1

விமர்சனம்

Advertisement

நடிப்பு - யோகிபாபு, யாஷிகா ஆனந்த்
தயாரிப்பு - எஸ் 3 பிக்சர்ஸ்
இயக்கம் - புவன் நல்லான்
இசை - பிரேம்ஜி
வெளியான தேதி - 6 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 1/5

திரைப்படம் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்குள் வராத படங்களை எப்படி திரைப்படம் என்று சொல்ல முடியும். வர வர எதை எடுத்தாலும் அது திரைப்படம் என்று சொல்லுமளவிற்கு சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே தரம் குறைந்து வரும் தமிழ் சினிமாவின் தரத்தை இந்த மாதிரியான படங்கள் மேலும் குறைத்துவிடுகின்றன. இப்படி திரைப்படம் என்றே சொல்ல முடியாத விதத்தில்தான் இந்த 'ஜாம்பி' படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் புவன் நல்லான் என்ன நினைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்பது அவருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது. படத்தின் முதல் காட்சியை மட்டும் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் கொடுத்துவிட்டு அதன் பிறகு எப்படியெப்படியோ காட்சிகளை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்.

தரமற்ற, குப்பையில் கொட்டப்பட்ட கழிவு கோழிகளை எடுத்துக் கொண்டு வந்து தருபவரிடமிருந்து அவற்றை ஒரு ரிசார்ட் ஹோட்டலில் வாங்கி சமைக்கிறார்கள். அந்த ரிசார்ட்டில் வந்து தங்கும் கல்லூரி மாணவிகள் அந்த சிக்கனைச் சாப்பிடுவதால் 'ஜாம்பி'களாக மாறிவிடுகிறார்கள். அவர்களில் யாஷிகா ஆனந்த் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார். குடிப்பதற்காக அங்கு வந்து தங்கும் கோபி, சுதாகர் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். காணாமல் போன தன் மொபைல் போனைத் தேடி வரும் யோகி பாபுவும் அந்த ரிசார்ட்டிற்குள் சிக்கிவிடுகிறார். அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

ஒரு குடோன், ஒரு டாஸ்மாக் பார், ஒரு ரிசார்ட் மொத்த படமும் இந்த மூன்றே இடங்களில்தான் நகர்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் ஒவ்வொருவர் பேசும் வசனங்களும் துளி கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. மாறாக எரிச்சலைத்தான் வரவழைக்கிறது.

யு டியூபில் 'மொக்கை' ஜோக் அடித்து சிரிக்க வைப்பதற்கும் சினிமாவில் சிரிக்க வைப்பதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது என்பதை யு டியுபில் தங்களை நட்சத்திரங்கள் என நினைத்துக் கொள்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் சினிமாவிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுவார்கள் என அவர்களை நடிக்க அழைத்து வருபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

திரைப்படம் என்பது ஒரு தனி கலை. அதற்கென்று ஒரு தனி இலக்கணம் இருக்கிறது. பெரிய திரையில் படத்தைப் பார்த்து ரசித்து கைத்தட்டும் ரசிகர்களை அவ்வளவு சீக்கிரத்தில் திருப்திப்படுத்தி விட முடியாது.

படத்தின் நாயகனாக யோகி பாபுவைக் காட்டித்தான் படத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள். ஆனால், அவர் படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளிலும், அதோடு கிளைமாக்சிற்கு முன்பாக மட்டும்தான் வருகிறார். மொத்தமாக ஐந்தாறு நாட்கள் இரவில் மட்டும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. அதற்குள் எதையாவது எடுத்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவரது காட்சிகளைப் படமாக்கியிருப்பது தெரிகிறது. சில காட்சிகளில் அவருக்கு உதடுகள் அசையவேயில்லை. ஆனால், அவர் வசனம் பேசுவது போல் டப்பிங்கில் சேர்த்திருக்கிறார்கள். ஏதோ ஒரு நன்றிக்கோ, நட்புக்கோ அவர் கால்ஷீட் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. அதை வீணடித்துவிட்டார்கள்.

கோபி, சுதாகர் இருவரும் யு டியூபில் நகைச்சுவை செய்து அதிக பாலோயர்களைப் பெற்றவர்கள். அதில் எப்படி பேசிக் கொண்டே இருப்பார்களோ அது போலவே படத்திலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியிலாவது சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தால் அது கடைசி வரை நடக்கவேயில்லை.

யாஷிகா ஆனந்த்தை கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். கதாநாயகி என்று அவரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு பாடலைச் சேர்த்திருக்கிறார்கள். அதிலும் அவரது கிளாமர் தெரியக் கூடாது என மறைத்தே ஆக வேண்டும் என தணிக்கை செய்துவிட்டார்கள்.

படத்திற்கு இசை பிரேம்ஜி என்று டைட்டில் கார்டு வருகிறது.

ஜாம்பிகள் ரோடு பக்கம் கூட செல்லாமல் ரிசார்ட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன. ரிசார்ட்டில் இருக்கும் அந்த ஐந்தாறு பேரைத்தான் கடிக்க முடியும். ரோடுக்கு சென்றால் நிறைய பேரைக் கடிக்கலாம் என அவற்றிற்குத் தெரியவில்லை.

ஜாம்பிகளிடம் மாட்டிக் கொண்டோம் என அவற்றிடம் சிக்கியவர்கள் யாருமே மொபைல் போன் எடுத்து கூட போலீசுக்குத் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். சரி, மொபைல் போன் கூட கையில் இல்லை, ரிசப்ஷனில் இருக்கும் லேண்ட்லைன் போன், சிசிடிவி அறைக்குள் இருக்கும் லேண்ட்லைன் போன் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தாமல் இருக்கிறார்களே ?.

ஜாம்பிகளிடம் மாட்டக் கூடாது என அவர்கள் தப்பித்து ஓட முயற்சிப்பது போலத் தெரியவில்லை. ஏதோ, குழந்தைகளிடம் ஓடிப் பிடித்து விளையாட ஓடுவது போலத்தான் ஓடுகிறார்கள்.

இம்மாதிரியான ஜாம்பிகளிடமிருந்தாவது தமிழ் சினிமா தப்பிக்கட்டும்...

ஜாம்பி - சோதனை

 

பட குழுவினர்

ஜாம்பி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓