குலசாமி,Kulasamy
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஷரவணசக்தி
இசை - மகாலிங்கம்
நடிப்பு - விமல், தன்யா ஹோப்
வெளியான தேதி - 5 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2/5

நாட்டில் என்ன நடக்கிறதோ, அல்லது எந்த ஒரு க்ரைம் விஷயம் பரபரப்பாகப் பேசப்படுகிறதோ அதை வைத்து படத்தின் கதையை அமைத்தால் தங்களது படமும் பரபரப்பாகப் பேசப்படும் என சில இயக்குனர்கள் நினைக்கிறார்கள். அதெல்லாம் சரிதான், ஆனால், அதைப் படமாக ஒழுங்காக எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லையே. அப்படிப்பட்ட ஒரு படம்தான் இந்த 'குலசாமி'.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் ஆகிய இரண்டையும் சேர்த்து இந்தப் படத்திற்குக் கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் ஷரவணசக்தி. அப்படிப்பட்ட பரபரப்பான நிஜ சம்பவங்களை சினிமாவாக எடுக்கும் போது ஒரு க்ரைம் நாவலைப் படிக்கும் பரபரப்பு படம் பார்க்கும் போதும் வர வேண்டும். அது இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை.

மதுரையில் ஆட்டோ டிரைவராக இருக்கிறார் விமல். தினமும் மதியம் 1 மணிக்கு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்ட தனது தங்கையின் உடலைப் பார்க்கச் செல்வார். அந்த கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் வினோதினி கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பெண்களிடம் நைசாகப் பேசி பணக்காரர் ஒருவரிடம் அனுப்பி வைப்பார். அது போன்று மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஆதாரங்களை தனது தோழியான தான்யா ஹோப்பின் மொபைலுக்கு அனுப்பிவிடுகிறார். தான்யாவைக் கொல்ல பணக்காரரின் அடியாட்கள் வருகிறார்கள். அவர்களிடமிருந்து தான்யாவைக் காப்பாற்றுகிறார் விமல். அதன்பின் என்ன நடக்கிறது என்பது பல தமிழ் சினிமாக்களைப் பார்த்த ரசிகர்கள் எளிதில் சொல்லிவிடுவார்கள்.

கொஞ்சம் காமெடி கதாபாத்திரத்தில் விமல் நடிக்கும் படங்களைத்தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் படம் முழுவதும் சீரியசாகவே வருகிறார். பிளாஷ்பேக்கில் மட்டும்தான் கொஞ்சம் சிரித்த முகமாக நடித்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப். விமலுக்கு ஜோடி என்றெல்லாம் சொல்ல முடியாது. படத்தில் கதாநாயகிக்கென ஒரு பாடலாவது இருந்தால்தான் அவரைக் கதாநாயகி என்று சொல்ல முடியும். கதாநாயகியை விட விமல் தங்கையாக நடித்திருக்கம் கீர்த்தனாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அழுத்தமான கதாபாத்திரம்.

மற்ற கதாபாத்திரங்களில் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துப்பாண்டி, வில்லனாக நடித்திருக்கும் ஜனனி பாலு, பேராசிரியையாக நடித்திருக்கும் வினோதினி குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

பாலியல் குற்றங்கள்தான் படத்தின் மையக்கரு, அதற்கான எதிர்ப்பை வசனங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். படத்திற்கு வசனம் நடிகர் விஜய் சேதுபதி. நட்புக்காக அவரது பெயரைப் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

மகாலிங்கம் இசையில் பாடல்கள் எடுபடவில்லை, பின்னணி இசையில் எதையாவது செய்ய முயற்சித்திருக்கிறார்.

2023ல் சினிமா வேறு ஒரு கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இம்மாதிரியான படங்கள் இந்த சினிமாவை 80களை நோக்கி இழுத்துப் போகிறது.

குலசாமி - முடியல சாமி

 

குலசாமி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குலசாமி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓