3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சித்தார்த், ஜிவி பிரகாஷ்குமார், லிஜிமோள் ஜோஸ், காஷ்மிரா
தயாரிப்பு - அபிஷேக் பிலிம்ஸ்
இயக்கம் - சசி
இசை - சித்துகுமார்
வெளியான தேதி - 6 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடங்கள்
ரேட்டிங் - 3.25/5

சினிமாவையும், சென்டிமென்ட்டையும் பிரிக்கவே முடியாது. 500 கோடி ரூபாய் படமாக இருந்தாலும் கூட அதில் ஏதாவது ஒரு சென்டிமென்ட் இருந்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும். அப்படி எந்தவிதமான சென்டிமென்ட் இல்லாமல் 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் கூட தோல்வி அடைய முடியும் என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த படம் கூட ஒரு சாட்சியாகவே உள்ளது.

இந்தக் காலத்தில் சென்டிமென்ட் படங்களை எடுத்து ரசிகர்களைக் கவர முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. எதையும் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் ரசிகர்களைக் கவர முடியும் என இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சசி.

தமிழ் சினிமாவில் அண்ணன், தங்கை பாசக் கதைகள்தான் அதிகம் வந்திருக்கின்றன. அக்கா, தம்பி பாசக் கதைகள் எப்போதாவதுதான் வரும். ஆனால், மாமன், மச்சான் கதைகள் வந்ததாக வரலாறு இல்லை. இந்தப் படம் மாமன், மச்சான் இடையிலான ஒரு மோதல் பாசக் கதை.

மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும். பல குடும்பங்களில் பெண் எடுக்கும் போது அந்த வீட்டில் பெண்ணிற்கு தம்பியோ, அண்ணனோ இருந்தால் மட்டுமே பெண் எடுப்பார்கள். தன் சகோதரியை அந்த அளவிற்கு அவர்கள் தாங்குவார்கள் என்பதே அதற்குக் காரணம்.

இந்தப் படத்தில் அந்த மாமன், மச்சான் உறவை அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சசி. அதில் அக்கா, தம்பி இடையிலான நெகிழ வைக்கும் பாசமும் உண்டு. நம்மிடம் இன்னும் அந்த சென்டிமென்ட் போய்விடவில்லை என்பதை படத்தில் உள்ள பல காட்சிகள் புரிய வைக்கின்றன. அக்கா, தங்கை, தம்பி, அண்ணன் ஆகியோருடன் பிறந்தவர்கள் அந்த பாசத்தைக் கண்டு கண் கலங்குவார்கள். அப்படி இல்லாதவர்கள் தங்களுக்கு அப்படி அமையாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் கண் கலங்குவார்கள்.

பெற்றோர் இல்லாமல் அத்தை ஆதரவில் வளர்பவர்கள் அக்கா லிஜிமோள் ஜோஸ், தம்பி ஜிவி பிரகாஷ்குமார். ஜிவி பிரகாஷ் அடிக்கடி பைக் ரேசில் கலந்து கொள்பவர். அப்படி ஒரு நாள் ரேசில் போய்க் கொண்டிருக்கும் போது டிராபிக் இஸ்ன்பெக்டர் சித்தார்த் அவரை மடக்கிப் பிடிக்கிறார். அதோடு அவரது ஆடைகளைக் கிழித்து ஒரு நைட்டி போட்டுவிட்டு தெருவில் அழைத்துக் கொண்டு போகிறார். அந்த அவமானம் தாங்காமல் தவிக்கிறார் பிரகாஷ். மறுநாள் லிஜிமோளுக்கு பெண் பார்க்கும் படலம் நடக்கிறது. அங்கு மாப்பிள்ளையாக சித்தார்த். அதிர்ச்சியாகி நிற்கிறார் பிரகாஷ். அவரது எதிர்ப்பையும் மீறி திருமணம் நடக்கிறது. வேறு ஒரு வழக்கில் பிரகாஷ் சிக்க, அவரைக் காப்பாற்றி தன் சொந்த ஜாமீனில் வீட்டில் தங்க வைக்கிறார் சித்தார்த். தன் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் அக்காவிடமும் பேசாமல் இருக்கிறார் பிரகாஷ். இந்த சூழ்நிலையில் மனதளவில் பிரிந்திருக்கும் அக்கா, தம்பியும், பாசத்தில் பிளவு பட்டு இருக்கும் மாமனும், மச்சானும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பம், ஒரு அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம் என படத்தில் இரண்டு குடும்பங்களின் பின்னணி. அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களின் பாசம், நேசம், வேறுபாடு என ஒரு யதார்த்தக் குடும்பக் கதையாக மட்டுமல்லாமல், பெண் பார்த்த பிறகு இருக்கும் காதல், பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் காதல், ஒரு அதிரடி ஆக்ஷன் என கமர்ஷியல் ரீதியாகவும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

போலீஸ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தா என படம் பார்ப்பதற்கு முன் நமக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கும். ஆனால், படம் பார்த்த பின் அந்த ஆச்சரியம் பறந்து போய்விடும். ஒரு கோபக்கார, பொறுப்பான, நேர்மையான டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சித்தார்த். ஒரு பக்கம் கட்டிக்கப் போகும் பெண், மறுபக்கம் தன்னை ஏற்க மறுக்கும் பிரகாஷ், இன்னொரு பக்கம் விலகி வா என்று சொல்லும் அண்ணன் என திருமணத்திற்கு முந்தைய நிலைமையில் அவர் மீது நமக்கும் பாவம்தான் வருகிறது. சிக்சர் அடிக்க வேண்டிய இடத்தில் சிக்சர் அடித்து, சிங்கிள்ஸ் அடிக்க வேண்டிய சிங்கிள்ஸ் அடித்து சிறப்பாய் நடித்திருக்கிறார் சித்தார்த்.

ஜி.வி.பிரகாஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட படம் இதுதான் என்று தாரளமாகச் சொல்லலாம். அவருக்கே உரிய ஒரு கதாபாத்திரமாகவே பைக் ரேசர் மதன் கதாபாத்திரம் அமைந்துள்ளது. எப்போதும் கடுகடுவென்றே இருக்கும் ஒரு கதாபாத்திரம். மாமாவாக வரப் போகும் சித்தார்த்தைப் பார்த்தால் மட்டும் படு சூடாகி விடுகிறார். தனக்கு எந்த மாதிரி படங்கள் வரவேண்டும் என்பதை இந்தப் படம் மூலம் ஜிவி பிரகாஷ் புரிந்து கொள்வார் என்று நம்புவோமாக.

அக்கா லிஜிமோளை, ஜிவி பிரகாஷ் எதற்காக பூனை, பூனை எனக் கூப்பிடுகிறார் என்பது ஆரம்பத்தில் புரியவில்லை. போகப் போக நாமே புரிந்து கொள்ள வேண்டும். அற்புதமான நடிப்பில் லிஜிமோள் பூனையாகத் தெரியவில்லை, புலியாகவே தெரிகிறார். மேக்கப் இல்லாமல் கூட அவ்வளவு அழகாய் இருக்கிறார். பிரகாஷுக்கும், சித்தார்த்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு பாசத்தை அழகாய் பங்கு போட்டு கொடுக்கிறார். அக்கா என்பவர் இன்னொரு அம்மாவுக்கு சமம் என்பது தம்பிகளுக்கு மட்டுமே தெரியும்.

ஜிவி பிரகாஷின் காதலியாக காஷ்மீரா. அவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் கதையின் திருப்புமுனைக்கு முக்கியமானவராய் இருக்கிறார். பார்ப்பதற்கு பொம்மை போல் இருந்தாலும் வரும் ஒரு சில காட்சிகளில் பொறுப்பாய் நடித்திருக்கிறார்.

படத்தை சென்டிமென்ட் கதையாகவே நகர்த்திக் கொண்டு போய் முடித்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். வில்லன் வேண்டும் என்பதற்காகவே மதுசூதன் கதாபாத்திரத்தை திணித்தது போல் உள்ளது. இருந்தாலும் நிகழ்கால குட்கா கடத்தலைப் பற்றியது என்பதால் அதில் கொஞ்சம் சுவாரசியம் இருக்கிறது.

சித்துகுமார் இசையில் பாடல்களின் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த மாதிரியான படங்களில் பாடல்கள் உணர்வுகளை வெளிக் கொணர்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கும். மாமன் மச்சான் உறவைப் பற்றியோ, அக்கா, தம்பி உறவைப் பற்றியோ அழுத்தமான பாடல் வரிகளில், இனிய இசையுடன் பாடல்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

படத்தின் கடைசி அரை மணி நேரக் காட்சிகள் முற்றிலும் சினிமாத்தனமானவை. அதற்கு முன் பயணித்த சென்டிமென்ட் பாதையிலிருந்து அப்படியே யு டேர்ன் போட்டு ஆக்ஷனுக்கு திரும்பிவிடுகிறது.

சாலையில் தாறுமாறாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களால் ஒழுங்காக சாலையில் செல்பவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு வருகிறது என்பதை ஒரு காட்சியிலாவது சொல்லி இருந்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் டபுள் ஹீரோ படங்கள் அதிகம் வருவதில்லை. எதிர்காலத்தில் அப்படி பல படங்கள் வந்தாலும் அப்படிப்பட்ட படங்களில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

சிவப்பு மஞ்சள் பச்சை - மச்சானுக்கு ஒரு பச்சை சிக்னல்...

 

சிவப்பு மஞ்சள் பச்சை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சிவப்பு மஞ்சள் பச்சை

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓