டக்கர் (2023),Takkar (2023)
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கார்த்திக் ஜி கிரிஷ்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - சித்தார்த், திவ்யான்ஷா, யோகிபாபு
வெளியான தேதி - 9 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

கொரானோ காரணமாக சில பல படங்களின் வெளியீடு தள்ளிப் போனது. ஓரிரு வருடங்கள் தள்ளிப் போனால் பரவாயில்லை. ஐந்தாறு வருடங்கள் தள்ளிப் போனால் அந்தப் படம் 'அவுட்டேட்டட்' படமாகி விடுகிறது. மேலும், ஒரு படத்தைப் பார்க்கும் போது அதே போன்றதொரு முந்தைய படங்களின் ஞாபகமும் வரக் கூடாது. இந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்தி, தமன்னா நடித்த 'பையா' படத்தின் ஞாபகம் வந்து ஒப்பிட வைக்கிறது.


காரில் செல்லும் கதாநாயகன், கதாநாயகி அவர்களைத் துரத்தும் வில்லன் கூட்டம். இதுதான் 'பையா' படத்தின் ஒரு வரிக் கதை, அதே ஒரு வரிக் கதைதான் இந்த 'டக்கர்'.

பணக்காரனாக வாழ வேண்டும் என்பது சித்தார்த்தின் வாழ்க்கை லட்சியம். அதற்காக ஊரிலிருந்து கிளம்பி சென்னை வந்து சில பல வேலைகளைச் செய்கிறார். தற்கொலை செய்ய முயன்று தோல்வியுற்று ரவுடிகளிடம் அடி வாங்கி சாகலாம் எனச் செல்கிறார். சென்ற இடத்தில் வேறொன்று நடக்க அங்கிருக்கும் ஒரு காரை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்கிறார். அந்த காரில் ரவுடிகளால் கடத்தப்பட்ட கதாநாயகி திவ்யான்ஷா இருக்கிறார். அப்பாவின் வற்புறுத்தலால் பிடிக்காத ஒருவரை மணக்க வேண்டிய சூழ்நிலையில் திவ்யான்ஷா இருக்க, அவரது யோசனைப்படி சித்தார்த்தும், திவ்யான்ஷாவும் காரிலேயே பயணம் செய்கின்றனர். அவர்களைத் தேடி ரவுடிகளின் தலைவனான அபிமன்யு சிங்கும் சுற்றுகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இது காதல் கதையா, கடத்தல் கதையா, பயணக் கதையா என சொல்ல முடியாத அளவிற்கு திரைக்கதை வளைவு, நெளிவாக நகர்ந்து போகிறது. காதலை மட்டுமே வைத்திருந்தால் கூட ரசித்திருக்க முடியும் எனத் தோன்றுகிறது. கடைசி இருபது நிமிடம் மட்டும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதைக் காதல் கதையாக முடித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்.

சித்தார்த்தை ஒரு ஏழைக் குடும்பத்து இளைஞனாக யோசிக்க முடியவில்லை. சிறு குறுந்தாடி அவருடைய முகத்திற்குப் பொருந்தவேயில்லை. வேறு சிறப்பானதொரு 'லுக்'கை சித்தார்த்திற்கு யோசித்திருக்கலாம். இருந்தாலும் அதையும் மீறி அவர் தனது கதாபாத்திரத்தில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து ஆச்சரியப்பட வைக்கிறார். தனக்கு இப்படம் முக்கியமானதொரு படமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு ஈடு செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.

அதிக கிளாமர் காட்ட யார் தயாராக இருக்கிறார்களோ அவரைக் கதாநாயகியாகத் தேர்வு செய்யலாம் என இயக்குனர் முடிவெடுத்திருப்பால் போலிருக்கிறது. அதற்கேற்றபடி திவ்யான்ஷா அவருக்குக் கிடைத்திருக்கிறார். சென்சார் போர்டிலேயே அவருடைய அங்கங்களுக்கு 'மாஸ்க்' போடச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு கிளாமராக நடித்திருப்பார் என யோசித்துப் பாருங்கள். தண்ணி, தம் அடித்துக் கொண்டு 2023ன் மாடர்ன் பெண் இப்படித்தான் இருப்பாரோ என பயப்பட வைக்கிறார்.

வில்லன் அபிமன்யு சிங் எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றுகிறார். அவருடனேயே சுற்றித் திரியும் கதாபாத்திரத்தில் யோகி பாபு. ஒரு சில ஒன்லைன்களில் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், வேறு சில ஒன்லைன்களில் கடுப்பேற்றுகிறார்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் 'நிரா நிரா' பாடல் மட்டும் மயக்குகிறது. மற்ற பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாலைப் பயணக் காட்சிகளை எடுப்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக நிறையவே உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன்.

பணத்தைத் தேடி ஓடும் கதாநாயகன், பணமே வேண்டாம் என ஓடும் கதாநாயகி, பணத்திற்காக எதையும் செய்யத் துரத்தும் வில்லன் …என சீரியசான, பரபரப்பான படத்தைக் கொடுத்திருக்கலாம். மாறாக, சில்லியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

டக்கர் - பேஜார்

 

பட குழுவினர்

டக்கர் (2023)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓