தங்கமணி (மலையாளம்),Thankamani

தங்கமணி (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் இபார் மீடியா
இயக்கம் : ரதீஸ் ரகுநந்தன்
இசை : வில்லியம் பிரான்சிஸ்
நடிப்பு : திலீப், பிரணிதா சுபாஷ், நீட்டா பிள்ளை, மனோஜ் கே.ஜெயன், ஜான் விஜய், சம்பத் ராம்
வெளியான தேதி : 7 மார்ச் 2024
ஓடும் நேரம் : 2 மணிநேரம் 32 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

ஒரு அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். இதன் பின்னால் சீரியல் கில்லர் இருப்பானோ என்கிற கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்க துவங்குகிறார் போலீஸ் அதிகாரி பிரணி சுபாஷ். அவர் யூகித்தபடியே மூன்றாவது நபரையும் கொலை செய்கிறார் கொலைகாரன் (திலீப்). ஆனால் தப்பி ஓடும்போது பிரணிதாவிடம் பிடிபடுகிறார் திலீப்.

விசாரணையில் அரபு நாட்டில் வேலை பார்த்துவிட்டு விடுமுறைக்காக தங்கமணி என்கிற சொந்த கிராமத்திற்கு வரும் திலீப், எதிர்பாராத விதமாக நண்பர்கள் மூலமாக சில அதிர்ச்சி நிகழ்வுகளை எதிர்கொள்கிறார், சரியாக ஊருக்கு கிளம்பும் சமயத்தில் அந்த ஊர் பேருந்து விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட, அந்த கோபத்தில் இரவோடு இரவாக அந்த ஊரையே போலீஸ் கும்பல் சின்னாபின்னம் ஆக்குகிறது.

இதில் திலீப்பும் சிக்கிக்கொள்ள, அவரது கண் முன்னே மனைவி போலீசாருக்கு இரையாகிறார். செய்யாத தவறுக்காக சிறை செல்லும் திலீப் விடுதலையாகி வெளிவந்து தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை வேட்டையாடுகிறார். தற்போது போலீஸில் பிடிபட்ட நிலையில் அவரால் தப்பிக்க முடிந்ததா? மீதி இருவரை அவரால் நினைத்தபடி வேட்டையாட முடிந்ததா என்பது மீதிக்கதை.

எண்பதுகளில் இருக்கும் இளமை கெட்டப், வயதான தோற்றம் என இரண்டு விதமான காலகட்டத்திற்கும் தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளார் திலீப். குறிப்பாக போலீஸாரின் சித்திரவதைக்கு ஆளாகும் காட்சிகளில் நடிப்பில் அவ்வளவு எதார்த்தம். கிட்டத்தட்ட அந்த 20 நிமிட காட்சிகளில் 'போதும் அவரை விடுங்கடா டேய்' என்று நம்மையே கெஞ்ச வைக்கும் அளவிற்கு பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

போலீஸ் அதிகாரியாக பிரணிதா சுபாஷ். கொலைகாரனை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறேன் என கெத்து காட்டும்போது ஆஹா என ஆச்சரியப்பட வைப்பவர் பின்னர் திலீப்பின் சோகக்கதை கேட்டு கண்ணீர் விடும்போது சராசரி பெண்ணாக மாறிவிடுகிறார்.

இன்னொரு கதாநாயகியாக திலீப்பின் மனைவியாக நடித்திருக்கும் நீட்டா பிள்ளை நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. போலீஸாரின் அடக்குமுறைக்கு ஆளாகும் காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்.

கெட்ட போலீஸ் அதிகாரிகளாக ஜான் விஜய் மற்றும் சம்பத் ராம் கச்சிதமான தேர்வு. இவர்கள் அப்பாவிகள் மீது ஏவி விடும் அடக்குமுறைகளை பார்க்கும்போது நாம் கேள்விப்பட்ட பல உண்மைச் சம்பவங்களில் போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்களோ என்கிற எண்ணம் நமக்கு இயல்பாகவே ஏற்படுகிறது.

நீண்டநாளைக்கு பிறகு மனோஜ் கே.ஜெயன்.. தங்கமணியின் மொத்த பிரச்சனைக்கு காரணமான வழக்கமான டிபிக்கல் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். சாதாரணமாக முடிய வேண்டிய பிரச்னையை தனது கோபத்தால் ஒரு ஊரையே அழிக்கும் பிரச்னையாக மாற்றும் கதாபாத்திரத்தில் சுதேவ் நாயர் மிகப் பொருத்தமான தேர்வு.

தங்கமணி கிராமத்தை மட்டுமல்ல அந்த கிராமத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தனது கேமரா கண்களால் சுருட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பிள்ளை. இசையமைப்பாளர் வில்லியம் பிரான்ஸிசும் தன் பங்கிற்கு விறுவிறுப்பு கூட்ட முயற்சித்துள்ளார்.

அப்பாவி இளைஞனுக்கு அநியாயம் நிகழ்த்தப்பட்டு அதற்காக காலம் கடந்து பழி வாங்குவது என்கிற 30 வருடங்களுக்கு முன்பே 'ஒரு கைதியின் டைரி' போல டெம்ப்ளேட் ஆக இருந்த கதை தான் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றாலும் என்ன தைரியத்தில் இதை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

இது போன்ற படங்களில் ஹீரோ வில்லன்களை எல்லாம் எப்படி வித்தியாசமான முறையில் போலீஸுக்கு தண்ணி காட்டும் விதமாக கொலை செய்கிறார் என்பது தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கும். ஆனால் இதில் எல்லாமே ரொம்பவே சாதாரணமாக இருக்கின்றன. இயக்குனர் ரதீஷ் ரகுநந்தனுக்கு உண்மை சம்பவத்தை படமாக்க வேண்டும் என்கிற நோக்கமும் ஆர்வமும் இருந்திருக்கிறதே தவிர அதை ரசிகர்களுக்கு சரியான முறையில் கடத்துகின்ற வித்தை தெரியவில்லை என்றே சொல்லலாம்.

தங்கமணி : கவரிங்

 

பட குழுவினர்

தங்கமணி (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓