Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

முடிஞ்சா இவன புடி

முடிஞ்சா இவன புடி,Mudinja ivana pudi
31 ஆக, 2016 - 13:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » முடிஞ்சா இவன புடி

தினமலர் விமர்சனம்


நான் ஈ கிச்சா சுதீப் - நித்யா மேனன் ஜோடி நாயகர், நாயகியாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இதே ரவிக்குமாரின் வில்லனில் தொடங்கி, ஷங்கரின் ஜென்டில்மேன், எம்ஜிஆரின் மாட்டுக்காரவேலன் வரை... ஏகப்பட்ட படங்களின் உல்டா - புல்டாவாக வெளிவந்திருக்கும் லவ் - ஆக்ஷன் படம் தான் "முடிஞ்சா இவனபுடி " .


கதைப்படி, கிச்சா சுதீப்பின் அப்பா பிரகாஷ்ராஜ், பெரும் கோடீஸ்வர தொழில் அதிபர். சுதீப்புக்கு சின்ன வயதாக இருக்கும் போதே தன் பணத்தையெல்லாம் தொழில் கூட்டாளிகளிடம் இழக்கும் அவர், தன் கஷ்டம் பிள்ளைக்கு தெரியாக் கூடாது என்பதற்காக இரட்டை வேடம் போடுகிறார். அப்படியும் அப்பாவின் கஷ்டம் மகனுக்கு தெரிய வருகிறது. இந்த போலி வாழ்க்கை வேண்டாமப்பா... என அப்பனுக்கு புத்தி சொல்லும் பிள்ளை, அப்பாவை தங்கள் வசதிக்கேற்ற வாழ்க்கை வாழ வலியுறுத்துகிறார். அதுவே அவர்களுக்கு வினையாகிறது. அங்கு, அந்த சிட்சுவேஷனில் சுதீப்பையே இரட்டை வேடத்திற்கு உட்படுத்தி, உருவகப்படுத்தி, மகனை எஸ்கேப் ஆக்கும் பிரகாஷ்ராஜ், மகனை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு தான் பட்ட அடியால் மனநிலை பாதிக்கப்பட்டு மடிந்து போகிறார். அது முதல், எல்லா பிரச்சினைக்கும் பணம் தான் காரணம்.... என சிறு வயதிலேயே கருதும் சுதீப், பெரியவனானதும், அப்பா கற்றுத் தந்த இரட்டை வேடத்தை தன் நிரந்தரமாக்கிக் கொண்டு அப்பா இழந்த பணத்தை எப்படி? எப்படியெல்லாம் மீட்கிறார்..? என்னும் கதையுடன் சுதீப் - நித்யா மேனனின் காதலையும் கலந்து கட்டி ஒரு மாதிரி, பல பழைய படங்களின் மாதிரியாக பயணிக்கிறது... முடிஞ்ச இவன புடி படத்தின் மீதிக் கதை!


கிச்சா சுதீப், சிவனாகவும், சத்யாவாகவும் புகுந்து விளையாடியிருக்கிறார். ப்ளாட் புரமோட்டரான தன்னிடம் இடம் வாங்க, தன் அண்ணியுடன் வரும் நித்யா மேனனிடம் அடக்கம் ஒடுக்கமாக அன்பு காட்டி காதல் வயப்படுவதிலாகட்டும், பெரும்புள்ளிகளின் பிளாக்மணியை இருந்த இடத்தில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு தன் ஆட்களை விட்டு ஸ்டைலாக, கோடி கோடியாக கொள்ளை அடிப்பதிலாகட்டும் சகலத்திலும் சபாஷ் சொல்லும் அளவிற்கு சரியாக நடித்திருக்கிறார். என்ன ஒரே குறை, அவர், பேசும் தமிழ் மட்டும் தான் ஏதோ டப்பிங் பட தமிழ் மாதிரி டபாய்க்கிறது. மற்றபடி சுதீப், பக்கா சுறுசுறுப்பு, விறுவிறுப்பு.


நித்யா மேனன் வழக்கம் போலவே ஹோம்லி குல்கந்து. ஒரு சுற்று சதை போட்டிருப்பதால் சற்றே உயரம் கம்மியான அம்மணி ஆங்காங்கே ஆன்ட்டி லுக்கில் தெரிவது மட்டும் அய்யோ பாவமென இருக்கிறது. மற்றபடி, இந்த மலையாள சேச்சியின் நடிப்பில் எல்லாம் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாதுல்ல..!


நாசர், பிரகாஷ்ராஜ், முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்டாவா, சாய்ரவி, அவினாஷ், அச்சுதாராவ், லதா ராவ், சதீஷ், இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், சிக்கன்னா... என ஏகப்பட்ட பிற நட்சத்திரங்களில் நித்யாவின் அண்ணியாக வரும் சின்னத்திரை லதா ராவ் செமயாய் ஜொலிக்கிறார்.

சுதீஷின் நண்பராக வரும் சதீஷ், தனக்குள்ளேயே ஏதேதோ பேசியபடி ரசிகனை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி.. என சோதிக்கிறார். பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் உருக்கம். மற்ற எல்லோரும் வெறும் சப்தம் மட்டுமே.


ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினத்தின் ஓவியப்பதிவான ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். டி.இமானின் இசையில், லவ் மா லவ் மா.... ஜெஸ்ட் பீம பீம.... உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ரக ராகம். பிரவீன் ஆன்டனியின் படத்தொகுப்பு, கொஞ்சம் பாடாவதி தொகுப்பு என்பது சலிப்பு!


டி.சிவக்குமாரின் கதையில் ஏற்கனவே சொன்னது போன்று கே.எஸ்.ரவிக்குமாரின் வில்லன் படக்கதை உள்ளிட்ட வேறு பழையபடங்களின் சாயலே பெரிதாக தெரிகிறது. இந்தக் குறை கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, இயக்கத்திலும் பிரதிபலித்திருப்பது சற்றே நெருடல்.


ஆக மொத்தத்தில், ரசிகனுக்கு முடிஞ்சா இவன புடி - எந்தப் பழைய படம் என கண்டுபிடி?" என சவால் விடும் ரீதியில் இருக்கிறது!
--------------------------------------------------


குமுதம் விமர்சனம்
தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்து கே.எஸ் ரவிக்குமா இயக்கிய 'வில்லன்' பரபர திரைப்படத்தை லேசாக நினைவுபடுத்தி இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து, ஸ்ட்ராங்காகத் தந்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.


கதை என்ன?

வி.ஐ.பி.க்களின் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் சுதீப். பின்னர் மாட்டிக் கொள்ளும்போது 'நான் அவன் இல்லை, அது தன் சகோதரன்' என்று நம்ப வைத்து 'எஸ்' ஆகிறார். நிலம் வாங்க வந்த நித்யாமேனனுடன் காதல் ஏற்படுகிறது. நித்யாவுக்குத் தன் காதலன் மேல் சந்தேகம் வர, இருவரும் இணைந்தார்களா? கறுப்புப் பணம் மீட்கப்பட்டதா என்பதுதான் கதை.

கொஞ்ச நேரம் பூனை, கொஞ்ச நேரம் புலி என்று செமை ஃபீல் கொடுக்கிறார் சுதீப். கன்னட சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா?

நித்யா மேனன். நா. முத்துக்குமாரின் காதல் கவிதை போல் இருக்கிறார்!

நாசர், பிரகாஷ்ராஜ் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?

ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு மேலும் விறுவிறுப்பைத் தருகிறது. பாடலை விட பின்னணி இசையில் இமான் முன்னணி.

சதீஸ் எப்போதாவது சிரிக்க வைக்கிறார். சும்மா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக செல்ல ஒரு படம் இது.

முடிஞ்சா இவன புடி(க்கும்)

குமுதம் ரேட்டிங் : ஓகேவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in