகளும் பொறுமையை சோதிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் துண்டு துண்டாக இருக்கிறது. படத்தில் எடிட்டிங் மற்றும் இசை செம சொதப்பல்.

ஒத்த ஓட்டு முத்தையா - டெபாசிட் இல்லை

 

ஒத்த ஓட்டு முத்தையா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஒத்த ஓட்டு முத்தையா

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓