என் 4,N 4

என் 4 - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - தர்மராஜ் பிலிம்ஸ், பியான்ட் த லிமிட் கிரியேஷன்ஸ்
இயக்கம் - லோகேஷ் குமார்
இசை - பாலசுப்பிரமணியன்
நடிப்பு - மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அப்சல் அமீது, வினுஷா தேவி
வெளியான தேதி - 24 மார்ச் 2023
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல சிறிய படங்கள் வெளிவர முடியாமல் சிக்கித் தவித்தன. அப்படி முடங்கிய படங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சம் கால தாமதத்திற்குப் பிறகு இப்போது வெளியாகி உள்ளது. வட சென்னையை கதைக்களமாக வைத்து வெளிவந்துள்ள மற்றுமொரு படம்.

'என் 4 (N 4)' என்பது சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகக் காவல் நிலையம். அந்த காவல்நிலைய எல்லைக்குள் நடக்கும் கதைதான் இந்தப் படம். வட சென்னை கடற்கரை சார்ந்த கதை என்றாலே அந்தக் கதைக்களத்திற்குள் யதார்த்தமான ஒரு வாழ்வியல் வந்துவிடும். அதற்கேற்றபடி பொருத்தமான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து அந்த வாழ்வியலை கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் லோகேஷ் குமார்.

அனாதைகளாக இருந்த மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அப்சல் அமீது, வினுஷா தேவி ஆகியோரை சிறு வயதிலியே எடுத்து வளர்க்கிறார் காசிமேடு பகுதியைச் சேர்ந்த வடிவுக்கரசி. மைக்கேல் - கேப்ரில்லா, அப்சல் - வினுஷா ஆகியோர் காதலர்கள். ஒரு நாள் இரவில் வினுஷாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரைச் சுட்டவர்கள் யார் என்று தெரிந்த கொள்ள அவர்களை மைக்கேல், அப்சல் தேட ஆரம்பிக்கிறார்கள். வினுஷாவை எதற்காகக் கொன்றார்கள், அவர் உயிர் பிழைத்தாரா, அவரைக் கொன்றவர்களை மைக்கேல், அப்சல் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையுடன் மட்டும் திரைக்கதையை நகர்த்தியிருந்தால் படம் சுவாரசியமாக நகர்ந்திருக்கும். ஆனால், திரைக்கதையில் வேறு சில கிளைக் கதைகள், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மையக் கதையிலிருந்து படம் விலகி, யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்பதிலும் தடுமாறுகிறது. நேர்மையான இன்ஸ்பெக்டர் அனுபமா குமார், அவரது நோய்வாய்ப்பட்ட மகன் கதை ஒரு பக்கம், போதைக்கு அடிமையாகி சுற்றித் திரியும் பணக்கார நண்பர்கள் கதை மற்றொரு பக்கம் என இரண்டு கிளைக்கதைகளும் படத்தில் உண்டு.

கதாபாத்திரங்களும், அதற்கான நடிகர்கள் தேர்வுகளும் படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அப்சல் அமீது, வினுஷா தேவி, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அனுபமா குமார், பாட்டி வடிவுக்கரசி, போதை அடிமைகளாகத் திரியும் பணக்கார இளைஞர்கள் என ஒவ்வொருவருமே அவர்களது கதாபாத்திரத்தின் எல்லைக்குள் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். யாருடைய நடிப்பும் மிகையில்லாமல் இருக்கிறது.

காசிமேடு கடல் பகுதியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவ்யன்க். அவரது பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இரண்டரை மணி நேரப் படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். அதற்கு படத்தொகுப்பாளர் டான் சார்லஸ் மனது வைத்திருக்கலாம்.

ஒரு இன்ஸ்பெக்டரின் நேர்மை எப்படி தடுமாறுகிறது, எந்தத் தப்பும் செய்யாதவர்கள் வாழ்க்கையில் தடுமாறுவது, தவறு செய்பவர்கள் தப்பிப்பது இதுதான் படத்தில் சொல்ல வரும் விஷயம். கிளைமாக்சில் தவறு செய்பவர்களைத் தண்டிக்காமல் தப்பே செய்யாத ஒருவரைக் கொல்வது பொருத்தமாக இல்லை.

என் 4 - காவல் Vs காதல்

 

என் 4 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

என் 4

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓