லாஸ்ட் 6 ஹவர்ஸ்,Last 6 hours
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லேசி கேட் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுனிஷ் குமார்
இசை - கைலாஸ் மேனன்
நடிப்பு - பரத், விவியா சன்த், அனுப் காலித்
வெளியான தேதி - 5 ஆகஸ்ட் 2022
நேரம் - 1 மணி நேரம் 41 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஆங்கிலப் படம் என்று நினைத்துவிட வேண்டாம். 'டோன்ட் ப்ரீத்' என்ற ஆங்கிலப் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட படம் இது.

அனுப் கலித், அடில் இப்ராகிம், அனு மோகன், விவியா சன்த் ஆகியோர் கொண்ட குழு மலைப் பிரதேசத்தில் தனிமையில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் சென்று கொள்ளை ஒன்றை நிகழ்த்த முடிவெடுக்கிறது. இதற்கு முன்பும் இப்படி சில கொள்ளைகளைச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் குழு இது. அந்த வீட்டிற்குள் சென்றால் கண் பார்வையற்ற பரத் இருக்கிறார். தனது வீட்டிற்குள் கொள்ளையடிக்க நுழைந்துள்ளார்கள் என்பதை அறிந்த அவர் எதிர் தாக்குதலில் இறங்குகிறார். அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகிறது குழு. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு ஆங்கிலப் படத்தைக் காப்பியடித்திருந்தாலும் பரபரப்பான த்ரில்லர் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுனிஷ்குமார். ஆனால், இடைவேளை வரையிலான காட்சிகளில் பெரிதாக பரபரப்பு எதுவுமில்லை. அவர்கள் நிகழ்த்திய இரண்டு கொள்ளைகள்தான் காட்டப்படுகிறது. பரத்தின் வீட்டிற்குள் நுழைந்தபின்தான் படம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.

பார்வையற்ற ஒருவரால் இப்படியெல்லாம் தாக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதை நம்பும்படி செய்திருக்கிறார் இயக்குனர். பரத்தின் உடல்வாகும், அவரது ஆக்ஷனும் அசத்தலாக உள்ளது. அவருக்கான பிளாஷ்பேக் காட்சிகள் அனுதாபத்தை வரவழைக்கும்.

அனுப் காலித், அடில் இப்ராகிம், அனு மோகன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஓரளவிற்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுடைய குழுவில் ஒருவராக இருக்கும் விவியா கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறார்.

மலைப் பிரதேச வீடும், அதற்குள் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் ஹைலைட். அதிலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் முக்கியக் கதையே. அந்த இருட்டு நேரத்திற்குள் விதவிதமான லைட்டிங்குகளில் தனி கவனம் செலுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சினு சித்தார்த்.

முதல் பாதி பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி பரவாயில்லை. ஒரே இடத்தில் கதை நகர்வது கொஞ்சம் அலுப்படைய வைத்தாலும் பரத் தன் நடிப்பால் காப்பாற்றுகிறார். மினிமம் பட்ஜெட்டில் முயற்சி செய்திருக்கிறார்கள்.

லாஸ்ட் 6 ஹவர்ஸ் - பொறுமை அவசியம்

 

பட குழுவினர்

லாஸ்ட் 6 ஹவர்ஸ்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓