திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார், தயாரிப்பில் "கபாலி "கலையரசன் கதாநாயகராக நடிக்க, அவருடன் ஜனனி ஐயர், ஷிவதா நாயர் என இரு நாயகியர் நடிக்க, அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படமே "அதே கண்கள்".
பார்வையற்ற பணக்கார இளைஞனிடம் காதல் எனும் போர்வையில் காசு பறிக்க நினைக்கும் அழகு பெண்ணின் அடாவடித் தனத்துக்கும், அதே இளைஞனை உயிருக்கு உயிராய் காதலிக்கும் இளம் பெண்ணின் நிஜக் காதலுக்குமிடையில் சிக்கித் தவிக்கும் பார்வையற்ற இளைஞன், நிஜம் கண்டறிந்து தன்னவளை தேர்ந்தெடுத்தானா? பாசம் காட்டி மோசம் செய்ய முயற்சிப்பவரிடம் பணத்தை இழந்தானா? படம் முடிவதற்குள் பார்வை பெற்றானா..? என்பது தான் "அதே கண்கள்" படத்தின் கதையும் களமும்.
நாயகர் கலையரசன் இப்படக் கதைப்படி சிறு வயதில், எதிர்பாராத ஒரு சம்பவத்தால் கண்பார்வையை இழந்தவராக சிறப்பாக நடித்திருக்கிறார். கண்பார்வையற்றவர் என்றாலும் ரெஸ்டாரண்ட் ஒன்றின் முதலாளியாகவும் கலையரசன் தனக்குரிய பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்துள்ளார். அதிலும், பார்வையற்றவராக அவரது நடிப்பு வெகு சிறப்பு. ஆனால், பத்து வருடங்கள் கழித்து பார்வை கிடைக்கும் போது அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய மகிழ்ச்சி பெரிதாக கலையரசனால் காட்டப்படாதது சற்றே வருந்ததக்கது. அதேமாதிரி, ஷிவதாவைத் தேடி கன்னியாகுமரி வரும் அவர், ஏதோ பெரியதுப்பறியும் அதிகாரி மாதிரி நடந்து கொள்வதும் சற்றே ஓவர். அதே நேரம், பார்வையில்லாதபோது தான் காதலித்த ஷிவதாவுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ? என அவர் காட்டும் பதட்டம் அசத்தல்.
ஜனனி ஐயர் கலையரசனின் தோழியாகவும், காதலியாகவும் தனக்கு தரப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் ஒன்சைடு காதல் காட்சிகளில தனது காதலை கலையரசனிடம் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் இவரது நடிப்பு செம கச்சிதம்.
ஷிவதா நாயர், காதலியாக அறிமுகமாகி வில்லியாக விஸ்வரூபம் எடுப்பதை ஒரு கட்டத்தில் ரசிகனுக்கு யூகிக்க முடிந்து விடுகிறது என்றாலும், தன் பாத்திரம் உணர்ந்து செமயாய் கலக்கி உள்ளார்அம்மணி. முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் எக்கச்சக்கமாய் நடித்து மிரட்டிஇருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.
காமெடி போலீஸாக கச்சிதமாக வரும் பாலசரவணன், அவரது நடிப்பிலும், காமெடியிலும் கலையரசனுக்கும் படத்திற்கும் பெரிதும் உதவி இருக்கிறார்.
ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக செதுக்கப்பட்டிருப்பது அதே கண்களை., ரசிகனின் கண்களுக்கு மேலும் நல்விருந்தாக்க காட்சிக்கு காட்சி முற்பட்டிருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் மிரட்டல் என்பது, இப்படக் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் க்ரைம், த்ரில்லர் படங்களில் முற்றிலும் புதுசாக பணக்கார பார்வையற்றவர்களை குறிவைத்து அவர்களை காதல் வலையில் விழ வைத்து சென்டிமென்ட்டாக பணம் பறிக்கும் கும்பல் பற்றி அழகாக லாஜிக் மிஸ் ஆகாமல் படம் எடுத்திருக்கிறார். அதிலும், ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை கச்சிதமாக படமாக்கியிருப்பது பாராட்டும் அளவிற்கு குறிப்பிடத்தக்கது. அதே மாதிரி ரோகினின் இயக்கத்தில் பின்னால் வரப்போகும் கதையை ரசிகனால் முன்கூட்டியே யூகிக்க முடிந்தாலும் அதனால் சுவாரஸ்யம் பெரிதாக குறையாதது ஆறுதல்.
ஆகமொத்தத்தில், "அதே கண்கள் படத்தை பார்த்த ரசிகனின் கண்கள் பாராட்டும்!"