கொலை
விமர்சனம்
தயாரிப்பு - இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - பாலாஜி கே குமார்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு - விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி
வெளியான தேதி - 21 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதை புரிய வைக்கிறது. ஒரு கொலை, அந்தக் கொலை எதற்காக, யாரால் நடத்தப்பட்டது, அதைச் செய்தது யார் ? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'விடியும் முன்' என்ற கிரைம் திரில்லர் கதையைக் கொடுத்த இயக்குனர் பாலாஜி கே குமார், மீண்டும் ஒரு கிரைம் திரில்லர் படமாக இந்த 'கொலை' படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் உருவாக்கம், அரங்க அமைப்பு, காட்சிகளின் கோணம், விசாரணை, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவை இந்தப் படத்தைப் பற்றிப் பேச வைக்கின்றன.
பிரபல மாடலான மீனாட்சி சவுத்ரி அவரது அபார்ட்டிமென்ட்டில் கொல்லப்படுகிறார். அந்த வழக்கு பற்றிய விசாரணையை போலீஸ் அதிகாரியான ரித்திகா சிங் நடத்த ஆரம்பிக்கிறார். உதவிக்காக முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியை அழைத்துக் கொள்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். இவர்களில் யாராவது மீனாட்சியைக் கொன்றார்களா அல்லது வேறு யாரும் கொன்றார்களா என்பதை விஜய் ஆண்டனி, ரித்திகா எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மனைவியைப் பிரிந்தும், கல்லூரி செல்லும் வயதுடைய மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் விஜய் ஆண்டனி இந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். நடுத்தர வயது தோற்றம் என விஜய் ஆண்டனியிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனாலும், முந்தைய படங்களில் பார்த்ததைப் போலவே, அதே உடல் மொழியுடனும், பேச்சுடனும் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்திற்குப் படம் கதாபாத்திரத்திற்கேற்றபடி கொஞ்சம் மாற்றி நடித்தால் அவருக்கு நல்லது. இந்தப் படத்தில் தோற்றத்தில் மாறிவிட்டார், நடிப்பிலும் இனி மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
மேலதிகாரியான ஜான் விஜய்யின் எதிர்ப்பையும் மீறி விஜய் ஆண்டனியை தனக்கு உதவி செய்ய வருமாறு அழைத்து சேர்த்துக் கொள்கிறார் ரித்திகா சிங். நிதானமாகவும், அக்கறையாகவும், எந்த அலட்டலும் இல்லாமல் தன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார் ரித்திகா.
மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கிரைம் திரில்லர் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை சைக்கோவாகக் காட்டுவது 'க்ளிஷே'வாக உள்ளது. கொல்லப்படும் மாடலாக அறிமுக நடிகை மீனாட்சி சவுத்ரி. மாடல் என்று சரியாக நம்பும் அளவிற்கு நல்ல தேர்வு. அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். மீனாட்சியின் நண்பர் சித்தார்த்தா சங்கர், மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மாடல் ஏஜன்ட் முரளி சர்மா, மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக் கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை சரியாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
படத்தின் இயக்குனர் பாலாஜி கே குமார் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் என்பதால் ஹாலிவுட் படங்களுக்குரிய ஸ்டைலை தமிழிலும் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அவருடைய எண்ணத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எடிட்டர் ஆர்கே செல்வா சரியான ஒத்துழைப்பைத் தந்திருக்கிறார்கள். டெக்னிக்கலாக இந்தப் படம் பார்வையாளர்களிடம் பேசப்படும்.
ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிட்டபடி 'உருவாக்கம்' இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக நம் மனதைத் தொட மறுக்கிறது. கொல்லப்பட்டவர் மீது நமக்கு அனுதாபம் வந்தால்தான் அந்த உணர்வு கிடைக்கும். நடக்கும் விசாரணை சஸ்பென்ஸாகக் கடந்து போனாலும் 'சம்திங் மிஸ்ஸிங்' என்று தோன்றுகிறது.
கொலை - உணர்வை மிஞ்சும் கலை