ஊமைச் செந்நாய்,Oomai Sennaai
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
இயக்கம் - அர்ஜுனன் இளங்கோவன்
இசை - சிவா
நடிப்பு - மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி
வெளியான தேதி - 10 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.25/5

வித்தியாசமான கதைகளைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதனால் பலரும் பல விதமான கதைகளைச் சொல்ல முயற்சித்து வருகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் பெறுகிறார்கள், சிலர் தோல்வியும் பெறுகிறார்கள். இந்த 'ஊமைச் செந்நாய்' படத்தை வித்தியாசமான கதையாகக் கொடுக்க முயற்சித்தாலும் மனதில் பதியும்படி சொல்ல தடுமாறியிருக்கிறார்கள்.

படத்தில் முக்கியமானது கதாபாத்திர வடிவமைப்பு. ஆனால், படத்தில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்குமான கதாபாத்திர வடிவமைப்பை அவர்கள் யார், என்னவென்பதை ஆரம்பத்திலேயே சொல்லாததால் அவர்கள் மீது நமக்கு பரிதாபம் வர மறுக்கிறது.

படத்தின் நாயகன் மைக்கேல் தங்கதுரை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை அவரது முதலாளி கஜராஜ் ஒப்படைக்கிறார். அந்த வேலையைச் செய்து முடிக்கும் சமயம், முதலாளி தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்து அந்த வேலையிலிருந்து விலகுகிறார். அதோடு ஜெயக்குமாருக்கும் போன் செய்து இந்த பின் தொடர் வேலை பற்றி சொல்லிவிடுகிறார். இதனால் ஆத்திரமடையும் கஜராஜ், அவரை உளவு வேலை பார்க்கச் சொன்னவர்கள் மைக்கேலின் காதலி சனம் ஷெட்டியைக் கடத்தி கொலையும் செய்துவிடுகிறார்கள். காதலியின் கொலைக்கு பழி வாங்கத் துடிக்கிறார் மைக்கேல். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எதையோ பறிகொடுத்தவராக, சோகமே உருவானவராக மட்டுமே படம் முழுவதும் வலம் வருகிறார் மைக்கேல். அவர் ஒரு டாக்டராம். ஏதோ ஒரு கொலைக் குற்றத்தில் கைதாகி சிறை சென்றவர் என எங்கோ ஒரு இடத்தில் வசனம் வருகிறது. அதை வைத்து மட்டுமே அவர் யார் என ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பழி வாங்கும் சமயத்தில் மட்டும் கொஞ்சம் கோபத்தைக் காட்டுகிறார்.

சனம் ஷெட்டி, கொஞ்ச நேரமே வந்து போகிறார். மைக்கேலைப் பார்த்ததுமே அவர் ஒரு டாக்டர் தான் என கண்டுபிடித்து விடுகிறார். இருவரும் அடுத்த சில காட்சிகளில் காதலர்களாகி விடுவது வழக்கமான தமிழ் சினிமா.

படத்தில் அமைச்சரைத்தான் வில்லனாகக் காட்ட வேண்டும். ஆனால், அவரை அதிகம் காட்டாமல் அவர் சொன்ன வேலைகளைச் செய்யும் போலீஸ் அதிகாரி அருள் சங்ககரைத்தான் அதிகம் காட்டுகிறார்கள். அவர் சொன்ன வேலைகளைச் செய்ய இரண்டு ரவுடிகள் என அவர்கள்தான் படத்தில் அதிகம் வருகிறார்கள்.

அரசியல் மோதல், உளவு பார்ப்பது, ஆள் கடத்தல், ரவுடியிசம் என எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. எதிலும் ஒரு அழுத்தமும், முழுமையும் இல்லாததால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஊமைச் செந்நாய் - பதுங்கவுமில்லை, பாயவுமில்லை

 

பட குழுவினர்

ஊமைச் செந்நாய்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓