விமர்சனம்
----------------------------------------------------------------------
கல்கி சினி விமர்னம்
பொதுவாக வெற்றிபெற்ற பிறமொழிப் படங்களிலிருந்து கதையை அரைகுறையாக - லேசாக உருவிக் குத்துப்பாட்டு, வன்முறை, அபத்த நகைச்சுவை, தனிமனிதத் துதி, ஒற்றையாளாய் கும்பலையே துவம்சம் செய்வது என்று இன்னபிறவற்றைக் குழைத்துக் கலந்து கட்டியாகப் படம் தருவது பல தமிழ்ப்பட இயக்குநர்களின் வாடிக்கை.
நேர்மையாக, ஹாலிவுட் SAW படத்தின் இன்ஸ்பிரேஷன்(?) தான் சதுரம்-2 என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதா கிருஷ்ணன்.
பல கோடி சம்பள நடிகர் பட்டாளம், தண்ணீராய் - மன்னிகவும் - காற்றாய்ச் செலவழித்த உலக மகா செட்டுகள், வெளி நாடுகளில் எடுத்த ஆபாச நடனங்கள் இவையேதும் இல்லாமல் புது முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வரவேற்போம்.
ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு, மிரட்டும் கார்ட்டூன்கள், அச்சமூட்டும் பாடல் வரிகள் எனப் படத்தின் ஆரம்பமே ஓர் எதிர்பார்ப்பை ஊட்டிவிடுவதென்னவோ நிஜம்.
சதுரமான அறையில் கதை நடக்கிறது. சரி, அதென்ன பெயரில் சதுரத்துக்குப் பிறகு 2? அந்தச் சதுரத்துக்கே வெளிச்சம்!
படத்தில் யோக் ஜாப்பியின் மூக்கைப் போலவே நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது. அவருடன் அடைபட்டிருக்கும் போட்டோகிராபர் ரியாஸும் சோடைபோகவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரே அறை - ஒரே மாதிரியான வசனங்கள் - ஒரே மாதிரி பீதியை வெளிக்காட்டும் நடிப்பு அலுப்புத்தட்டுகிறது.
தவறு செய்பவர்கள் திருந்தி வாழாவிட்டால் மரணமே பரிசு என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது படம்.
பெயர் காட்டும்போது ஒலிப்பதைத் தவிர வேறு பாடல்கள் இல்லை. படத்தில் அதற்கான தேவையும் இல்லை. ஜேம்ஸ் வான் இயக்கிய SAW பட வரிசையின் கன்னாபின்னா வெறறிக்குக் காரணம், விதவிதமான நூதன முறைகளில் கொலைகள் செய்யப்படுவதுதான்.
இங்கிருக்கும் சூழலையும் சென்சாரையும் அனுசரித்துக் கொலைக்காட்சிகளை அடக்கியே வாசித்திருக்கின்றனர். ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால் SAW பார்த்த ரசிகர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும்.
கடந்த காலமும் நிகழ்காலமும் சட்சட்டென்று மாறுவதைக் கூடுமானவரை குழப்பம் இல்லாமல் தந்திருக்கிறார் எடிட்டர். ஆனால் அளவுக்கதிகமான ஃப்ளாஷ்பேக்குகள் பாத்ரூம் போகவும், பாப்கார்ன் சாப்பிடவும் ரசிகர்களை வெளியே அனுப்பி விடுகிறதே?
சதுரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல என்பார் சுஜாதா.
இந்தப் படத்தக்கு வரிவிலக்கு கிடைத்ததா?
திரையரங்கில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ரசிகைகள் சீதாலட்சுமி, சசிகலா, லட்சுமி, பட்டம்மாள் மற்றும் புனிதவதி கியோரின் ஒட்டுமொத்த கருத்து: தப்பு செய்யறவாளைத் தண்டிக்க மேலே ஒருத்தன் பார்த்துண்ட்ருக்கான்றத நன்னா சொல்லியிருக்கா. தப்பு செய்யறவாளுக்குத் தண்டனை உண்டுன்னும் அழுத்தமா சொல்லியிருக்கா. படம் நன்னா இருக்கு.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!