ஓ மை டாக்,Oh My Dog
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சரோவ் சண்முகம்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - ஆர்னவ் விஜய், அருண் விஜய், மகிமா நம்பியா
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக வருவதேயில்லை. எப்போதோ ஒரு முறை தான் இம்மாதிரியான படங்கள் வருகின்றன. அது போலவே விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் இராம நாராயணன் காலத்தோடு போய்விட்டது. இந்த இரண்டு குறைகளையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்துள்ளது இந்தப் படம்.

இயக்குனர் சரோவ் சண்முகம் குழந்தைகளுக்காக என்றே இந்தக் கதையை உருவாக்கி அவர்களுக்கு எது பிடிக்கும் என்பதை மனதில் வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். தேவையற்ற பிரம்மாண்டங்கள் எதுவும் இல்லாமல் படமும் அதன் இயல்புத் தன்மையிலேயே பயணிக்கிறது.

ஊட்டியில் வசிக்கும் சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவர் அருண் விஜய். மனைவி மகிமா நம்பியார், பள்ளியில் படிக்கும் மகன் ஆர்னவ் விஜய், அப்பா விஜயகுமார் ஆகியோருடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகன் ஆர்னவ்வை கடன் வாங்கி சர்வதேசப் பள்ளியில் படிக்க வைக்கிறார். ஆர்னவ் பார்வையற்ற ஒரு நாயைத் தூக்கி வந்து 'சிம்பா' எனப் பெயர் வைத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். ஆர்னவ்வின் பயிற்சியால் சிம்பா நல்ல திறமையுடன் வளர்கிறது. அதற்கு பார்வை வரவழைத்து நாய் கண்காட்சியில் கலந்து கொள்ள வைக்கிறார். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளப் போகும் போது பணக்காரரான வினய், அவரது நாய் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சிம்பாவிற்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். அதை மீறி சிம்பா வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

குழந்தை நட்சத்திரம் ஆர்னவ்வின் அறிமுகப் படம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். கலைக் குடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபித்துள்ளார். அந்த வயதில் சிறுவர்களுக்கு வரும் கோபம், பாசம், சுட்டித்தனம், நம்பிக்கை என பலதரப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். அனைத்தையும் எளிதில் சமாளித்து இயல்பாய் நடித்திருக்கிறார்.

ஆர்னவ்வின் அப்பாவாக அருண் விஜய். பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத ஒரு கதாபாத்திரம். இருந்தாலும் தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் பெருந்தன்மையுடன் நடித்திருக்கிறார். ஆர்னவ்வின் அம்மாவாக மகிமா நம்பியார். அருண் விஜய்க்கே அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத போது மகிமாவிற்கு எப்படி முக்கியத்துவம் இருக்கும். கிடைத்துள்ள காட்சிகளில் பாசமான அம்மாவாய் முத்திரை பதித்துள்ளார். ஆர்னவ்வின் தாத்தாவாக விஜயகுமார், நடுத்தரக் குடும்பத்து தாத்தாவை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

பணக்கார வில்லனா, கூப்பிடுங்கள் வினய்யை என்றாகிவிட்டது. அவரும் தமிழைத் தப்பும் தவறுமாய் உச்சரித்து நடிக்கிறார். அவ்வளவு பெரிய கோடீஸ்வரருக்கு கோமாளித்தனமாய் இரண்டு உதவியாளர்கள்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் இந்தக் காலக் குழந்தைகளுக்காக ஆங்கிலக் கலப்புடன் சில பாடல்கள். கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை அப்படியே பதிவு செய்துள்ளது. தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் படத்தொகுப்பு செய்திருக்கிறார் மேகநாதன்.


பெரிய திருப்பங்கள், பரபரப்புகள் இல்லாத எளிமையான ஒரு படம். நம்பிக்கை வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஆர்னவ் கதாபாத்திரம் மூலமாகவும், சிம்பா மூலமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். குழந்தைகளுக்கும், நாய்ப் பிரியர்களுக்கும் பிடிக்கும்.

ஓ மை டாக் - செல்லக் குட்டி

 

ஓ மை டாக் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஓ மை டாக்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓