ஹாஸ்டல்,Hostel
Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன்
இசை - போபோ சசி
நடிப்பு - அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 28 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

மலையாளத்தில் 2015ல் வெளிவந்த வெற்றிப் படமான 'அடி காப்பியரே கூட்டாமணி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'ஹாஸ்டல்'. இப்படி ஒரு படம் மலையாளத்தில் எப்படி வெற்றி பெற்றது என்ற ஒரிஜனல் படத்தின் வெற்றி பற்றியையே யோசிக்க வைத்துவிட்டது இந்த தமிழ் ரீமேக்.

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை மற்ற மொழியில் கெடுக்காமல் இருப்பதே ஒரு கலைதான். தமிழில் அவ்வப்போது இப்படி ரீமேக் செய்கிறோம் எனக் கிளம்பி வந்து மற்ற மொழிப் படங்களை எதற்குத்தான் இப்படி பெயரைக் கெடுக்க வைக்கிறார்களோ ?.

ஒரு ஆண்கள் ஹாஸ்டலுக்குள் இளம் பெண் வேண்டுமென்றே செல்கிறார். ஆனால், சூழ்நிலை காரணமாக அங்கு மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி வெளியேறினார் என்பதுதான் படத்தின் கதை. ஆண்கள் ஹாஸ்டலுக்குள் நுழைந்த இளம் பெண்ணாக பிரியா பவானி சங்கர். ஆண்கள் ஹாஸ்டலில் கல்லூரி மாணவராக அசோக் செல்வன். ஸ்ட்ரிக்டான வார்டன் நாசர் கண்களில் படாமல் பிரியாவைத் தப்பிக்க வைக்க அசோக் செல்வன் என்ன செய்கிறார் என்பதை நம் பொறுமையை சோதிக்கும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

அசோக் செல்வன், சதீஷ் இவர்களை எல்லாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் கல்லூரி மாணவர்கள் போல தெரியவில்லை. அதிலும் சதீஷ், அங்கிள் போலவே இருக்கிறார். ஸ்ட்ரிக்ட்டான வார்டனாக நாசர். ஏற்கெனவே பார்த்துப் பழகிய டெம்ப்ளேட் நடிப்பில் நாசர். அவரது உதவியாளராக முனிஷ்காந்த். காமெடி செய்கிறேன் என இவர் செய்வதெல்லாம் தாங்க முடியலடா சாமி ரகம். இடைவேளைக்குப் பின் படம் திடீரென பேய்ப் படமாக மாறிவிடுகிறது. பேயாக அறந்தாங்கி நிஷா. ஹாஸ்டலுக்குள் மகளைத் தேடி வரும் ரவி மரியா அன்ட் கோவை பயமுறுத்தி ஓட ஓட விரட்டுகிறாராம்.

“தெகிடி, ஓ மை கடவுளே” என ஒரு சில படங்களில் நம்பிக்கை கொடுத்த அசோக் செல்வன் எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட படங்களைத் தேர்வு செய்தார் என்பதுதான் தெரியவில்லை. அடிக்கடி ஓடி ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு எந்த நடிப்பையும் கொடுக்க முடியாமல் தவிக்கிறார் பிரியா பவானி சங்கர்.

ஒரே ஒரு ஹாஸ்டல். அதையும் செட் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. திரும்பத் திரும்பக் காட்டினாலும் எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கிறது. இவ்வளவு குட்டியான ஹாஸ்டல் இந்த உலகத்தில் வேறு எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆரம்பம் முதல் முடிவு வரை படமே தள்ளாடிக் கொண்டிருக்கும் போது மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தை எப்படி காப்பாற்ற முடியும்.

இந்த படத்தை எடுத்த செலவிற்கு ஒரு வெப் சீரிஸாவது எடுத்திருக்கலாம்.

ஹாஸ்டல் - டல்

 

ஹாஸ்டல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஹாஸ்டல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓