நடிப்பு - ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன் மற்றும் பலர்
இயக்கம் - விஜய் பாலாஜி
இசை - அஸ்வின் விநாயகமூர்த்தி
தயாரிப்பு - ரைட் மீடியா ஒர்க்ஸ்
வெளியான தேதி - 5 ஜனவரி 2018
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5
'ஈஎஸ்பி' எனப்படும் நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு, அதாவது எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் பற்றிய உணர்வு பற்றி தமிழிலும் சில படங்கள் வந்துள்ளன. இந்த 'விதி மதி உல்டா' படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
சமீப காலங்களில் அப்படிப்பட்ட கதை அம்சம் உள்ள படங்கள் தமிழில் வரவில்லை. மக்களால் மறந்து போன அந்த ஒரு விஷயத்தை அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி முதல் படத்திலேயே சிக்கல் இல்லாமல் கையாண்டிருக்கிறார்.
படத்தின் ஹீரோ ரமீஸ் ராஜா படித்து விட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர். ஒரு பெண்ணையாவது காதலிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. ஒரு படம் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு, சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால், அது அவருடைய கனவில் வந்த ஒன்று போல அவருக்குத் தோன்றினாலும், நிஜமாக அப்படி நடந்து விடுமோ என்ற பயம் வந்துவிடுகிறது. அந்தக் கனவில், அவரையும், அவர் காதலி ஜனனி ஐயரையும் சிலர் கடத்தி விடுவதாகவும், அவர்களது பெற்றோர்களையும் கொன்று விடுவதாகவும் வருகிறது. நிஜத்தில் அப்படி நடந்துவிடாமல் இருக்க அவர் முயற்சிக்கிறார். நடக்கப் போகும் விதிக்கும், அவருடைய மதிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.
'டார்லிங் 2' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ரமீஸ் ராஜா, நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் இது. பொறுப்பில்லாத இளைஞராக பொருத்தமாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் பெரிய வேலையில்லை, இடைவேளைக்குப் பின்னர்தான் அவர் கதையைத் தாங்கிக் கொள்கிறார்.
நாயகியாக ஜனனி ஐயர், கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தில் வழக்கமான கதாநாயகி. கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்.
இடைவேளை வரை சென்ட்ராயன் காட்சிகள்தான் அதிகமாக இருக்கிறது, நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார். “கொஞ்சம் கம்மியாவே நடிங்க பாஸ், விருதெல்லாம் கொடுக்க மாட்டாங்க”.
வில்லனாக சில காட்சிகளில் டேனியல் பாலாஜி. கொஞ்சமே கொஞ்சம் நகைச்சுவைக்கு கருணாகரன், படத்தின் ரசிக்கும்படியான 'அண்ணன்தான்டா டானு...' பாடலை இவருக்குக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
பட்டிமன்றம் ஞானசம்பந்தம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், கதிர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் கவனிக்க வைக்கிறார்கள்.
அறிமுக இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூரத்தி இசையில் 'அண்ணன்தான்டா டானு, உன் நெருக்கம், தாறுமாறா' ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. முயன்றால் முன்னணிக்கு வரலாம்.
படத்தின் மேக்கிங்கைச் சிறப்பாகச் செய்த இயக்குனர் இடைவேளைக்குப் பின் படத்தில் இன்னும் அதிகமான நகைச்சுவைக் காட்சிகளையும், பரபரப்பையும் சேர்த்திருக்கலாம். அப்படி சேர்த்திருந்தால் மாறுபட்ட நகைச்சுவைப் படமாக இந்தப் படம் அமைந்திருக்கும்.
விதி மதி உல்டா - மதியால் இன்னும் மிரட்டியிருக்கலாம்