தினமலர் விமர்சனம் » ஒரு கல் ஒரு கண்ணாடி
தினமலர் விமர்சனம்
குறுகிய காலத்தில் மிகப்பெரிய பிரம்மாண்ட தயாரிப்பாளராக பெயரெடுத்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் அதிரடி திரைப்படம் தான் "ஒரு கல் ஒரு கண்ணாடி"! அதிரடி என்றதும் ஏதோ உதயநிதி முதல் படத்திலேயே ஐம்பது, அறுபது அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணி, நம்ப முடியாத வகையில் நம்மூர் நாயகர்(ஏற்கனவே இருக்கும்...) களையே மிஞ்சி விடுகிறாராக்கும் என நீங்கள் கருதினால், அதுதான் இல்லை! தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து உதயநிதி, சந்தானத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு காமெடியில் அதிரடி செய்து அசத்தியிருப்பது தான் ஹைலைட்!
கதைப்படி, உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் குழந்தைப் பருவத்திலிருந்தே குறும்புக்கார நண்பர்கள். இருவரும் பெண்களின் சுடிதார் துப்பட்டா காற்றில் பறந்து வந்தால் கூட அதை துரத்திப்போகும் அளவிற்கு காதலி கிடைக்க காத்திருப்பவர்கள்... அவர்கள் இருவரின் எண்ணப்படியே இருவருக்கும் காதலிகள் கிடைக்க, நட்புதான் பெரிதென இவர், அவரது காதலுக்கும், அவர் இவரது காதலுக்கும் மாறி மாறி ஆப்புகள் வைக்க, நட்பு காதலை வென்றதா? காதல் நட்பை கொன்றதா.? இல்லை இரண்டும் ஒன்றை ஒன்று கட்டி காத்ததா...? என்பதுதான் க்ளைமாக்ஸ்!
இந்தக்கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்ஃபுல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-மிற்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே தீர வேண்டும்! மனிதர் தனது முந்தைய வெற்றிப்படங்களான "சிவா மனசுல சக்தி", "பாஸ் என்கிற பாஸ்கரன்" படங்களைக் காட்டிலும் காமெடியில் புகுந்து விளையாடியிருப்பது பேஷ், பேஷ்... சொல்லுமளவிற்கு பிரமாதமாய் இருக்கிறது!
இயக்குநர் எதிர்பார்த்ததை எள் அளவும் பிசாகமல், பிரமாதமாக செய்து இருக்கிறார் ஹீரோ சரவணன் பாத்திரத்தில் வரும் உதயநிதி ஸ்டாலின்! சத்யம் சினிமாஸில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் கேரக்டரில் வெல்கம் டூ சத்யம் சினிமாஸ் என்றபடியே டிக்கெட் கிழித்து கொடுப்பதில் தொடங்கி, போலீஸ் உயரதிகாரி ஷியாஜி ஷிண்டேயின் மகள் ஹன்சிகாவை தைரியமாக டாவு அடிப்பது வரை சீன் பை சீன் காமெடியாகவும், கலர்புல்லாகவும் "யூத்"துகளை கவரும் வகையில் "நச்" என்று நடித்திருக்கும் உதயநிதிக்கு நடனம் வரவில்லை என்றாலும், அதையும் காட்டிக் கொள்ளாமல் பாடல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பது பலே, பலே சொல்ல வைத்து விடுகிறது! அப்பா ஸ்டாலினால் கலைத்துறையில் முடியாததை மகன் உதயநிதி நிச்சயம் நிறைவேற்றி காட்டுவார் என்பது நிதர்சனம்!
இரண்டாவது நாயகர், இரண்டு நாயகர்களில் ஒருவர்... எனும் அளவிற்கு சந்தானம் வாயை திறந்தாலே, அவ்வளவு ஏன் சந்தானம் வந்தாலே... தியேட்டரே சிரிப்பால் அதிர்கிறது! அவரும் சளைக்காமல், தத்துவமாகட்டும், காமெடியாகட்டும், காமநெடியாகட்டும் அத்தனையிலும் அடித்து தூள் பறத்தியிருப்பது ஓ.கே. ஓ.கே. படத்திற்கு டபுள் ஓ.கே. சொல்ல வைக்கிறது! ஒரு சீனில் மேஜை மீது ஒரு கிளாஸை வைத்து அதில் சரக்கை ஊற்றி, இது நீ, இதில் ஊற்றும் தண்ணீர் உன் காதலி, இந்த க்ளாஸ் தான் என்ன மாதிரி நண்பர்கள்... என அவர் அடிக்கும் தத்துவ டயலாக் ஆகட்டும், பேட், பேட், பேட் என்றபடி குதிக்கும் இடங்கள் ஆகட்டும் எல்லாமே சூப்பர்!
கதாநாயகி ஹன்சிகா, ஒரு சீனில் உதயநிதி சொல்வது மாதிரி ஒவ்வொரு சீனிலும் "சின்னத்தம்பி" குஷ்பு மாதிரியே அழகாக இருக்கிறார், வருகிறார், சிரிக்கிறார், போகிறார்! உதயநிதியின் அப்பா-அம்மாவாக வரும் அழகம்பெருமாள்-சரண்யா இருவருக்கும் இடையேயான 20 வருட ஊடல் ஒரு மாதிரி சென்டிமெண்ட் டச்!
ஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு எல்லாமே பாடல் காட்சிகளுக்கும், படக்காட்சிகளுக்கும் பெரிய பலம்!
ஆசிரியர் வேலை பார்க்கும் அழகம் பெருமாளை உதயநிதி, வாத்தி வாத்தி... என அடிக்கடி விளிப்பது, கோயில் குளத்து படித்துறையில் அமர்ந்தபடி சூரத் தேங்காய் சில்களை பொறுக்கி தின்று அவற்றை குளத்திற்குள் வீசுவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும், ஆர்யா, சினேகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட கெஸ்ட் ரோலில் வரும் நட்சத்திரங்களையும் கூட, பெஸ்ட் ரோலாக ரசிகர்கள் மனதில் நிற்க வைக்கும் அளவிற்கு காமெடி வித்தை தெரிந்த ராஜேஷ்.எம்-மின் எழுத்து-இயக்கத்தில், "ஓ.கே. ஓ.கே. - ஓ.கே. ஓ.கே அல்ல...!" "சூப்பரோ சூப்பர்!!"
--------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
சரவணன் (உதயநிதி) மீராவை (ஹன்சிகா) சிக்னலில் பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். மீரா ஓரளவுக்கு மேல் அவனை வெறுக்க முடியாமல், நண்பனாக ஏற்றுக்கொள்கிறாள். நட்பைக் காதலாக மாற்ற சரவணன் அடிக்கிற பல்டிகள்தான் “ஒரு கல் ஒரு கண்ணாடி’.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கிறார். சரக்கைச் சும்மா வாசனை பார்த்தே போதை ஏற்றிக்கொள்வது, அந்தப் போதையில் மொக்கையான ஆங்கிலத்தில் தனது காதலின் மகத்துவத்தைச் சொல்வது என இமேஜ் பார்க்காமல் உதயநிதி அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.
ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டிய இடங்களில் மட்டும் உதயநிதியிடம் அநியாயத்துக்குத் திணறல்.
திமுதிமு ஹன்சிகா மோத்வானி, சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களால் நடிப்பிலும் ஈர்க்கிறார்.
“மயிலாப்பூர் பார்த்தா’ என்கிற பார்த்தசாரதியாக சந்தானம் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்பி கேரக்டருக்கு வெறுமனே “வந்துடுத்து போயிடுத்து’ பாஷையை நம்பாமல், வாய்ஸ் மாடுலேஷன், பாடி லாங்வேஜ் ஆகியவற்றில் தனிக் கவனமெடுத்து சந்தானம் செய்துள்ள குறும்புகள் பிரமிப்பூட்டுகிறது. இவரது ஜாங்கிரி காதலி ஜாடிக்கேற்ற மூடி.
அப்பாவி சரண்யாவும் அவரோடு வருஷக்கணக்காகப் பேசாமல் இருக்கும் அழகம்பெருமாளும் மனதைத் தொடுகிறார்கள். இடையே சினேகா, க்ளைமாக்ஸில் ஆர்யா, ஆண்ட்ரியா வந்து கலகலப்பூட்ட முயல்கிறார்கள்.
ஹாரீஸின் இசையில் “அகிலா என் செடி பூத்தது’, “வேணாம் மச்சான்’ பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
காதலுக்கு ஹன்சிகா விதிக்கும் சராசரி நிபந்தனைகளுக்கு உதயநிதி ஓவர் ரியாக்ஷன் கொடுப்பது ஏனோ? ஒருவழியாக ஹன்சிகாவோடு சேர்ந்தபிறகு, “இந்தக் காதல் எனக்கு ப்ராஜக்ட் மாதிரிதான்’ என்று உதயநிதி வில்லத்தனமாக வார்த்தைகளை விடுவதை ஜாலி மேளாவில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. நண்பனை ஹீரோ சிக்கலில் மாட்டிவிட்டால்தான் காமெடி படம் என்ற சம்பிரதாயத்துக்காகவே சந்தானம் உதயநிதியால் அவஸ்தைப்படுவது போல் தெரிகிறது.
இத்தனை ஓட்டைகளையும் மீறி முழுப்படத்தையும் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இயக்குநர் ராஜேஷின் அதிரடி டைமிங் சென்ஸ்தான் அதன் ரகசியம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - காமெடி ராஜ்ஜியம்.
குமுதம் ரேட்டிங் - ஓ கே
-----------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
கிரிக்கெட் ஓப்பனிங் தொடங்கி லாஸ்ட் ஓவரின் கடைசி பந்து வரைக்கும் சச்சின் அல்லது சேவாக் அல்லது தோனி... இவர்களில் யாராவது ஒருவர் சிக்ஸர், ஃபோர்... என பௌண்ட்ரிக்குப் பந்தை விரட்டிவிரட்டி அடித்தக்கொண்டே இருந்தால், கிரௌண்டில் என்ன ஆரவாரம் இருக்குமோ அந்த ஆரவாரமும் கைத்தட்டலும் இருக்கின்றன “ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஒவ்வொரு சீனுக்கும், ஹாட்ரிக் வெற்றி இயக்குனர் ராஜேஷûக்கு; ஹீரோவாக முதல் வெற்றி உதயநிதிக்கு; வெற்றிமேல் வெற்றி சந்தானத்துக்கு.
கதை ஒன்றும் பெரிதாக இல்லை. கோடம்பாக்கக் குலவழக்கப்படி ஹன்சிகாவைப் பார்த்ததும் உதயநிதிக்குள் காதல் பத்திக்கிச்சு... பத்திக்கிச்சு. பத்திக்கிட்ட காதலை ஹன்சிகாவுக்குள்ளும் பத்தவைக்க உதயநிதியும், சந்தானமும் படும்பாடுதான் படத்தை இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் திரைக்கதை. அதில் நான் சொல்வதெல்லாம் காமெடி; காமெடியைத் தவிர வேறொன்றுமில்லை என்று காமெடி சடுகுடு ஆடியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.எம்.
அவன் பரவாயில்லடா... க்ளாஸ்லே சொல்றதைக் கேட்காட்டாலும் எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்ட்லையும் பாஸ்மார்க் வாங்கிடுறான் என்று வாத்தியார் வகுப்பில் ஒருவனையாவது பாராட்டுவார் இல்லையா... அப்படிப் பாராட்டலாம் உதயநிதியை. என்ன... டான்ஸ்தான் கொஞ்சம் தத்தக்கா... பித்தக்கா. காதலும் காமெடியும் உதயநிதிக்கு உறுத்தவில்லை.
ஹன்சிகா வெண்ணெய்ச் சிற்பம், சிரித்தாலும், அழுதாலும் ச்சும்மா புஸுபுஸுன்னு அழகு. இவரைச் “சின்ன குஷ்பு’ என்று சொன்னவன் வாய்க்குச் சர்க்கரைப் பரிசு.
சந்தானத்துக்குத் தொட்டதெல்லாம் சந்தனமாக மணக்கும் பொன்னான பருவம் இது. இனி இவர் பீக் ஹவர் மௌண்ட்ரோடு போல காமெடியில் பிஸியோ பிஸியென பிஸியானாலும் ஆச்சர்யமில்லை. உண்மையாகவே சந்தானத்தின் கௌன்டர் காமெடியை நம்பித்தான் காட்சிகளே நகர்கின்றன. அந்த ஃப்ளைட் கலாட்டா ரசிகனின் இதயத்தை ஹைஜாக் பண்ணிக் கொண்டு போய்விடுகிறது. க்ளைமாக்ஸில் ட்ரான்ஸ் லேஷன் காமெடிக்கு ஆடியன்ஸ் மத்தியில் அதிரடி அப்ளாஸ். சரண்யா பொன்வண்ணன், அழகம்பெருமாள்... அடிச்சாலும் புடிச்சாலும் அக்மார்க் தமிழ் ஜோடி.
ஹாரிஸின் இசையில், “வேண்டாம் மச்சான் வேண்டாம்’ பாடல் இளமைத் துள்ளல் எனில், “காதல் ஒரு பட்டர்ஃப்ளை’, “அகிலா அகிலா...’ பாடல்கள் சிலுசிலு அருவி. எடிட்டிங், கேமரா இரண்டும் அதனதன் எல்லையில் நின்று விளையாடுகின்றன.
இயக்குனர் ராஜேஷ்.எம். அவர்களே... உங்களின் அடுத்த படத்தின் க்ளைமாக்ஸில் ஆர்யா, ஜீவா... போன்றோர் கெஸ்ட் ரோலில் வந்து நாடகத்தனம் பண்ணாதிருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் இவர்களுக்கு மத்தியில் என்னதான் டகால்டி நடந்து டங்குவார் அ(று)ந்தாலும், “கவலைப்படாத மச்சான் இவிங்க இப்படித்தான் எப்பப் பாத்தாலும் அடிச்சிக்குவாங்க...அணைச்சுக்குவாங்க... அப்புறம் க்ளைமாக்ஸ்ல ஒருத்தன் வந்து கதைக்கு சுபம் போடறேன்னு சூன்யம் வெச்சுட்டுப் போவான். எந்திருச்சி வா மச்சான்’ என்று புகை ஊதப் போயிடுவாங்க பொல்லாத தமிழ் ரசிகர்கள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - டபுள் ஓ.கே.