தினமலர் விமர்சனம் » நெல்லை சந்திப்பு
தினமலர் விமர்சனம்
காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ்... என கலர்புல்லாக திரியும் நடுத்தர குடும்பத்து இளைஞன் ஹீரோ ரோஹித். அக்கா, அம்மா, அப்பா, நட்பு, காதல் என எல்லா தரப்பு பாசத்திலும், நேசத்திலும் நயவஞ்சகமில்லாமல் நனையும் அவரை நயவஞ்சமாக தீவிரவாதி முத்திரை குத்தி தீர்த்துகட்ட பார்க்கிறது போலீஸ். போலீஸின் பிடியில் இருந்து தப்பும் அவர், தன் மச்சானான மீடியா பார்ட்டியுடன் சேர்ந்து கொண்டு போலீஸீக்கும், இந்த சமூகத்திற்கு தரும் பாடம்தான் "நெல்லை சந்திப்பு" படம் மொத்தமும். போலீஸை எதிர்க்கும் ரோஹித்தும் அவரது குடும்பமும் அதனால் இழப்பதும் பெறுவதும் தான் "நெல்லை சந்திப்பு" படத்தின் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாமும்!
ஹீரோ ரோஹித், மற்றொரு நாயகர் பூஷன் இருவரும் புதுமுகங்கள் எனும் குறை தெரியாமல் தங்கள் பங்கை உணர்ந்து நடித்திருக்கின்றனர். அதிலும் ஹீரோ ரோஹித்திற்கு அப்பாவிதனத்தில் இருந்து ஆக்ரோஷ களத்திற்கு போகும் காட்சிகள் சவாலாக அமைத்து முதல் படத்திலேயே முத்தாய்ப்பான நடிப்பை அவரிடமிருந்து வெளிப்பட காரணிகளாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ரோஹித் பூஷன் மாதிரியே மேகா நாயர், தேவிகா, போலீஸ் அதிகாரிகள் பி.எல்.தேனப்பன், "சிட்டிசன்" சரவண சுப்பையா, மீரா கிருஷ்ணன், ராஜா உள்ளிட்டவர்களும் படத்தின் பெரும்பலம். ஆனால் முன்பாதியில் அக்காபாசம் எனும் பெயரில் மேகாநாயர் - ரோஹித் செல்ல சண்டைகள் அடிக்கடி போடுவதை சற்றே குறைத்து, பின்பாதியின் கவனிக்கத்தக்க கதையை இன்னும் விரிவாக சொல்லி இருந்தால் நெல்லை சந்திப்பு இன்னும் கவனிக்கத்தக்க விதத்தில் இருந்திருக்கும்!
யுகேந்திரன் வாசுதேவனின் இனிய இசை, சேவிலோ ராஜாவின் அழகிய ஒளிப்பதிவு என இன்னும் பல ப்ளஸ்பாயிண்ட்டுகளுடன் போலீஸ், அப்பாவி ஒருவனை தீவிரவாதி முத்திரை குத்தி தீர்த்து கட்ட முயன்றால் அதற்காக எந்தளவிற்கும் இறங்கி எது வேண்டுமானாலும் செய்யும் எனும் கனமான கதையை பின்பாதியில் சொல்லியிருக்கும் இயக்குநர் கே.பி.பி.நவீன், அதே கனத்தை முன்பாதியிலும் பதிவு செய்திருந்தார் என்றால் "நெல்லை சந்திப்பு" இன்னும் "நல்ல சந்திப்பு" ஆக ஜமாய்திருக்கும்! அவ்வாறு இல்லாதது முன்பாதியில் "நெல்லை சந்திப்பு" படத்தை "தொல்லை சந்திப்பு" ஆகவும், பின்பாதியை மனதை கொள்ளை கொள்ளும் சந்திப்பாகவும் ஆக்கியிருக்கிறது!
ஆக மொத்தத்தில், "நெல்லை சந்திப்பு" பின்பாதி "நல்ல சந்திப்பு!"