
கூர்மன்
விமர்சனம்
தயாரிப்பு - எம்கே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரையன் பி ஜார்ஜ்
இசை - டோனி பிரிட்டோ
நடிப்பு - ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன்
வெளியான தேதி - 11 பிப்ரவரி 2022
நேரம் - 1 மணி நேரம் 56 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
உளவியல் ரீதியான படங்களைப் பார்க்க ஒரு சுவாரசியம் இருக்கும். அப்படி என்னதான் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். இந்தப் படத்தை ஒரு 'மைன்ட் ரீடர்' படம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்கள். அதாவது ஒருவர் மனதில் நினைப்பதை அப்படியே சொல்பவர் தான் 'மைன்ட் ரீடர்'.
இந்த 'கூர்மன்' படத்தின் கதாநாயகன் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஒருவர் என்பது தான் இப்படத்தின் சுவாரசியம். அறிமுக இயக்குனர் பிரையன் பி. ஜார்ஜ் புதிய கதை ஒன்றைச் சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
படத்தின் நாயகன் ராஜாஜி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர். அவரையும், அவரது காதலி ஜனனியையும், காதலியின் முறைப் பையன் கொல்ல முயற்சித்த போது தனது தலையில் அடிபட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டவர். அதனால், வேலையை விட்டே நீக்கப்பட்டவர். காதலியை இழந்த சோகத்திலும், வேலையை இழந்த காரணத்தாலும் செங்கல்பட்டில் தனது பண்ணை வீட்டில், வேலைக்காரர் பாலசரவணன், நாய் சுப்பு ஆகியோருடன் வசித்து வருகிறார். விசாரணையில் வாயைத் திறக்காத சில கைதிகளை ராஜாஜியின் பண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் புலனாய்வு அதிகாரியான ஆடுகளம் நரேன். அப்படி ஒருவரை அனுப்பும் போது அந்தக் கைதி தப்பித்துவிடுகிறார். அதனால், பெரிய சிக்கல் வருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
விசித்திரமான குணம் கொண்டவராக ராஜாஜி. நினைத்த நேரம் தூங்குவார், சாப்பிடுவார். சொந்தமாகக் காய்ச்சிய சாராயம், சொந்தமாகத் தயாரித்த சிகரெட் புகைப்பது என இருப்பவர். மனதளவில் பாதிக்கப்பட்டாலும் தன்னிடம் அனுப்பப்படும் கைதிகளைப் பேச வைத்து அவர்களிடம் உண்மைகளை வாங்குவதில் வல்லவர். நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் வெறித்த பார்வை, பக்கத்திலேயே மறைந்த காதலி ஜனனி எப்போதும் உடனிருப்பதாக ஒரு நினைப்பு என அந்தக் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார்.
ஜனனிக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அவ்வப்போது வந்து காதலர் ராஜாஜிக்கு அட்வைஸ் சொல்லிவிட்டுச் செல்கிறார். ராஜாஜியுடன் எப்போதுமே இருந்து அவரை கவனித்துக் கொள்ளும் வேலைக்காரராக பாலசரவணன். அவர்களுக்கு உதவியாக இருக்கும் அந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாயும் சிறப்பாக நடித்திருக்கிறது. ஆனால், இந்த நாய் இப்போது உயிரோடு இல்லையாம்.
ராஜாஜியின் பண்ணை வீடாகத் தேர்வு செய்துள்ள இடமே ஒரு கதாபாத்திரம் போல அமைந்து நல்லதொரு களமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் லைட்டிங், காமிரா ஆங்கிளில் ஒரு வித கலவரத்தை ஏற்படுத்துகிறார். கோபி கருணாநிதியின் அரங்க அமைப்பில் பண்ணை வீட்டு பயமுறுத்துகிறது. டோனி பிரிட்டோவின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டுகிறது.
வித்தியாசமான சைக்காலஜி த்ரில்லரைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். பெண் வன் கொடுமைதான் படத்தின் மையம். ஆனால், அதை அழுத்தமாகப் பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார். சில குறிப்பிட்ட நீண்ட காட்சிகளுடன் படம் முடிந்துவிடுகிறது. எந்த விதமான திருப்பமும் இல்லாதது குறை.
கூர்மன் - கூர்ந்து எழுதியிருக்கலாம்…