விமர்சனம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
நான், சலீம் என்று தனக்குப் பொருத்தமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆண்டனி கில்லாடி.. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.
கதை?
கோடீஸ்வரத் தொழிலதிபரான விஜய் ஆண்டனியின் அம்மா, ஒரு விபத்தில் கோமா நிலைக்குப் போகிறார். அம்மா கண் திறக்க வேண்டுமானால் நீ யார் என்று வெளியில் சொல்லாமல் ஒரு மண்டலம் (48 நாட்கள்), பிச்சைக்காரனாகவே முழுமையாக வாழ வேண்டும் என்கிறார் சாமியார்.
பிச்சைக்காரனமாக மாறும் விஜய் ஆண்டனி அதை எப்படி எதிர்கொள்கிறார்? இடையில் ஏற்படும் மெல்லிய காதல் என்று சில்லறைக் காசுகளை சிதறவிட்டமாதிரி கலகலவென்று செல்கிறத படம். இயக்கம், சசி.
அழுக்கு உடையுடன் கையேந்தி படம் முழுக்க பிச்சைக்காரனாக நடிக்க ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். கொஞ்சம் அப்பாவித்தனம், கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ஹ்யூமர் என்று வெற்றிகரமாகக் கையாண்டு மனதில் பதிகிறார் விஜய் ஆண்டனி. அதுவும் காதலியுடன் பைக்கில் செல்லும்போது தன்னை மறித்து மாமூல் கேட்கும் போலீஸ்காரரிடம் தான் யார் என்று அசால்ட்டாகச் சொல்லும் காட்சி ஆஹாஹா!
சட்டென்று பார்க்க காலக சந்தியாவின் கலர் பதிப்பு மாதிரி இருக்கிறார் சட்னா டைட்டஸ், காசுக்காக காதலன் கையேந்தும்போது, அந்தக் கையில் முகம் புதைத்து கலங்குவது நைஸ்.
அந்த சிரிப்பு அடக்க முடியாத வில்லனும், காருக்குள் அடிக்கடி அடி வாங்கும் டிரைவரும் சின்ன வேடம் என்றாலும் புன்னகைக்கு வைக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களின் இன்னொரு உற்சாக உலகத்தை ஜாலியாகக் காட்டியிருக்கிறார்கள்.
பாடல்கள் ஓகே. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பளிச்.
அந்த அம்மா, சின்ன வயதிலும் வயதானவர் போலவே தோன்றுவது ஏனோ?
மனநோயாளிகளிடம் புதிய மருந்துகளை சோதிக்கும் காட்சிகளும் தேவைதானா?
கத்திக்குத்து வாங்கிய காதலியைக் காப்பாற்ற காசு இல்லாததால் தன் சத்தியத்தை மீற விஜய் ஆண்டனி முயலும்போது பிச்சைக்காரர்கள் எல்லாம் பணம், நகை, செல்போன் என்று எடுத்துக் கொடுக்கும் காட்சியில் தியேட்டரில் கைத்தட்டுகிறார்கள்!
பிச்சைக்காரன் : ஃபுல் மீல்ஸ்.
குமுதம் ரேட்டிங் - நன்று
--------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்!
எதிர்மறைப் பொருளில் தலைப்பு வைப்பது ராசியில்லை என்ற கோடம்பாக்க விதியை மீறியதே ஒரு புதுமைதான்.
பாசத்துக்குரியவர்களின் சிக்கல் தீருவதற்காக மண்சோறு சாப்பிடுவது, மடிப்பிச்சை எடுப்பது போன்ற நேர்த்திக் கடன் செயல்பாடுகள் புழக்கத்தில் இருக்கும் வழக்கங்கள்தாம். இந்தப் படத்தில் 48 நாட்கள் முழு நேரப் பிச்சைக்காரனாக வாழ்ந்து தன்னுடைய தாயின் பிரச்னையைக் கதாநாயகன் தீர்த்து வைக்கிறார்.
கதை கரு வித்தியாசமானதுதான், ஆனால் பீட்ஸாக் கடை முதலாளியான பெண்ணுடன் (கனவு) காதல் பாட்டு, அடிக்கொரு தடவை பெரிய காரணம் எதுவும் இல்லாமலே பலரையும் சவட்டி எடுப்பது, சாயங்காலம் 6 மணிக்குமேல் பிராண்டட் ஷர்ட் போட்டு உலவுவது, மனநோயாளியாக நடித்துச் சாலையோரத்தில் உறங்கும் இளம் பெண் பிச்சைக்காரியின் கற்பை காப்பது, போலி மருந்து நிறுவனத்துக்கு ஆப்பு வைப்பது மாதிரியான மசாலா வேலைகளையும் கதாநாயக இலக்கணப்படி உபரியாகச் செவ்வனே செய்கிறார் பிச்சைக்காரன்.
கொங்கு வட்டார மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. நெம்ப நல்லாயிருக்குதுங்கோவ்! ஆனாக்க, விஜய் ஆன்டனி மட்டும் சினிமாத் தமிழ்லயே பழமை பேசுறது ஏனுங்கோவ்?
பொதுவாகப் பொறுக்கிகளை, மேல்தட்டு வர்க்க பெண்கள் காதலிப்பதாகக் கதை பண்ணுவது தரைப்பட மரபு. இந்தப் படத்தில் பிச்சைக்காரனிடம் மோகிக்கிறார் கதாநாயகி. சமுதாயத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள் பலே!
கணவனுக்குத் தூக்கம் வருவதற்காக கரன்சி நோட்டுக் கட்டுக்களை எண்ணும் இயந்திரத்தை மனைவி இயக்குவது பளிச்! துண்டான தன்னுடைய விரலைக் கூட எடுக்காமல், தன்னை அடித்தவன் சட்டைப் பையில் இருந்து விழும் 10 ரூபாய் நாணயத்தைப்பொறுக்கும் காட்சியில் ஆலை அதிபரின் குணாதிசயம் கச்சிதமாகச் சொல்லப்படுகிறது.
விஜய் ஆன்டனி ஆரம்பத்தில் பிச்சை எடுக்கத் தயங்கும் காட்சிகள் யதார்த்தம். பழகிப்போன பிறகு முதுகு அரிப்பைத் தீர்த்துக் கொள்ள கம்பத்தில் உராய்வது பரிதாபம்! சக பிச்சைக்காரர்கள் தொழில் கற்றுத் தரும் பாங்கு செம!
வசனங்கள் பல இடங்களில் இயல்பான நகைச்சுவை பொதிந்து, தேன் மிட்டாய்க்குள் இருக்கும் இனிப்புப் பாகாய் மிளிருகின்றன. உதாரணம்: பிச்சைக்காரிடம் உதை வாங்கு வில்லன்கள், பல வீட்டு சாப்பாடு அதான் இந்த வலி என்பது ஏந்துற கைக்கு ஓங்குற பழக்கம் இருக்காது போன்ற நறுக் வசனங்கள் அநேகம். சிரிப்பை அடக்குவது மாதிரி நடிப்பது ரொம்பக் கஷ்டம். அதை வில்லனின் அல்லக்கை ஒருவர் செய்திரக்கும் விதம் அபாரம்.
உண்மைச் சொன்னால் அம்மா இறக்க நேரிடலாம்; சொல்லாவிட்டாலோ காதலி இருப்பார் இந்த இறுதி காட்சி முடிச்சு பட்டாஸ்!
பிச்சைக்கார்! கல்லாகட்டிடுவான்!
படம் பார்த்துவிட்டு வந்த வேலூர் சுரேஷ் நாத் கருத்து: தாய்ப் பாசம் அருமை. வாழ்க்கையே நம்பிக்கையில் இருக்கு என்ற கருத்து சூப்பர். காதலுக்கு அந்தஸ்து தேவையில்லைங்கிறதும் பிடிச்சிருக்கு.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!