தினமலர் விமர்சனம் » விடியும் முன்
தினமலர் விமர்சனம்
இடையில் கொஞ்சகாலம் காணமல் போயிருந்த பூஜா, மீண்டும் வந்திருக்கும் திரைப்படம், சில பெரிய மனிதர்களின் வக்கிர முகத்தை உலகிற்கு உரித்து காட்டியிருக்கும் திரைப்படம், குழந்தை பாலியல் வக்கிரங்களை பட்டவர்த்தனமாக பறைசாற்றியிருக்கும் திரைப்படம்... இப்படி, எப்படி வேண்டுமானாலும் விடியும் முன் திரைப்படம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
கதைப்படி, சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்து பல வருடங்களாக பாலியல் தொழிலாளியாக மும்பை, சென்னை என்று மாறி மாறி தொழில் செய்பவர் பூஜா! பூஜாவின் மாஜி புரோக்கர் அமரேந்திரன், பாலியல் இச்சைகளுக்கு சிறுமிகளை விரும்பும் ஒரு பெரும் பணக்காரருக்கு சிறுமி ஒருத்தியை ஏற்பாடு செய்யும்படி மிரட்டுகிறார். அவனது மிரட்டலுக்கு முதலில் அடிபணிய மறுக்கும் பூஜா, ஒரு கட்டத்தில் மிரட்டல் ஜாஸ்தியாகவே ஓ.கே. சொல்கிறார்.
தனது முன்னாள் தாதா தலைமையின் உதவியுடன் வெளியூருக்கு கடத்தி அனுப்பப்பட இருக்கும் ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு அந்த பெரும் பணக்காரரின் பங்களாவுக்கு போகிறார் பூஜா. வக்கிரம் பிடித்த அந்த ஆசாமியின் இச்சை, சிறுமியின் உயிருக்கே உலை வைக்க பார்க்கிறது. அதனால் வெகுண்டெழும் பூஜாவும், சிறுமி மாளவிகாவும் தங்களை தற்காத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு ரயிலேறுகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன? இவர்களால் கொல்லப்படும் பெரும் பணக்காரரின் வாரிசு வினோத் கிஷன், சிறுமி மாளவிகாவை ஒருநாளைக்கு மட்டும் பூஜா வசம் கொடுத்த தாதா தலைமை, புரோக்கர் அமரேந்திரன், அவரது தில்லு முள்ளு டிடக்டீவ் நண்பர் ஜான் விஜய் எல்லோரும் தனித்தனிக்குழுக்களாக கொலை வெறியுடன், பூஜா, சிறுமி மாளவிகா இருவரையும் தேடுகின்றனர். அவர்களது கையில் சிக்கி இருவரும் சின்னா பின்னமானார்களா? அல்லது கடவுள் கருணையால் தப்பி பிழைத்தார்களா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், திக் திக் திகிலாகவும் சொல்லப்பட்டிருக்கும் விடியும் முன் படத்தின் மீதிக்கதை!
பாலியல் தொழிலாளியாக பூஜா, தன் உடம்பாலும், உருவத்தாலும், குரலில் இழையோடும், சின்ன சோகத்தாலும் யதார்த்தமாக நடித்து நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறார். கடத்தி அடைக்கப்பட்டிருக்கும் சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்து செல்லும்போது அவரது தவிப்பாகட்டும், சிறுமி மீது அதன்பின் காட்டும் பாசத்திலாகட்டும் நம் கண்ணி்ல் நீரை வரவழத்து விடுகிறார் அம்மணி.
சதாசர்வகாலமும், ஏதாவது கேட்டுக்கொண்டே பூஜாவுடன் வரும் சிறுமியின் சொந்தகதை, சோகக்கதையும் அவரது துடிப்பும், நடிப்பும் சிறுமி மாளவிகாவிற்கு ஏதாவது பெரிய விருதுகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கலாம்.
பூஜா, மாளவிகா மாதிரியே லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், புரோக்கர் அமரேந்திரன், வினோத் கிஷன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருகு்கின்றனர். அதிலும் தன் தந்தையை கொன்றவர்களை தேடி அலைந்தபடி பார்வையிலேயே உணர்ச்சிகளைகாட்டும் வினோத் கிஷன் ஆசம்!
கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் மிரட்டல் இசை, சிவக்குமார் விஜயனின் மிளிரும் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் புதியவர் பாலாஜி கே.குமாரின் இயக்கத்தில், விடியும் முன் திரைப்படத்தை விடிய வைத்து வெற்றிக்கு முன் கொண்டு நிறுத்தியிருக்கிறது! பலே, பலே!!
மொத்தத்தில் விடியும் முன் - வெற்றிதான்!