தினமலர் விமர்சனம்
மூடர் கூடம் ராஜாஜி, காமெடி காளி வெங்கட், நஸ்ரியா லுக்கில் இருக்கும் புதுமுகம் வர்ஷா உள்ளிட்டோர் நடிக்க, கே.ராஜீவ் பிரசாத்தின் இயக்கத்தில் முற்றும் புதுசாக வெளி வந்திருக்கும் ஆக்ஷ்ன் த்ரில்லர் சஸ்பென்ஸ் படம் தான் சதுரன்.
சதுரன் படக்கதைப்படி, சிட்டியில் அடுத்தடுத்து ஒரு சப் இன்ஸ்பெக்டரின் கொலை உள்ளிட்ட மூன்று கொலைகள் ஒரே நாளில் நடக்கிறது. அந்த மூன்று கொலைகளுடனும் ஆட்டோ ஒன்றும் சம்பந்தப்பட்டிருக்கிறது. தீர விசாரிக்காமல், அந்த கொலைகளுக்கு காரணம் சற்றுமுன், தன் மிதமிஞ்சிய காமபுத்தியால் தான் நிகழ்த்த இருந்த கொடூரமான ஒருதவறை தட்டிக் கேட்ட அந்த ஆட்டோவின் டிரைவர் தான்... என, தனக்கு பிடிக்காத ஆட்டோ டிரைவரை அந்த கொலைகளில் கோர்த்து விட்டு குளிர் காய பார்க்கிறார் ஏரியா இன்ஸ்பெக்டர் .
ஆனால், அந்த ஆட்டோ டிரைவருக்கோ கொலையாளிகளின் லிஸ்டில் அடுத்தடுத்து இருப்பது யார் என தெரிய வருகிறது. அதனால் அதிர்ச்சியாகும் அவர், கொலை பாதகர்களின் பட்டியலில் இருக்கும் தன் காதலியையும், தந்தையையும் காப்பாற்ற ஆட்டோ நண்பர்கள் உதவியுடன் அதிரடியாக போராடுகிறார். ஒரு பக்கம் துப்பாக்கியும் கையுமாக போலீஸ் வேறு துரத்துகிறது!
இந்த போராட்டத்தில் ஹீரோவுக்கு வெற்றி கிடைத்ததா? காதலியையும், தன் அப்பாவையும் கொலை வெறியர்களிடமிருந்து ஹீரோ காபந்து செய்தாரா? அடுக்கடுக்கான கொலைகளுக்கு காரணம் என்ன? என்பதை ஹீரோ கண்டுபித்தாரா.. ? அதற்குள் முரட்டுபோலீஸ் ஹீரோவை போட்டு தள்ளியதா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது சதுரன் படத்தின் மீதிக்கதை ... (அப்படியே சதுரன் எனும் தலைப்பிற்கான காரண, காரியத்தையும் சற்றே விலக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! )
நாயகர் ராஜாஜி, ஆட்டோ டிரைவராக ஆரம்பத்தில் அமைதி காப்பதிலும், அதன்பின் அதிரடியில் இறங்குவதிலும் அசால்ட்டாக அசத்தியுள்ளார்! லவ், ஆக்ஷ்ன், சென்டிமெண்ட் எல்லாமும் ராஜாஜிக்கு இயல்பாய் வருவது ப்ளஸ்!
நாயகி வர்ஷா, நஸ்ரியா சாயலில் தெரிவது சரி... அதற்காக அடிக்கடி உதட்டை சுழித்து அஷ்ட கோணலாக்குவதெல்லாம் ரொம்பவும் ஒவர். அம்மணி, நஸ்ரியாவின் இடத்தினை இது மாதிரி உதட்டு சுழிப்பு கோணங்கி தனங்களில் அல்லாமல் நடிப்பில் பிடிக்கட்டும் .
நாயகரின் ஆட்டோ கூட்டாளியாக வந்து அகால மரணமடையும் காளி வெங்கட் தனக்கு காமெடி மட்டுமல்ல குணச்சித்திரமும் வரும் என ஸ்கோர் செய்திருக்கிறார். பேஷ், பேஷ்!
மொட்டை தலை கெட்ட போலீஸின் காமமும், குரோதமும், கோபமும் செம... இது போன்ற பாத்திரங்களின் வாயிலாக நம்மூர் போலீஸ்க்கு இப்படியும் ஜனங்களிடம் நாம நடந்துக்கலாமோ? எனும் ஐடியாக்களை நம் கிரியேட்டர்கள்...ஏற்றி விடாமல் இருந்தால் சரி என்பதே நம் ஆதங்கம்!
பலிகடா சப் -இன்ஸ்" ஸாக சேரன்ராஜ், அவரது டிரைவராக, இளம் போலீஸாக வரும் மணி எனும் மதன், நாயைத் தேடி நாயகருடன் ஓடும் பாவா லட்சுமணன் கோஷ்டி... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்!
மோனிக்குமாரின் இருட்டிலும் மிளிரும் , ஒளிரும் ஒளிப் பதிவு , ரிஷால் சாயின் கதைக்கு ஏற்றபடி மிரட்டும், உருட்டும் பின்னணி இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டு கள் படத்திற்கு பக்கபலம்!
மொத்தத்தில் கே.ராஜீவ் பிரசாத்தின் எழுத்து, இயக்கத்தில் பணத்திற்காகவும், பரிசோதனை முயற்சிக்காகவும் மருத்துவ துறையில் நடைபெறும் "பகீர் குற்றங்களை பக்காவாக பறை சாற்றியிருக்கும் "சதுரன் நிச்சயம் சாதாரணமானவன்... அல்ல., சாதனையாளன்!"
-------------------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
வயதான பாட்டி, ஒரு போலீஸ் அதிகாரி, தெருக்கூத்து நடிகர், ஓய்வு பெற்ற ஆசாமி நால்வரும் ஒரு மருத்துவமனைக்கு கேன்சருக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். புதிய மருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்நிலை பற்றிய ரிப்போர்ட்டில் ஏதோ தவறு இருப்பதை, அங்கு லேட் ரிப்போரட்டில் ஏதோ தவறு இருப்பதை, அங்கு லேட் டெக்னீஷியனாக இருக்கும் கதாநாயகி ஜனனி டெக்ஜீஷியனாக இருககும் கதாநாயகி ஜனனி (வர்ஷா) கண்டுபிடிக்கிறாள். அவள் சந்தேகப் படுவதற்காகவே, மருத்துவமனை பெரிய டாக்டர்கள் அவளை வேலையை விட்டு தூக்கி விடுகின்றனர். பின்னர் ஒரு பியூட்டி பார்லரில் வேலைக்குச் சேருகிறாள். அங்கேதான் ஹீரோ தீனாவை (ராஜாஜ்) சந்திக்கிறார்.
தாங்கள் நோயாளிகளுக்கு கொடுத்த மருந்துதான் தவறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகமும், மருந்து தயாரிக்கும் கம்பெனியும் சேர்ந்து நான்கு நோயாளிகளைக் கொன்று, எந்த தடயமும் இல்லாமல் செய்வது பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவர்களுக்காக இந்தக் கொலைகளைச் செய்யும் இருவர் கர்மசிரத்தையோடு உயிரை எடுக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் இருவரின் அறிமுகமே அதிர வைக்கிறது.
தீனாதான் கொலையாளி என்று தனக்குத் தானே முடிவுசெய்து செயல்படுகிறார் இன்ஸ்பெக்டர் பசுபதி (ராஜூ முருகன்). ஆட்டோவில் தனியாக வரும் மூன்று இளம்பெண்களிடமும், கால்சென்டருக்கு ஆட்டோவில் செல்லும் பெண்ணிடமும், பைக்கில் காதலனுடன் செல்லும் இளம் பெண்களிடமும், இன்ஸ்பெக்டர் பசுபதி, அத்துமீறி முயற்சிக்கும்போது தீனா தடுக்கிறார். அதனாலேயே அவருக்க தீனாவின் மீது கோபம் ஏற்படுகிறது. தொடர்ந்து கொலைகள் நடக்கும்போது தீனாவை அதில் மாட்டிவிடத் துடிக்கிறார்.
தீனாவுக்கும், இன்ஸ்பெக்டர் பசுபதிக்குமிடையே ரேஸ், லாஜிக் உதைக்காத, சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள்.
ராஜாஜ் நடிப்பில் வேகம், துடிப்பு காட்சிக்கு ஏற்ற எமோஷன்களை நன்றாக வெளிப்படுத்துகிறார். அறிமுகம் வர்ஷா, தீனாவை முதலில் உதாசீனப்படுத்திவிட்டு, பின்னர் அவனைப் புரிந்துகொண்டு உதவி செய்கிறார். போலீஸ் அதிகாரி பசுபதி ஒரு பக்கம்; கொலையாளிகள் ஒரு பக்கம் என்று தீனாவை போட்டுத் தள்ள துடிக்கும்போது, சாமர்த்தியமாகத் தப்பித்து, ஆபத்தில் இருக்கும் தன் தந்தையைக் காப்பாற்றும் சீன்களில் தீனா இஸ் குட், நல்ல சஸ்பென்ஸ் காட்சிகள்.
தீனா மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாமே ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் வேலை என்பதை புரிந்து கொள்ளும் இன்ஸ்பெக்டர் பசுபதி, தீனாவிடம் 'நீ எப்போவாவது போலீஸில் மாட்டினால், என் தம்பி என்று சொல்லிக்கோ' என்று சொல்கிறார். தியேட்டரில் பயங்கர கைத்தட்டல்.
கதை, திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் அமைத்திருக்கும் இயக்குநர் ராஜீவ் பிரசாத்துக்கு இது தான் முதல் படம். ஆபாசம் எதுவுமின்றி சமுதாயப் பொறுப்போடு, தொய்வில்லாமல் எழுதி இயக்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களின் நேர்த்தி, விறுவிறுப்பு தெரிகிறது. மருத்துவத்துறையில் நடக்கும் முக்கிய பிரச்னைகளைத் தனது முதல் படத்திலேயே தெளிவாகக் கையாண்டிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டலாம்.
சதுரன் - மிரட்டல்!