வாலாட்டி (மலையாளம்),Valatty
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ப்ரைடே பிலிம் ஹவுஸ்
இயக்கம் : தேவன்
இசை : வருண் சுனில்
நடிகர்கள் : விஜய்பாபு, தேவ் மோகன், மஹிமா நம்பியார், ரோகிணி, சுரேஷ் மற்றும் சில திறமையான நாய்கள்
வெளியான தேதி : 21 ஜூலை 2023
நேரம் : 1 மணி 53 நிமிடங்கள்
ரேட்டிங் : 3.5/5

பொதுவாக இந்திய சினிமாவில் விலங்குகள், குறிப்பாக நாய், யானை, குரங்கு போன்றவை சில படங்களில் கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரங்களாக மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன. முழுக்க முழுக்க விலங்குகளை மையப்படுத்தி, அவற்றின் வாழக்கையை சொல்லும் விதமாக வெளியான படங்கள் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். வெளிநாட்டில் உருவான இதுபோன்ற படங்களை இங்கே டப்பிங் மொழியில் மட்டுமே பார்த்து ரசித்திருப்போம். அந்த வகையில் மலையாளத்தில் புது முயற்சியாக விலங்குகளை மையப்படுத்தி, குறிப்பாக இரண்டு நாய்களின் காதல் கதையை அழகாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த வாலாட்டி.

விஜய்பாபு, மஹிமா நம்பியார் எதிரெதிர் வீடுகளில் வசிப்பவர்கள். கிறிஸ்துவரான விஜய்பாபு தனது வீட்டில் செல்லப்பிராணியாக டோமி என்கிற நாயை வளர்க்கிறார். இந்து குடும்பத்தைச் சேர்ந்த மஹிமா நம்பியார் அமுலு என்கிற பெண் நாயை செல்லமாக வளர்க்கிறார். இந்த இரண்டு நாய்களும் நெருங்கி பழகுகின்றன. ஆனால் மஹிமாவின் தந்தைக்கு இது பிடிக்காததால் விஜய்பாபுவிடம் அவரது டோமியை கண்டித்து வைக்கும்படி கூறுகிறார். இதனால் காதலுக்கு தடை ஏற்பட, டோமியின் நண்பனான சேவலின் யோசனைப்படி காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு நள்ளிரவில் வெளியேறுகின்றனர்.

அமுலு வேறு இந்த சமயத்தில் கர்ப்பமாக இருக்கிறது. சாலையோரம் வண்டிக்கடை நடத்தும் ரோகிணியிடம் இருவரும் தஞ்சம் அடைவதுடன் அவர் வளர்த்து வரும் ஹரிதாஸ் என்கிற நாயின் நட்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் நாய்களை வைத்து ஆராய்ச்சி செய்து புதுப்புது வகைகளை இனவிருத்தி செய்து அவற்றை விற்பனை செய்து வரும் சுரேஷ் மற்றும் அவரது மகனிடம் எதிர்பாராத விதமாக சிக்குகிறது அமுலு.

ஒரு பக்கம் அமுலுவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஹரிதாஸுடன் சேர்ந்து தீவிரமாக தேடுகிறது டோமி. இன்னொரு பக்கம் நாய்களை காணாமல் இரு குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்கின்றனர். டோமி அமுலுவை காப்பாற்றியதா ? அமுலு குட்டிகளை பிரசவித்ததா ? இருவரும் தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்களா என்பது மீதிக்கதை.

நாய்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்ததே ஒரு துணிச்சல் என்றால் அதை ஒரு அழகிய காதல் கதையாக எடுத்திருக்கும் யோசனைக்காக தயாரிப்பாளர் விஜய்பாபுவையும், இயக்குனர் தேவனையும் முதலில் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக நாய்களை காட்சிக்கு ஏற்ப நடிக்க வைத்து அவற்றின் முகத்தில் காட்சிக்கு தேவையான கோபம், காதல், நட்பு என கலவையான உணர்ச்சிகளை கொண்டு வந்துள்ளதுடன் பேசும் வசனங்களுக்கு ஏற்ப அவற்றின் உதட்டசைவும் கிட்டத்தட்ட பொருந்தும் அளவிற்கு காட்சிகளை உயிரோட்டமாக உருவாக்கி நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

நாயகனான டோனி, நாயகியான அமுலு, நண்பன் ஹரிதாஸ், எதிரியாக இருந்து நண்பனாக மாறும் புரூனோ என இந்த நான்கு நாய்களுமே மனிதர்களுக்கு சவால் விடும் வகையில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளன. இதற்காக, இதன் பின்னணியில் கடுமையாக உழைத்துள்ள நாய் பயிற்சியாளர்களை நிச்சயமாக பாராட்டிய ஆக வேண்டும்.

மற்றபடி கதையின் மனிதர்களாக நடித்துள்ள விஜய் பாபு, மகிமா நம்பியார், தேவ் மோகன் ஆகியோருக்கு தங்களது வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் பாசத்தை மட்டுமே வெளிப்படுத்த வேண்டிய அளவில் நடிப்பதற்கு சிறிய அவகாசமே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ரோகிணி, நாய்களின் மீது காட்டும் பாசமும் வாஞ்சையும் அவற்றின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் விதமும் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தனது நடிப்பால் மிகவும் அழகாக்கியுள்ளார்.

பல இடங்களில் இசையமைப்பாளர் வருண் சுனிலின் பின்னணி இசை, நாய்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை உயிரோட்டமாக மாற்றுவதுடன் நெகிழவும் வைக்கிறது. ஒளிப்பதிவாளர் விஷ்ணு பனிக்கர் நாய்களிடமிருந்து துல்லியமான உணர்வுகளையும் முக அசைவுகளையும் அற்புதமாக படமாக்கி உள்ளார்.

நாய்களின் காதலும் நட்பும் தான் கதை என்றாலும் அவற்றிலும் எதிர்பாராத பிரச்சினைகள், திடீர் திருப்பங்கள் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் இணைத்துள்ளார் இயக்குனர் தேவன். குழந்தைகளை மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவரையுமே இந்த வாலாட்டி நிச்சயமாக தன் பக்கம் ஈர்த்து விடும். நம்ம ஊரில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற புதிய முயற்சிகளுக்கு நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

வாலாட்டி : நட்பும் நன்றியும்

 

பட குழுவினர்

வாலாட்டி (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓