மிஸ்டர் லோக்கல்,Mr Local

மிஸ்டர் லோக்கல் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ராதிகா
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - ராஜேஷ்
இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி
வெளியான தேதி - 17 மே 2019
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் காதல் கதை என்றால் வழக்கமான அதே காதல் கதைகள் தான் வரும். அவற்றில் முக்காவல்வாசி காதல் கதைகள் தன்னை காதலிக்காத கதாநாயகியை கதாநாயகன் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகத்தான் இருக்கும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான்.

இந்தப் படத்தை மன்னன் கதையின் உல்டா என்று வெளியீட்டிற்கு முன்பாக சில செய்திகள் வந்தன. அதெல்லாம் முற்றிலும் தவறு. மன்னன் படம் கமர்ஷியல் கதைகளில் ஒரு மாஸ்டர், இது லோக்கல். ஒரு மரியாதைக்காக அவர்களே மிஸ்டர் என சேர்த்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.

இயக்குனர் ராஜேஷ், இன்னும் அதே ஓகேஓகே பார்முலாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். மகனுக்கு எப்போதுமே சப்போர்ட் செய்யும் அம்மா, கதாநாயகனைக் கண்டாலே எரிந்து விழும் கதாநாயகி, கதாநாயகனுக்கு உதவும் நண்பன், இதில் நண்பர்கள், அவ்வளவுதான் வித்தியாசம்.

சிவகார்த்திகேயன் ஒரு கார் ஷோரூமில் வேலை செய்கிறார். வழியில் விபத்தாக சந்திக்கும் நயன்தாராவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். நயன்தாரா, டிவி சீரியல்களைத் தயாரிக்கும் ஒரு மீடியா கம்பெனியின் ஓனர். வருடத்திற்கு 10 கோடிதான் சம்பாதிக்கிறாராம். ஆனால், பத்தாயிரம் கோடி சம்பாதிப்பவர் போல பந்தா செய்கிறார். ஒரு கட்டத்தில் நயன்தாராவை, சிவகார்த்திகேயன் காதலிப்பதாகச் சொல்ல, அவரைத் தொடர்ந்து அவமதிக்கிறார் நயன்தாரா. இவர்களின் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் பெரிய டிவிஸ்ட்டுகள், அப்படி, இப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டரை மணி நேரம் ஜாலியாக நகர்த்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். தன் வழக்கமான மேஜிக்கை இந்தப் படத்திலும் காட்டி கைத்தட்டல் வாங்குகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு குடும்பத்து ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது தியேட்டரில் தெரிகிறது. வெறும் என்டர்டெயின்மெட்டாக மட்டும் நடித்துவிடாமல் கொஞ்சம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் சிவகார்த்திகேயனுக்கும் நல்லது. இருந்தாலும் சீமராஜா படத்துடன் ஒப்பிடும் போது இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை.

நயன்தாராவுக்கு இந்தக் கதாபாத்திரமெல்லாம் சர்வசாதாரணம். ஆரம்பத்திலிருந்தே அவர் செய்யும் பந்தா, திமிர், உதாசீனம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது அம்பானி வீட்டிற்கு பக்கத்துவீடு போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், கிளைமாக்சில் தன் கம்பெனியின் வருமானம் வருடத்திற்கு 10 கோடி என்பதை பெரிதாகச் சொல்லும் போது அவர் கதாபாத்திரம் அதுவரை செய்த பந்தாவெல்லாம் பஞ்சர் ஆகிவிடுகிறது. காமெடிக்காகத்தான் என்றாலும் ஆரம்பத்திலிருந்து அவர் வெளிப்படுத்தும் இமேஜ் அங்கு உடைந்து போகிறது. வழக்கம் போல கிளைமாக்சில் இவர் எப்படியும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்துவிடுவார் என யூகிக்க முடிவது படத்திற்கு மைனஸ்.

சிவகார்த்திகேயன் நண்பர்களாக சதீஷ், யோகி பாபு. இருவரும் அவ்வளவு பிஸியா எனத் தெரியவில்லை. இவர் வரும் காட்சிகளில் அவரில்லை, அவர் வரும் காட்சிகளில் இவரில்லை. யார் வருகிறார்களோ அவர்களை வைத்து படப்பிடிப்பை முடித்திருப்பார்கள் போலிருக்கிறது. சமாளிப்பதற்கு ஒரு வசனத்தை வைத்து சரிக்கட்டிவிட்டார்கள். ரோபோ சங்கரும் படத்தில் இருக்கிறார். இவர்கள மூவரும் இருப்பதற்கு மிஸ்டர் லோக்கலை காமெடியால் மிரள வைத்திருக்கலாம். ம்ம்ம்ம்...

படத்தில் அழகாக ஸ்கோர் செய்பவர் அம்மா ராதிகா தான். ஓகே ஓகே மிடில் கிளாஸ் அம்மா சரண்யா கதாபாத்திரம் போலத்தான் என்றாலும் ராதிகாவின் நடிப்பில் அனுபவம் வெளிப்படுகிறது. அம்மா கதாபாத்திரம் என்றாலே ராஜேஷ் ஸ்பெஷல்தான் போலிருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ போகிறது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவரைச் சந்திக்க பாரிஸ் (வெளிநாடு பாரிஸ்) போகும் போது சிவகார்த்திகேயனை எதற்காக நயன்தாரா அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு திட்டமிட்டு அவரை எதற்கு சிறையில் தள்ள வேண்டும். இப்படி எத்தனையோ கேள்விகள் படத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்துவிட்டார். அவருக்காக ஒரு கதை வேண்டும் என உடனடியாக உருவாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

ஹிப்ஹாப் தமிழா கைவசம் ஐந்தாறு டியூன்கள் இருக்கும் போலிருக்கிறது. அதையே திரும்பத் திரும்பப் போட்டு ஒப்பேற்றுகிறார். அவரைப் போலவே அனிருத்தையும், சிவகார்த்திகேயனையும் பாட வைத்திருக்கிறார்.

இரண்டரை மணி நேரப் படைத்தை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். இடைவேளைக்குப் பின் சதீஷ், ரோபோ சங்கர், யோகி பாபு காணாமல் போனாலும், திரும்பத் திரும்ப சிவகார்த்திகேயன், நயன்தாரா திரையை ஆக்கிரமிப்பது அலுப்பூட்டுகிறது. டைம் நிறைய இருக்கிறது. அதில் கொஞ்சம் மிஸ் ஆனாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள் மிஸ்டர் லோக்கல்-ஐப் பார்க்கலாம்.

மிஸ்டர் லோக்கல் - மிஸ் (டர்) லோக்கல்

 

பட குழுவினர்

மிஸ்டர் லோக்கல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓