பிரம்மயுகம் (மலையாளம்),Bramayugam

பிரம்மயுகம் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் & ஒய் நாட் ஸ்டுடியோஸ்
இயக்கம் : ராகுல் சதாசிவன்
இசை : கிறிஸ்டோ சேவியர்
நடிப்பு : மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், மணிகண்ட ஆச்சாரி
வெளியான தேதி : 15 பிப்ரவரி 2024
நேரம் : 2 மணி 19 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

17ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை இது

பாட்டு பாடும் திறமை கொண்ட பாணன் (அர்ஜுன் அசோகன்) தனது நண்பனுடன் காட்டுக்குள் செல்லும்போது யட்சி(மோகினி)யின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயலும்போது, பாதை தவறி அந்த வனத்திற்குள் ஒதுக்குப்புறமாக இருக்கும் கொடுமோன் போட்டி (மம்முட்டி) என்கிற தம்புரானின் பழைய காலத்து வீட்டில் தஞ்சம் அடைகிறான். அவரது வீட்டில் இருக்கும் இன்னொரு நபர் சமையல்காரன் போட்டி (சித்தார்த் பரதன்).

பெரியவரான கொடுமுன் போட்டி ஆரம்பத்தில் ஒரு விருந்தாளியை போல பாணனை கவனித்துக் கொண்டாலும் அதன் பிறகு தாய விளையாட்டின் மூலம் அவரை தனது இருப்பிடத்தை விட்டு செல்ல முடியாதபடி அடிமையாக மாற்றுகிறார். போகப்போக அவரின் சுயரூபம் பாணனுக்கு தெரிய வந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். இதற்கு சமையல்காரன் போட்டி உதவி செய்கிறான். இதனால் கடும் கோபம் கொள்கிறார் மாந்திரீக வித்தைகள் தெரிந்த கொடுமோன் போட்டி. அவரிடம் இருந்து இவர்கள் இருவரும் தப்பித்தார்களா ? அல்லது அவரது மாந்திரீக வித்தைகளுக்கு பலியானார்களா என்பது மீதிக்கதை.

சினிமா நாள் நாளுக்கு நாள் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் மீண்டும் ரசிகர்களை 50 வருடம் பின்னோக்கி அழைத்துச் சென்று அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அதேபோன்ற ஒரு படத்தை அதுவும் கருப்பு வெள்ளையில் காட்சிக்கு வைத்துள்ளார்கள் என்றால் ரசிகர்களின் ரசனை மீது நடிகர் மம்முட்டியும், இயக்குனர் ராகுல் சதாசிவனும் மற்றும் தயாரிப்பாளர்களும் வைத்துள்ள நம்பிக்கையையும் இந்த துணிச்சலான முயற்சியையும் முதலில் பாராட்ட வேண்டும்.

அதேசமயம் இதுபோன்ற படங்கள் 1970களுக்கு முன் மலையாளத்தில் நிறைய வெளியாகி இருக்கின்றன. இன்றைய ரசிகர்கள் யாருமே இதுபோன்ற படங்களை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அதேபோல வெளியில் சொல்லப்படுவது போல இந்த படம் ஹாரர் பிரிவை சேர்ந்ததும் அல்ல.. மாந்திரீகம் என்கிற மாய வித்தையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

படத்தில் மொத்தமே ஐந்தே நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் மணிகண்ட ஆச்சாரியும் யட்சியாக நடித்துள்ள பெண்ணும் ஆரம்பக் காட்சியிலேயே வெளியேறிவிட, மீதி திரைப்படம் முழுவதுமே மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் இந்த மூவரை மட்டுமே சுற்றி சுழல்கிறது.

இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுடன் இதற்காக தனது தோற்றத்தையே முற்றிலும் மாற்றிக்கொண்டு கொடுமோன் போட்டி என்கிற அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளார் மம்முட்டி. எப்போது கோபப்படுவார், எப்போது சிரிப்பார் என அங்கு இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமல்ல, படம் பார்க்கும் நம்மையும் கூட பெரும்பாலும் பதட்டத்திலேயே வைத்திருக்கும் விதமாக அற்புதமான வில்லத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் மம்முட்டி.

அர்ஜுன் அசோகன் இதற்கு முன் வெளியான ரோமாஞ்சம் படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்புக்கு சொந்தக்காரராக அறியப்பட்டார். இந்த படத்தில் இன்னும் ஒரு படி மேலாக சென்று அந்த பாணன் கதாபாத்திரமாகவே மாறி கலவையான உணர்வுகளை மிகச்சரியாக பிரதிபலித்துள்ளார்.

இதுநாள் வரை இயக்குனராகவே இருந்த சித்தார்த் பரதன், சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் ஒரு முழு நேர நடிகராகவே மாறியுள்ளார். இந்த முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் விதமாக ஒரு அடிமை சமையற்காரன் கதாபாத்திரத்தை நம் கண் முன் அழகாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

படத்தில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு ஒரு பங்கு என்றால் கலை இயக்குனரின் பங்கு அதைவிட இரண்டு பங்கு அதிகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த பழங்காலத்து சிறிய அரண்மனை போன்ற வீட்டை பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள். அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் ஆகியோருடன் நாமும் சேர்ந்து அந்த வீட்டில் மாட்டிக்கொண்டது போன்று ஒரு உணர்வை படம் முடியும் வரை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் ராகுல் சதாசிவன்

இன்றைய இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ள கடினமான 17 ஆம் நூற்றாண்டு வாழ்க்கை முறை, அதை விறுவிறுப்பாக சொல்ல முடியாமல் மெதுவாக நகரும் கதை, குறிப்பாக இது ஒரு கலை படைப்பு என்கிற முத்திரை இவை அனைத்துமே புதிய முயற்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நிறைவு தரலாம்.. என்னதான் இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் என இரண்டு மணி நேரம் பொறுமையாக அமர்ந்து படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ஒருவேளை இந்த படம் பிடிக்கலாம். அதே சமயம் மம்முட்டி நடித்திருப்பதால் இதுபோன்ற கதையிலும் ஏதாவது கமர்சியல் அம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றமே..

பிரம்மயுகம் : கட்டுச்சோறு

 

பட குழுவினர்

பிரம்மயுகம் (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

மம்மூட்டி

மலையாள திரையுலகினர் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுவர் மம்மூட்டி, 1951-ம் ஆண்டு செப்., 7ம் தேதி, கோட்டயம் அருகே உள்ள வைகோமில் முகமது குட்டியாக பிறந்தவர். சினிமாவுக்காக மம்மூட்டி என பெயரை மாற்றிக்கொண்டார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சல்பாத் என்ற மனைவியும், சுருமி, துல்கர் சல்மான் என்ற மகனும் உள்ளார். தற்போது இவரது மகனான துல்கர் சல்மானும் நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

மேலும் விமர்சனம் ↓