2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஹம்சினி என்டர்டெயின்மென்ட், ஹியுபாக்ஸ் ஸ்டுடியோஸ்
இயக்கம் - எஸ்ஜி சார்லஸ்
இசை - விஷால் சந்திரசேகர், அஜ்மல் தசீன்
நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், தீபா சங்கர்
வெளியான தேதி - 14 ஏப்ரல் 2023
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது, நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் இருந்தே சினிமாவுக்கான கதை கொட்டிக் கிடக்கிறது என்பதை கதையைத் தேடி அலையும் சில இயக்குனர்களுக்கு இந்தப் படம் புரிய வைக்கும்.

'சொப்பன சுந்தரி' என்ற கொஞ்சம் ஏடாகூடமான தலைப்புதான் இந்தப் படத்திற்கான முதல் எதிரி. ஓரிரு காட்சிகளைத் தவிர, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு படத்திற்கு இப்படி ஒரு தலைப்பை இயக்குனர் தேர்வு செய்திருக்கக் கூடாது. 'கரகாட்டக்காரன்' படத்தின் கவுண்டமணியின் கார் காமெடி பிரபலம் என்பதாலும், இந்தப் படத்தில் ஒரு காரை அடைய ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி என்பதாலும் இந்தப் பெயரை இயக்குனர் எஸ்ஜி சார்லஸ் தேர்வு செய்திருக்கலாம்.

கதை என்று ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம். ஆனால், அதை நகர்த்திய விதம், இயல்பான கதாபாத்திர உருவாக்கம், அதற்குப் பொருத்தமான நட்சத்திரத் தேர்வு ஆகியவைதான் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. இன்னும் சில காட்சிகளில் மெனக்கெட்டு உழைத்திருந்தால் 'கோலமாவு கோகிலா, டாக்டர்' படங்களைப் போன்ற ஒரு நகைச்சுவை கலந்த சுவாரசியமான படமாக இந்தப் படம் அமைந்திருக்கும். இருந்தாலும் இடைவேளைக்குப் பின் கிளைமாக்ஸ் வரை எதிர்பாராத 'டுவிஸ்ட்'களும் அமைந்திருப்பதால் இந்த இரண்டு மணி நேரப் படத்தை ரசிக்க முடிகிறது.

சென்னையின் குடிசைப் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு நகைக் கடையில் வேலை செய்கிறார். படுத்த படுக்கையான அப்பா, அதிகம் பேசும் அம்மா தீபா சங்கர், பேசவே முடியாத அக்கா லட்சுமிப்ரியா சந்திரமவுலி, காதலித்து கல்யாணம் செய்து கொண்டு போன அண்ணன் கருணாகரன், இவர்கள்தான் ஐஸ்வர்யாவின் குடும்பம். ஐஸ்வர்யா வேலை பார்க்கும் நகைக் கடையில் ஒரு குலுக்கல் போட்டியில் கார் பரிசாக விழுகிறது. அந்தக் காரை வைத்து தன் அக்காவின் திருமணத்தை முடிக்க நினைக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால், அண்ணன் கருணாகரன் தான் வாங்கிய நகைக்குக் கொடுத்த குலுக்கல் சீட்டை வைத்துத்தான் ஐஸ்வர்யா கார் பரிசை வாங்கியதாக போலீசில் புகார் கொடுத்து காரைக் கேட்கிறார். கார் போலீஸ் ஸ்டேஷனில் முடக்கப்பட, அந்தக் காரை அடைய ஐஸ்வர்யா, கருணாகரன் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு குலுக்கல் போட்டிப் பரிசை ஒரு கடை நடத்துகிறது என்றால் முதலில் அந்தக் கடையின் ஊழியர்கள் பங்கேற்க முடியாது என்ற விதிமுறை இருக்கும். ஆனால், ஐஸ்வர்யாவின் பெயர் இருந்தும் அவரது போன் நம்பர் இருந்தும் அவரது வீட்டைத் தேடிப் போய் பரிசு தருகிறது அந்த நகைக்கடை நிறுவனம். அப்படி ஒரு விதியை இயக்குனர் தெரிந்தே மறந்துவிட்டார், மறைத்தும் விட்டார். அதை சமாளிக்கவும் வேறு வேறு டுவிஸ்ட்களை வைத்து சரி செய்ய முயன்றிருக்கிறார்.

சென்னையின் ஏழை குடும்பப் பெண் அல்லது சென்னை வட்டாரப் பெண் என்றாலே ஐஸ்வர்யாவுக்குள் ஒரு எனர்ஜி வந்துவிடுகிறது. 'காக்கா முட்டை, வட சென்னை' படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனது சென்னை டயலாக் டெலிவரியில் புகுந்து விளையாடியிருக்கிறார். சிம்பிளாக வந்தாலும் நிறைய சிந்தித்து பல 'டகால்டி' வேலைகளைச் செய்கிறார். கிளைமாக்சில் ஆக்ஷனில் கூட அசத்துகிறார். இது போன்ற கதாபாத்திரங்கள் ஐஸ்வர்யாவுக்கு அப்படியே பொருந்திப் போகின்றன.

ஐஸ்வர்யாவின் வாய் பேச முடியாத அக்காவாக லட்சுமிப்ரியா சந்திரமவுலி, அக்காவுக்கும் சேர்த்து வாயைத் திறந்தாலே உளறிக் கொட்டும் அம்மாவாக தீபா சங்கர் இருவரும் ஐஸ்வர்யாவின் 'ரைட்டு, லெப்ட்டு' கரங்களாகக் கை கோர்த்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் அண்ணனாக கருணாகரன், அவரது மச்சானாக மைம் கோபி இவர்கள்தான் மெயின் வில்லன்கள். அந்தக் காரை அடைய பல பிளான்களைப் போடுகிறார்கள். ஐஸ்வர்யா மீது ஒரு 'கண்' வைக்கும் இன்ஸ்பெக்டராக சுனில், கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்திவிட்டுப் போகும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

சென்னையைச் சுற்றி நடக்கும் கதையை அதற்கேயுரிய ஏரியாக்களில் இயல்பாய் பதிவு செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் கதையுடன் ஒன்றி அமைக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை கதை கொஞ்சம் சுவாரசியமில்லாமல் சுற்றிச் சுற்றி வந்தாலும், இடைவேளைக்குப் பின் காமெடி, சென்டிமென்ட், த்ரில்லர் என சுவாரசியமாக கடந்து போகிறது. ஹீரோக்கள் இல்லாமல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயல்பான கதைக்களம், கதாபாத்திரம் கொண்ட இம்மாதிரியான படங்கள் இன்னும் அதிகம் வர வேண்டும்.


“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்“.

இந்தத் திருக்குறள் தான் படத்துல கடைசியா சொல்ற மெசேஜ்.

அதாவது, “நடுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சொப்பன சுந்தரி - பணமா? பாசமா?

 

சொப்பன சுந்தரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சொப்பன சுந்தரி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓