காக்டெய்ல்,Cocktail

காக்டெய்ல் - பட காட்சிகள் ↓

Advertisement
1

விமர்சனம்

Advertisement

நடிப்பு - யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், ராஷ்மி கோபிநாத்
தயாரிப்பு - பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - ரா.விஜயமுருகன்
இசை - சாய் பாஸ்கர்
வெளியான தேதி - 10 ஜுலை 2020
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 1/5

ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்கள் நம் பொறுமையை இப்படியா சோதிக்க வேண்டும். ஏற்கெனவே அப்படி வெளிவந்த படங்கள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் மற்றுமொரு ஏமாற்றமான படமாக வெளிவந்திருக்கிறது காக்டெயில்.

பல இளம் திறமைசாலிகள் யு டியூபில் 5 நிமிடம், 10 நிமிடம், 20 நிமிடம் என விதவிதமான எத்தனையோ நகைச்சுவை நிகழ்ச்சிகளை இந்தக் காலத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால், 2 மணி நேரத்திற்கு ஒரு படத்தை உருவாக்குபவர்கள் கொஞ்சமாகவாவது யோசித்து ஒரு நல்ல கதையையும், நகைச்சுவை வரும்படியான வசனங்களையும் உருவாக்க வேண்டாமா.

படத்தை ஓடிடி தளத்தில் போய் பார்த்தால் க்ரைம், காமெடி, மிஸ்டரி எனப் போட்டிருக்கிறார்கள். அது அனைத்தும் அந்தப் பெயருடன் மட்டும்தான் உள்ளது. இயக்குனர் விஜயமுருகன், படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பார்த்த பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும் ஒரு காட்சியிலாவது இருக்கிறதா என யோசித்திருக்க மாட்டார்களா?.

யோகிபாபு, கவின், மிதுன் மகேஷ்வரன், பாலா நால்வரும் நண்பர்கள். மிதுன் வீட்டில் அனைவரும் காக்டெயில் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குடித்துவிட்டு மட்டையாகி காலையில் எழுந்து பார்த்தால் வீட்டிற்குள் ஒரு பெண் பிணமாகக் கிடக்கிறாள். அது எப்படி வந்தது, அதை எப்படி அப்புறப்படுத்துவது என யோசித்து மூட்டையாகக் நள்ளிரவில் காரில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். இதனிடையே, காணாமல் போன பழங்கால முருகர் சிலை ஒன்றைக் கண்டுபிடிக்கும் விசாரணையில் இருக்கிறார் மிதுனின் வருங்கால மாமனார் இன்ஸ்பெக்டர் சாயாஜி ஷிண்டே. காணாமல் போன பெண் ஒன்றை கண்டுபிடிக்குமாறு அவரிடம் புகாரும் வருகிறது. இந்தப் பெண்தான் மிதுன் வீட்டில் பிணமாக இருந்த பெண் என்பதை சாயாஷி கண்டுபிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஓரளவிற்கு நகைச்சுவையான ஒரு கதையாக சொல்லிவிடலாம். ஆனால், அதை காமெடியாகவோ, பரபரப்பாகவோ கொடுக்க இயக்குனர் முற்றிலும் தவறவிட்டிருக்கிறார். யோகி பாபு என்ன பேசினாலும் சில சமயம் ரசிக்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் அவர் வேறு ஏதாவது பேசிவிடப் போகிறாரா என்று சொல்லுமளவிற்கு மொக்கை ஜோக்குகளாக அடிக்கிறார். போதாக் குறைக்கு பாலா. டிவி நிகழ்ச்சி போல ஏதாவது ஒன்று பேசிக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருமே வாயை மூடிக் கொண்டிருந்தாலே போதும் என்ற அளவிற்கு நமது பொறுமை சோதிக்கப்படுகிறது.

எங்கேயும் எப்போதும் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் கவனிக்கப்பட்டவர் மிதுன். இந்தப் படத்தில் முழுவதும் வந்தாலும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தில் பெண்கள் என சிலராவது இருக்க வேண்டுமே என யோகி பாபு, கவின், மிதுன் ஆகியோருக்கு ஆளுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கிறார்கள். அந்த மூன்று பெண்கள் மொத்தமாக மூன்று காட்சிகளில் வந்திருப்பார்கள்.

சாயாஜி ஷின்டே தமிழில் எப்போதாவது தான் நடிப்பார். இந்தப் படத்தில் ஏன் நடித்தார் என்றே தெரியவில்லை.

கிளைமாக்ஸ் கொஞ்ச நேரம் தவிர படம் முழுவதும் ஒரு சிறிய பிளாட்டில் தான் முழுவதும் நகர்கிறது. கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் அந்த பிளாட்டை கொஞ்சம் நன்றாகக் காட்ட கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தில் பாராட்ட வேண்டியது என்றால் இவர்களை மட்டும் தான்.

காக்டெயில், காணாமல் போன பெண், காணாமல் போன முருகர் சிலை என இந்த மூன்றையும் திரைக்கதையில் சரியாகக் கலக்காமல் கோட்டைவிட்டிருக்கிறார்கள்.

காக்டெய்ல் - வெறும் தண்ணி...

 

பட குழுவினர்

காக்டெய்ல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓