விக்ராந்த் ரோணா,Vikrant rona
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஷாலினி ஆர்ட்ஸ்
இயக்கம் - அனூப் பண்டாரி
இசை - அஜனீஷ் லோக்நாத்
நடிப்பு - சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக்
வெளியான தேதி - 28 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 2/5

கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம். கன்னடத்தில் சில பல வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் சுதீப். அவர் நடித்து வெளிவரும் பான்--இந்தியா படம். வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படம் பற்றி படக்குழுவே ஏன் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது.

படத்தில் என்ன சொல்லப் போகிறோம் என படத்தின் கதை எழுதியவருக்காவது, படத்தை இயக்கியவருக்காவது, படத்தில் நடித்தவர்களுக்காவது புரிந்ததா என்பது மாபெரும் கேள்வி. கேரள பாணியில் உள்ள மலைப் பிரதேச வீடு, கதை நடப்பது கர்நாடகாவில், கதாபாத்திரங்கள் அடிக்கடி தமிழகத் தொடர்புடைய இடங்களை உச்சரிக்கிறார்கள். இப்படி ஒரு ஊர், இப்படி ஒரு இடம் ஏதாவது வேற்று கிரகத்தில் இருக்கிறதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

படம் முழுவதையும் ஏன் இருட்டிலேயே காட்ட வேண்டும். பகல் காட்சிகளைக் கூட இருட்டாகவே காட்டுகிறார்கள். 3 டி படம் வேறு, பொதுவாகவே கண்களுக்கு அழற்சி ஏற்படும். அதில் இருட்டான காட்சிகளில் என்ன தெரிகிறது என்று உற்றுப் பார்த்து, உற்றுப் பார்த்து கண்கள் வலித்ததுதான் மிச்சம்.

தன்னை விட ஜுனியர் நடிகர்கள் 'கேஜிஎப்' மாதிரியான படங்களில் நடித்து பிரபலமாவதைப் பார்த்து சுதீப்பும் இப்படி ஒரு பேன்டஸி படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறது. படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி என்ன நினைத்து இந்தப் படத்திற்கக் கதை எழுதி இயக்கினாரோ,அவருக்கே வெளிச்சம்' என்று சொல்லக் கூடாது 'அவருக்கே இருட்டு'.

கமரூட்டு என்ற மலைப் பிரதேச ஊருக்கு புதிய இன்ஸ்பெக்டராக வருகிறார் சுதீப். அங்கு சில குழந்தைகளும், சிலரும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அடுத்தடுத்து பல திருப்புமுனைகள். திடீர் திடீர் எனத் தோன்றும் பேய்கள், சில மர்ம உருவங்கள். அவற்றிற்கிடையில் கொலைகளுக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் சுருட்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார் சுதீப். 'நான் ஈ' சுதீப் என்ற பெயர் போய், 'சுருட்டு சுதீப்' என்று பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிரமான விசாரணையில் இறங்குகிறார். தனது சிறு மகளுடன் பல இடங்களுக்கும் செல்கிறார். ஒரு சிறு வயது மகளுடனா விசாரிக்கப் போவார் என்று கேள்வி எழுகிறது. அதற்கு கிளைமாக்சில் ஒரு காரணம் சொல்கிறார்கள். சுதீப் மீது மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை நகராதது மிகப் பெரிய மைனஸ் பாயின்ட்.

படத்தில் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த கமரூட்டு ஊரில் உள்ள பெரிய புள்ளியாக மதுசூதன ராவ். அவரது மகனாக நிரூப் பண்டாரி, நிரூப் காதலியாக நீதா அஷோக் என இந்த கதாபாத்திரங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகள் அசத்தலாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட் எதற்காக படம் முழுவதையும் இருட்டாகவே காட்டினார் என சொன்னால் நல்லது. ஜாக்குலின் பெர்ணாண்டஸ் கவர்ச்சி நடனமாடும் 'ரா ரா..' பாடலில் அசத்துகிறார் இசையமைப்பாளர் அஜனீஷ். பின்னணி இசையும் பரவாயில்லை.

படத்தில் மதுசூதன் வீடு, மற்றுமொரு மர்மமான வீடு, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை மட்டுமே படத்தில் இடம் பெறுகின்றன. படத்தில் ஊரையோ, தெருக்களையோ காட்டவேயில்லை. அடிக்கடி காட்டுப் பகுதிகளை மட்டும் காட்டுகிறார்கள். அங்கெல்லாம் ஆட்களே அதிகமில்லை. ஆனால், ஒரு பெண் நடத்தும் சாராயக் கடையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன லாஜிக்கோ ?.

பேன்டஸி படமாகவும் இல்லாமல், பேய்ப் படமாகவும் இல்லாமல், த்ரில்லர் படமாகவும் இல்லாமல் என்னமோ ஒரு படமாக இருக்கிறது.

விக்ராந்த் ரோணா - வேணா…

 

விக்ராந்த் ரோணா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

விக்ராந்த் ரோணா

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓