வர்த்தமானம் (மலையாளம்),Varthamanam

வர்த்தமானம் (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : பென்சி புரொடக்சன்ஸ்
டைரக்சன் : சித்தார்த் சிவா
இசை : பண்டிட் ரமேஷ் நாராயணன் & ஹேசம் அப்துல் வஹாப்
நடிப்பு : பார்வதி, ரோஷன் மேத்யூ, சித்திக் மற்றும் பலர்
வெளியான தேதி : 12 மார்ச் 2021
நேரம் : 1 மணி 58 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.5/5

டில்லியில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக படிக்கிறார் இஸ்லாமியரான பார்வதி. சக மாணவர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட நீதிக்காக போராடும் ரோஷன் மேத்யூ உள்ளிட்ட சில மாணவர்களுடன் நட்பாகிறார்.. உடன் படிக்கும் மாணவியின் சகோதரன், திருமணமான சில நாட்களிலேயே சாதி பிரச்சனையால் கொல்லப்பட, அவர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் ஒன்றை துவங்குகிறார்கள். இதுகுறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பேராசிரியர் சித்திக்கின் உதவியுடன் நாடகம் ஒன்றையும் பல்கலைகழகத்தில் நடத்த திட்டமிடுகின்றனர்.

ஆனால் இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்களும், பார்வதியின் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அதேசமயம் இன்னொரு போராட்ட குழுவை சேர்ந்த சிலரும் பார்வதிக்கு எதிராக அணி திரள்கின்றனர். போராட்டத்தின்போது பார்வதி பேசிய வார்த்தைகளை திரித்து, அவர்மீது தேச துரோக குற்றம் சுமத்தி, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கின்றனர். ஒருபக்கம் குறித்த சமயத்தில் நாடகத்தை நடத்த முயற்சி செய்துகொண்டே, இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயற்சிக்கின்றனர் பார்வதி அண்ட் கோ. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பார்வதி போலீசார் கையில் சிக்குகிறார். இறுதியில் நடந்தது என்ன..?

தேசிய விருதுபெற்ற இயக்குனர் சித்தார்த் சிவா, நிவின்பாலி நடித்த சகாவு படத்திற்கு பிறகு இயக்கியுள்ள படம் இது. டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை ஆகியவற்றை கலந்துகட்டி இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

பார்வதி என்றாலே மிகப்பெரிய நடிப்பரசி என்கிற தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டதால், அதை மனதில் கொண்டு இந்தப்படத்தில் பைசா என்கிற இஸ்லாமிய மாணவி கதாபத்திரத்தில் நடிக்க அழைத்துள்ளார்கள் போலும். ஆனால் படத்தில் அப்படி அவர் கெத்து காட்டி நடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் என பெரிதாக எதுவும் இல்லை. சக மாணவர்களோடு ஒருவராக வருகிறார் கேண்டீனில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார், போராட்டம் குறித்து சுவாரஸ்யம் இல்லாமலேயே பேசுகிறார். அவ்வளவுதான். போராட்டத்தில் சக மாணவர்கள் அவரிடம் மைக் கொடுத்து பேச சொன்னதும் அவர் போராட்ட வீராங்கனையாக மாறுவது எல்லாம் அக்மார்க் சினிமாத்தனம்.

சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்த ரோஷன் மேத்யூவுக்கு இதில் கதாநயகன் புரமோஷன். படம் முழுதும் எந்நேரமும் துடிப்புடனேயே வலம் வருகிறார். மாணவர்களுக்கு உதவும் பேராசிரியராக வரும் சித்திக்கின் பண்பட்ட நடிப்பு ரசிக்க வைக்கிறது.

பார்வதியின் ஹாஸ்டல் தோழியின் சகோதரன் திருமணத்திற்காக சக மாணவர்கள் உத்தரகாண்ட் செல்லும் காட்சிகள் சற்றே நீளம் தான் என்றாலும், சம்மர் ட்ரிப் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் அழகப்பன்.. மற்றபடி கல்லூரி வளாகம், போராட்ட மாணவர்களின் விவாதம், கல்லூரி கேண்டீன் என காட்சிகள் மாறிமாறி ஒரே ஏரியாவில் பயணிப்பது அலுப்பையே ஏற்படுத்துகிறது.. அதிலும் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என நம்மை பரபரப்பாக்கும் அந்த க்ளைமாக்ஸ் சப்பென முடிந்துபோவது ஜீரணிக்கவே முடியாத ஒன்று.

மீடியாக்களும், சில மத அமைப்புகளும் நினைத்தால், சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவரையே தேச துரோகியாக சித்தரித்து விட முடியும் என்பதற்கான சாத்திய கூறுகளை அலசியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த் சிவா. இவரது படங்கள் தொடர்ந்து போராட்ட களத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கி வருவதாலோ என்னவோ, இந்தப்படமும் ஒரு டாக்குமென்ட்ரி படம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது.. க்ளைமாக்ஸுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னதாக மட்டுமே ஒரு பரபரப்பை உருவாக்கி, இது திரைப்படம் தான் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். அதனால் இந்த வர்த்தமானம் நம்மிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத போராட்ட களமாகவே மறைந்து போகிறது.

வர்த்தமானம் : புலித்தோல் போர்த்திய பூனை

 

பட குழுவினர்

வர்த்தமானம் (மலையாளம்)

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓