வேழம்,Vezham

வேழம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கே 4 கிரியேஷன்ஸ்
இயக்கம் - சந்தீப் ஷியாம்
இசை - ஜானு சுந்தர்
நடிப்பு - அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன்
வெளியான தேதி - 24 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

த்ரில்லர் கதைகள் எழுதுவது இன்றைய இளம் இயக்குனர்களுக்கும், அறிமுக இயக்குனர்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறதா இல்லை எளிதாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்த வாரம் வெளிவந்த படங்களில் மற்றுமொரு த்ரில்லர் படம் இது.

'சீரியல் கில்லிங்' என்பதை மையமாக வைத்து அதைச் சுற்றி, காதல், சொத்து பிரச்சினை, சென்டிமென்ட் என என்னவெல்லாம் சேர்க்க முடியுமோ அவையனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம்.

ஊட்டியில் காதலர்களான அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பைக்கில் செல்லும் போது யாரோ சிலரால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதில் ஐஸ்வர்யா மேனன் கொல்லப்படுகிறார். அசோக் செல்வன் பிழைத்துக் கொள்கிறார். இது நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் காதலி ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறார் அசோக் செல்வன். தன் காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இருக்கிறது. ஒரு நாள் குன்னூருக்குச் சென்ற போது ஐஸ்வர்யாவைக் கொன்றவர்களில் ஒருவனை அடையாளம் காண்கிறார். அவனைத் தொடர்ந்து சென்ற போது மேலும் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அவை என்ன, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதல் கதை, த்ரில்லர் கதை, நகைச்சுவைக் கதை இப்படி எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் பொருத்தமாக பொருந்திப் போகும் ஒரு கதாநாயகனாக அசோக் செல்வன் இருக்கிறார். இந்தப் படத்தில் காதலியை அநியாயமாகப் பறி கொடுத்த குற்ற உணர்வுடன் வாழும் ஒரு கதாபாத்திரம். எப்படியாவது காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். அதை ஒரு கட்டத்தில் நிறைவேற்றவும் செய்கிறார்.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் ஐஸ்வர்யா மேனன், மற்றொருவர் ஜனனி. ஐஸ்வர்யா கொஞ்ச நேரமே வந்தாலும் இயல்பான நடிப்பால் மனதைக் கொள்ளை கொள்கிறார். இப்படி ஒரு யதார்த்தமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது. அசோக் செல்வன் மீது பரிதாபப்பட்டு அவரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஜனனி. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஊட்டி, குன்னூர், கோவை சுற்றுப்புறங்கள்தான் படத்தின் கதைக்களம். தரமான ஒரு படமாகக் கொடுக்க வேண்டும் என ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் உழைத்திருக்கிறார். ஜானு சந்தர் இசையில் பாடல்கள் படம் பார்க்கும் போது பிடிக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.

படத்தில் ஒரே ஒரு வில்லன் என யாரையும் சொல்ல முடியாதபடி சில பல வில்லன் கதாபாத்திரங்களை வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவே குழப்பத்தையும், திரைக்கதை தள்ளாட்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இடைவேளைக்குப் பின் எதை நோக்கி திரைக்கதை பயணிக்க வேண்டும் என்பதில் தடுமாற்றம் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் உறவினர், அடியாட்கள், அரசியல்வாதியின் மகன்கள் என எங்கெங்கோ சுற்றுகிறது திரைக்கதை. இருந்தாலும் நடு நடுவே எதிர்பாராத சில திருப்பங்களையும் வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்திருந்தால் படத்திற்கு உதவிகரமாக இருந்திருக்கும்.

வேழம் - வீழ்ச்சியல்ல…

 

வேழம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வேழம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓