காளிதாஸ்,Kalidas

காளிதாஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன்
தயாரிப்பு - லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஸ்ரீ செந்தில்
இசை - விஷால் சந்திரசேகர்
வெளியான தேதி - 13 டிசம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் அதிகப் படங்கள் வெளியீடாக இந்த வாரம் அமைந்துள்ளது. 9 நேரடி தமிழ்ப் படங்கள் வரை இன்று வெளியாகின்றன. இப்படி அதிகமான படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது அவற்றில் எதைப் பார்ப்பது என்ற குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தையெல்லாம் மீறி இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நம்பிக்கை கொடுக்கும் படமாக காளிதாஸ் படம் அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் தன் முதல் படத்தையே ஆச்சரியப்படும் விதத்தில் கொடுத்திருக்கிறார். த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு பல படங்கள் வெளிவரும். ஆனால், அவற்றின் சஸ்பென்ஸை கடைசி வரை கொண்டு போக முடியாமல் பாதியிலேயே பார்வையாளனுக்கு அதை உடைத்துவிடுவார்கள். இந்தப் படத்தில் கடைசி வரை யார் குற்றவாளி என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. நாம் எதிர்பார்க்காத விதத்தில் உள்ளது. அதற்கேற்றபடி வலுவான திரைக்கதையை படத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர். சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற சிறந்த திரைக்கதைகளில் இந்தப் படத்தை ஒன்றாகத் தாராளமாகக் குறிப்பிடலாம்.

பரத் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். காதல் மனைவி ஆன் ஷீத்தல். தனது வேலைப் பளுவின் காரணமாக வீட்டில் அதிக நேரம் செலவிடாமல் இருப்பவர் பரத். அதனால், கணவர் பரத்துடன் அடிக்கடி சண்டை போடுகிறார் ஆன். பரத்தின் காவல் நிலைய எல்லைக்குள் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அது கொலையா அல்லது தற்கொலையா என விசாரிக்க ஆரம்பிக்கிறார் பரத். அசிஸ்டென்ட் கமிஷனர் ஆன சுரேஷ் மேனனும் இந்த விசாரணையின் பொறுப்பை ஏற்கிறார். கொலையாகத்தான் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை செல்கிறது. உண்மைக் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் மாடியிலிருந்து விழுந்து இறந்ததைக் காட்டி, பின் டாப் ஆங்கிளில் பறக்கும் காமிரா அப்படியே அந்தக் காட்சியை விழுங்க ஆரம்பிக்க, நாமும் படத்திற்குள் விழுந்து விடுகிறோம். ஒரு நேர்த்தியான திரைக்கதை, அதைக் காட்டும் விதமான உருவாக்கம், தேவையான சில கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு ஒரு படத்தின் தரத்தை மேலே தூக்கிவிடும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பரத்திற்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு கம் பேக் படமாக இருக்கும். முன்பை விட இப்போது மிகவும் மெச்சூர்டாக திரையில் தெரிகிறார். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரது ஸ்டேஷனில், வீட்டில் எப்படி இருப்பார், குற்றவாளிகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை அவ்வளவு இயல்பாக பிரதிபலித்திருக்கிறார் பரத். பாந்தமான நடிப்பு என்று சொல்வார்கள் அதற்கு காளிதாஸ் ஆக பரத்தின் நடிப்பு சரியான உதாரணம். இந்தப் படம் தந்த பெயரை விட்டுவிடாதீர்கள் பரத்.

இன்ஸ்பெக்டரின் மனைவியாக ஆன் ஷீத்தல். வீட்டிற்குள்ளேயேதான் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே கணவர் பரத்துடன் சண்டை, மாடி வீட்டிற்குக் குடி வரும் ஆதவ்வுடன் கொஞ்சம் காதல் என ஒரு வட்டத்திற்குள் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் அதை ரசித்து செய்திருக்கிறார்.

பேச்சு, நடை, உடை, மிடுக்கு என இரண்டாவது ஹீரோ போலவே தெரிகிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனன். தானா சேர்ந்த கூட்டம் படத்தின் கதாபாத்திரம் கொஞ்சம் ஞாபகப்படுத்தினாலும் இது அவருக்கான முக்கிய படமாகவும் அமைந்துள்ளது.

டிஜே என சொல்லிக் கொண்டு பரத் வீட்டின் மாடிக்கு பேச்சுலர் ஆக குடி வருகிறார் ஆதவ் கண்ணதாசன். இவருடைய கதாபாத்திரம்தான் வில்லன், இவரை எப்படி பிடிக்கப் போகிறார்கள், இப்படியெல்லாம் அத்து மீறி நடக்கிறாரே, பரத் மனைவியையும் கொலை செய்து விடுவாரோ என அதிர்ச்சியடைய வைக்கிறார் ஆதவ்.

மற்ற கதாபாத்திரங்களில் ஸ்டேஷன் சிறைக்குள் இருக்கும் தங்கதுரை கிடைத்த வாய்ப்பில் புளியமரத்து... என பழைய ஜோக்கை அடிக்காமல் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். கான்ஸ்டபிள் ஆக நடித்திருப்பவர் யதார்த்தமாய் நடித்து குறிப்பிட வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, எடிட்டர் புவன் சீனிவாசன் இயக்குனருக்கு மிகவும் பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள். ஒரு த்ரில்லர் வகைப் படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர்.

இப்படியெல்லாம் நடக்கிறதே, இதற்கு லாஜிக் இடிக்கிறதே, என யோசித்தால் அதற்கு கிளைமாக்சில் சரியான விடை கொடுத்திருக்கிறார் இயக்குனர். சில கொலைகள் இருந்தாலும் அதைக் கூட ரத்தம் தெறிக்காமல் ஒரு நீட் ஆன படத்தைக் கொடுத்த இயக்குனர் ஸ்ரீ செந்திலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

காளிதாஸ் - காப்பாற்றுவார்

 

காளிதாஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காளிதாஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓