3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தினேஷ், மகிமா நம்பியார், ராதாரவி, தீனா மற்றும் பலர்
தயாரிப்பு - பாக் ஸ்டார் ஸ்டுடியோஸ், கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி
இயக்கம் - ராஜ்குமார்
இசை - அரோல் கொரேலி

தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வருகின்றன. அவையும் அதிரடியான சீரியசான படங்களாகத்தான் இருக்கும். ஆனால், இந்த 'அண்ணனுக்கு ஜே' படம் ஒரு அதிரடியான நகைச்சுவைப் படமாக வெளிவந்துள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு 'அமாவாசை' அரசியல் படமல்ல இது, 'அட்டகத்தி' அரசியல் படம். அதை ஆரம்பத்திலிருந்து கடைசி காட்சி வரை அந்தத் தடம் மாறாமல் அப்படியே கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். அதற்கு திருவள்ளூர் மாவட்ட கதைக்களமும் நிறையவே கை கொடுத்துள்ளது.

தினேஷ் குடும்பமே கள் இறக்கும் குடும்பம். அப்பா மயில்சாமி அரசியலில் இறங்கும் ஆசை வைத்திருந்தாலும் அதை பெரிதாக வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அந்தப் பகுதியின் ஒன்றிய செயலாளர் தீனா, பார் ஒன்றை எடுத்ததால் கள்ளுக் கடையை மூடச் சொல்கிறார். அதற்கு மறுக்கும் மயில்சாமியை போலீசிடம் மாட்டிவிட்டு, கள்ளுக் கடையை மூட வைக்கிறார். இதனால், ஆத்திரமடையும் தினேஷ், தீனாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். ஆனால், அவர் கொல்வதற்கு முன்பே தீனாவை யாரோ பலமாகத் தாக்கிவிடுகிறார்கள். ஊரெல்லாம் தினேஷ்தான் தீனாவைக் கொல்ல முயற்சித்தார் என கதையாகிவிடுகிறது. தினேஷுக்கு திடீரென ஒரு உயர்வு கிடைக்கிறது. வேறு ஒரு கட்சியில் அவருக்கு பொறுப்பு கொடுக்க, தினேஷ் அரசியல்வாதி ஆகிறார். தீனாவின் ஆட்களோ தினேஷைப் பழி வாங்கத் துடிக்கிறார்கள். இந்த தினேஷ் - தீனா அரசியல் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் காட்சிகளில் 'அட்டகத்தி' தினகரன் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறார் தினேஷ். அதிலும் காதலி மகிமா நம்பியாரைத் துரத்தித் துரத்து வெறுப்பேற்றும் காட்சிகளில் அவருக்கு நடிப்பு சரளமாக வருகிறது. எப்போதுமே ஒரு பரபரப்பு, துடிதுடிப்பு, ஓட்டம் என இருக்கிறார் தினேஷ். நகைச்சுவை கூட மிக இயல்பாக வருகிறது. இம்மாதிரியான பொருத்தமான கதாபாத்திரங்களை, படங்களைத் தேர்ந்தெடுத்தால் மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஒரு ஆட்டத்தைக் கொடுக்கலாம்.

இளைத்துப் போன மகிமா நம்பியாரைப் பார்ப்பதற்கு என்னமோ போலிருந்தாலும் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறார். அவர்களுக்கே உரிய தெனாவெட்டும், திமிரும் கண்களில் கூட இயல்பாக வருகிறது. உடம்பைக் கொஞ்சம் பார்த்துக்குங்க மகிமா.

படத்தில் முக்கிய வில்லனாக தீனா. பல படங்களில் அடியாளாக வந்து மிரட்டிவிட்டுப் போவார். இந்தப் படத்தில் பதவி உயர்வு பெற்று தனி வில்லனாக பயத்தைக் கூட்டியிருக்கிறார்.

மாவட்டப் பதவியில் ராதாரவி. அரசியல்வாதி கதாபாத்திரம் என்றால் அவருக்கு சொல்லவா வேண்டும். தினேஷ் அப்பாவாக மயில்சாமி, தினேஷ் நண்பராக ஹரி கிருஷ்ணன் அப்படியே அந்தக் கதாபாத்திரங்களில் தங்களை அமர்த்திக் கொள்கிறார்கள்.

அரோல் கொரேலி இசையில் 'மானே..தேனே..' 'தாறு மாறா...' பாடல்கள் கலகலப்பாக உள்ளன. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் அந்த ஊரும், இடங்களும் அதன் இயல்பை மீறாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இடைவேளைக்கு பின் படத்தின் நாயகி மகிமாவை காணவில்லை. அதோடு, கிளைமாக்ஸ்க்கு முன்பாகத்தான் வருகிறார். பெரிய திருப்பங்கள் இல்லாமல் வெறும் சம்பவங்களாக மட்டுமே படம் நகர்வது ஒரு குறை.

அரசியல் படம் என்றதும் முதல்வர், கட்சித் தலைவர், போராட்டம் அது இது என காட்டாமல், என் கட்சித் தலைவரைக் கூட பேனரில் மட்டுமே காட்டிவிட்டு, ஒரு ஊரின் அரசியலை அதன் இயல்பான போக்கில் படமாகக் கொடுத்ததில் இந்த அண்ணனுக்கும் ஜே போட வைக்கிறார் இயக்குனர் ராஜ்குமார்.

அண்ணனுக்கு ஜே - வாழ்க கோஷம் போடலாம்

 

பட குழுவினர்

அண்ணனுக்கு ஜே

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓