Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ட்ரான்ஸ் (மலையாளம்)

ட்ரான்ஸ் (மலையாளம்),Trance
01 மார், 2020 - 17:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ட்ரான்ஸ் (மலையாளம்)

நடிகர்கள் ; பஹத் பாசில், நஸ்ரியா, கௌதம் மேனன், செம்பான் வினோத், விநாயகன், சௌபின் சாஹிர், திலீஷ் போத்தன் மற்றும் பலர்
இசை ; ஜாக்சன் விஜயன் & சுசில் ஷ்யாம்
ஒளிப்பதிவு ; அமல் நீரத்
இயக்கும் ; அன்வர் ரஷீத்

உஸ்தாத் ஹோட்டல் என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து விட்டு எட்டு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் ஒதுங்கியிருந்த இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் என்பதால் இந்த படம் துவங்கப்பட்ட போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.. அதற்கேற்ப தீனி போட்டு உள்ளதா..? பார்க்கலாம்

கன்னியாகுமரியில் தன்னம்பிக்கை தரும் பேச்சாளராக இருக்கும் வாழ்க்கை வண்டியை ஓட்டும் பஹத் பாசில், தன் தம்பியின் மரணத்திற்கு பிறகு அங்கே வாழப்பிடிக்காமல் மும்பை வருகிறார். மும்பையில் அறிமுகமாகும் கௌதம் மேனன் மற்றும் செம்பான் வினோத் இருவரும் பஹத் பாசிலை மேடை பிரசங்கம் செய்யும் ஒரு பாதிரியாராக ஒரு மாற்றுகின்றனர். இவருக்கு பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர் திலீஷ் போத்தன்.. மதத்தின் பெயரை வைத்து கோடிகளில் சம்பாதிப்பது தான் கௌதம் மேனனின் திட்டம்.

ஆறு மாத பயிற்சிக்கு பின்பு மேடை பிரசங்கங்களில் வெளுத்து வாங்குகிறார் பஹத் பாசில். இயேசுவின் அருளால் அற்புதம் நிகழ்கிறது என மேடையிலேயே பலர் முன்னிலையில் சிலரின் நோய்களை குணமாக்கும் நாடகம் கட்சிதமாக நடந்தேறுகிறது. ஒரு கட்டத்தில் பஹத் பாசிலின் புகழ் அதிகமாக, கௌதம் மேனனின் கட்டுப்பாடுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட நினைக்கும் பஹத் பாசில் தனது பப்ளிசிட்டிக்காக டிவி பேட்டி ஒன்றில் பங்கேற்கிறார்.

அந்த நிகழ்ச்சி திடீரென லைவ் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் ஏதாவது ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார் பஹத் பாசில். ஆனால் சமயோசிதமாக அந்த சவாலை பஹத் பாசில் எதிர்கொண்டாலும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் கௌதம் மேனனின் கோபத்திற்கு ஆளாகி அவரால் தாக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறார். அதன்பிறகு வரும் நாட்களில் பஹத் பாசிலை ஒதுக்கி விட்டு அந்த இடத்தில் இன்னொரு நபரை ஒரு பாதிரியாராக உருவாக்கும் வேலையை ஆரம்பிக்கின்றனர் கௌதம் மேனனும் செம்பான் வினோத்தும்.

இதையடுத்து தான் போட்டிருந்த பாதிரியார் வேஷத்திலிருந்து பஹத் பாஸில் ஒதுங்கிக்கொண்டாரா..? அல்லது கௌதம் மேனன் ஆதிக்கத்திற்கு எதிராக கொடி பிடித்து தன்னை ஸ்திரமாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்தாரா.? இல்லை இந்த மோசடிகளுக்கு எல்லாம் முடிவுகட்டும் முயற்சியில் இறங்கினாரா என்பது மீதிக்கதை.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சில வீடியோக்களை பார்த்து இருப்போம்.. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் கிறித்துவ கூட்டங்களில் ஒரு பாதிரியாரின் கட்டளைக்கு ஏற்ப பலர் தங்களை மறந்த நிலையில் ஆடுவதும் ஓடுவதும் குதிப்பதுமாக, அதைவிட அந்தப் பாதிரியாரின் கைபட்டு சாத்தான் ஓடி போவதாகவும் சம்பந்தப்பட்ட நபர் அந்த மேடையிலேயே குணம் அடைவதாகவும் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இப்படி எல்லாம் நடக்குமா என்கிற ஆச்சரியமும் சந்தேகமும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அதன் பின்னணியில் என்ன மோசடி நாடகங்கள் நடக்கின்றன என்பதை பட்டவர்த்தனமாக உடைத்து இருந்திருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.

அதற்கேற்ப அவர் வடிவமைத்த கதாபாத்திரங்களில் அழகாக பொருந்தி கை கொடுத்திருக்கிறார்கள் பஹத் பாசில், கௌதம் மேனன் உள்ளிட்ட அனைவரும். மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சாளராக உலாவினாலும் எதார்த்த வாழ்வில் தடுமாற்றம் கொண்ட ஒரு வாலிபனாக ஆராம்ப காட்சிகளில் தனது இரண்டு விதமான மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் பஹத் பாசில்.. மேடை பிரசங்கம் செய்யும் பாதிரியாராக மாறிய பின்பு அவர் பிரசங்கம் செய்யும் காட்சிகளில் நிஜமான பாதிரியார் தோற்றார் போங்கள் என சொல்லும் விதமாக அசத்துகிறார் மனிதர்.

நீண்ட நாளைக்கு பிறகு நஸ்ரியாவை திரையில் பார்ப்பதே சந்தோசமாக இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார் என்றாலும், வாய்ப்பு குறைவுதான் என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். சிகரெட் பிடிக்கிறார், தண்ணி அடிக்கிறார் என்றாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் இல்லை என்பது வருத்தம் தான்.

மதத்தின் பெயரால் கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் நபர்களின் மொத்த உருவமாக காட்சி தருகின்றனர் கௌதம் மேனனும் அவரது பார்ட்னரான செம்பான் வினோத் ஜோஷும். பஹத் பாசிலுக்கு ட்ரெய்னிங் கொடுப்பதுடன் அவரது கூட்டங்களை மட்டுமல்லாமல் அவரையும் தன் இஷ்டப்படி வழிநடத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் திலீஷ் போத்தன் கச்சிதமாக நடித்து கைதட்டலையும் அள்ளுகிறார்.

உயிருக்கு போராடும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், கடவுள் வந்து காப்பாற்றுவார் என நம்பிக்கொண்டு ஏமாறும் கதாபாத்திரத்தில் விநாயகன், கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு சராசரி மனிதனின் பிரதிநிதியாக நம் பரிதாபத்தை அள்ளுகிறார். க்ளைமாக்ஸை இவர் கையில் கொடுத்திருப்பது சிறப்பு.

டிவி சேனலில் நெறியாளராக வந்து கதையின் திருப்புமுனைக்கு வித்திடும் அதிரடி கதாபாத்திரத்தில் சௌபின் சாஹிர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். பஹத் பாசிலின் தந்திரத்தில் சிக்கி மீண்டும் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் மேடையில் ஏறும் காட்சிகள் திக் திக் ரகம்.

ஜாக்சன் விஜயன் மற்றும் சுசில் சியாம் இருவரின் கூட்டணியில் பின்னணி இசை கதையின் மூடுக்கு ஏற்றவாறு பயணிக்கிறது. பெரும்பாலும் உள்ளரங்கு காட்சிகள்தான் என்றாலும் ஒளிப்பதிவாளர் அமல் நீரத் அதை கையாண்டிருக்கும் விதம் புதிதாக இருக்கிறது. இதில் ஆரம்பகட்ட கன்னியாகுமரி காட்சிகள் ஒரு ஹைக்கூ.

எட்டு வருடத்திற்கு பின் படம் இயக்க வந்திருப்பதால் தன் மீது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் தனக்கு தோன்றிய ஒரு விஷயத்தை, சமூகத்தில் நடக்கும் அவலத்தை தன் பாணியில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத். அவர் எடுத்துக்கொண்ட விஷயம் ஒரு விழிப்புணர்வு தரும் நடவடிக்கை என்றாலும் படத்தின் பெரும்பகுதி நேரம் ஒரே மாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பிடிப்பது போரடிக்கவே செய்கிறது.. குறிப்பாக நாமும் படம் முழுவதும் ஏதோ ஒரு கிறித்துவ கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. இந்த கதை நகரும் விதம் கதையில் இடையில் ஏற்படும் திருப்பங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருந்தாலும் படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். இருபது நிமிட காட்சிகளை குறிப்பாக கிறித்துவ கூட்ட காட்சிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி இருந்தால் படம் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் மதத்தை வைத்து வியாபாரம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்தப்படம் சவுக்கடி கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in