1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி மற்றும் பலர்
இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்
இசை - நடராஜன் சங்கரன்
தயாரிப்பு - சாய் புரொடக்ஷன்ஸ்
வெளியான தேதி - 7 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் ஆபாசப் படங்கள் என்ற வகையிலான படங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு காலத்தில் இலை, மறை காய் மறையாக மறைமுகமாக அப்படிப்பட்ட வசனங்களை வைத்த படங்கள்தான் சில வந்தன. ஆனால், சமீப காலத்தில் ஆபாசப் படங்களை எடுத்த சிலர் வசூல் ரீதியாக நல்ல லாபத்தைப் பார்த்ததால் மேலும் சிலருக்கும் அப்படிப்பட்ட படங்களை ஆசை வந்துவிட்டது.

இந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். படத்தில் ஒருவருக்குக் கூட நல்ல கதாபாத்திரத்தை அமைக்கவில்லை இயக்குனர் முகேஷ். ஆபாச எண்ணத்துடன் வக்கிர புத்தி கொண்டவர்களாகவே வடிவமைத்திருக்கிறார்.

மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்பவர்கள் விமல், சிங்கம் புலி. பகலில் அங்கு வேலை செய்துவிட்டு, இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில் சிறு சிறு திருட்டுக்களாக செய்து வருகிறார்கள். பணத்தையோ, பெரிய பொருட்களையோ திருட மாட்டார்கள். சிறு பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஒரு நாள் இருவரும் வெவ்வேறு வீடுகளில் ஐந்து லட்ச ரூபாயைத் திருடி விடுகிறார்கள். அதனால் அவர்கள் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதனிடையே, விமல், சிங்கம்புலி திருடும் போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் வைக்கப்பட்ட சிறு டப்பா ஒன்றையும் திருடியிருக்கிறார்கள். அதைத் தேடி ஒரு கும்பல் அவர்களைத் துரத்துகிறது. ஒரு பக்கம் போலீஸ் விசாரணை, மறுபக்கம் கும்பலின் தேடலிலிருந்து விமல், சிங்கம்புலி என்ன ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்தாலும் குறையில்லாத கதாபாத்திரங்களில் இதுவரை நடித்து வந்தவர் விமல். இந்தப் படத்தில் மிக மிக மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடியிருக்கும் பக்கத்து வீட்டு திருமணமான பெண்ணுடன் இரவு படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் பெண்ணின் உறவுக்காரப் பெண்ணான ஆஷ்னா சவேரியை, ஆபாசமாக நடந்து தன் காம வலையில் வீழ்த்துகிறார். இப்படி நடித்தால் கமர்ஷியல் ஹீரோவாகிவிடலாம் என விமலுக்கு யாரோ தவறான வழியைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆஷ்னா சவேரி மதுரைக்கார பெண்ணாம். அவர் அணிந்துள்ள ஆடை போல எந்த ஒரு மதுரைக்காரப் பெண்ணாவது அணிந்திருப்பதை இயக்குனர் காட்டியே ஆக வேண்டும். எந்தக் கோணத்தில் காட்டினால் ஆஷ்னா, ஆபாசமாக, கவர்ச்சியாகத் தெரிவாரோ அந்தக் கோணத்தில் கேமராவை வைத்து அவரை படம் பிடித்திருக்கிறார்கள்.

சப் இன்ஸ்பெக்டராக பூர்ணா. எதற்கு இந்தப் படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று கேட்க வேண்டும். நல்ல வேளை இவரையும் கவர்ச்சியாக காட்டாமல் விட்டார்களே என்பதுதான் நமக்கு இருக்கும் ஒரு ஆறுதல்.

மியா ராய் என்பவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் செய்யும் வேலையே.... அதைச் சொல்லவே வார்த்தைகள் வரவில்லை, கூசுகிறது. தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காத ஒரு மோசமான கதாபாத்திரம்.

சிங்கம் புலி, யதார்த்தமான நகைச்சுவையைக் கொடுக்கும் ஒரு நடிகர். அவரையும் இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைத்திருக்கிறார்கள். ஆனந்தராஜ், கிளைமாக்சுக்கு முன்பாக வருகிறார். அவரும் ஆபாசப் படங்களை ஓட்டும் தியேட்டர் ஓனர் என்பது கூடுதல் தகவல்.

இந்த மாதிரி படங்களில் பாடல்கள் எப்படியிருக்கிறது என்று யார் பார்க்கப் போகிறார்கள். பாடல்களில் யாரை எப்படி கிளாமர் ஆக காட்டியிருக்கிறார்கள் என்றுதானே பார்ப்பார்கள்.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் டைட்டிலில் இருந்தே ஆபாசத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அது படம் முழுக்க பஞ்சமில்லாமல் பரவியிருக்கிறது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - மிச்சமில்லாத ஆபாசம்.

 

பட குழுவினர்

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓