நாகேஷ் திரையரங்கம்,Nagesh thiraiarangam

நாகேஷ் திரையரங்கம் - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நாகேஷ் திரையரங்கம் - விமர்சனம்

தயாரிப்பு - ட்ரான்ஸ் இந்தியா மீடியா

இயக்கம் - இசாக்

இசை - ஸ்ரீ

நடிப்பு - ஆரி, ஆஷ்னா சவேரி, மசூம் சங்கர், அதுல்யா, காளி வெங்கட்

வெளியான தேதி - 16 பிப்ரவரி 2018

நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்

ரேட்டிங் - 2/5


பேய்க் கதைகளை நம் தமிழ் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் இந்தப் படத்தில் கொஞ்சம் மாற்றமாக பாழடைந்த பங்களாவில் பேய் இல்லாமல், பாழடைந்த ஒரு தியேட்டரில் பேய் இருப்பதாகக் காட்டியிருக்கிறார்கள்.


அறிமுக இயக்குனர் இசாக் தமிழ் சினிமாவில் பல தடவை பார்த்த அனாதைக் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை, பேய்க் கதையுடன் இணைத்து கொடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்ட கதையெல்லாம் ஓகே தான் ஆனால், பேய்க் கதை என்பதில் விறுவிறுப்பும், பரபரப்பும் இருக்க வேண்டாமா ?. அதை சரியாகச் செய்திருந்தால் இந்த நாகேஷ் திரையரங்கத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் ரசிகர்கள் கிடைத்திருப்பார்கள்.


வீட்டு புரோக்கர் ஆக இருப்பவர் ஆரி. அவருடைய வாய் பேச முடியாத தங்கை அதுல்யாவின் திருமணத்திற்காக அவர்களது குடும்ப சொத்தான நாகேஷ் திரையரங்கத்தை விற்பதற்காக அந்த தியேட்டர் இருக்கும் ஊருக்குச் செல்கிறார். அந்த தியேட்டரில் பேய் இருப்பதாக ஊரில் அனைவரும் கூறுகிறார்கள். அதற்கேற்றாற் போல், அந்த தியேட்டரில் தங்கியிருக்கும் போது அவருடைய கனவில் வருபவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு நாள் அந்த திரையரங்கத்தில் இருக்கும் பேய் ஆரி கண்ணுக்குத் தெரிகிறது. அந்தப் பேய் யார், அது ஏன் அங்கு இருக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


மாயா படத்திற்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வளரும் நடிகர்களில் ஆரியும் ஒருவர். ஆனால், அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. இந்த நாகேஷ் திரையரங்கம் அவருக்கு குறிப்பிடும்படியான படமாகத்தான் அமைந்துள்ளது. படத்தில் கொஞ்சம் நகைச்சுவை நடிப்பையும் அவருக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். பேயாக மாறும் போது மட்டுமே நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு.


நாயகியாக ஆஷ்னா சவேரி. ஆரியைக் காதலிப்பதைத் தவிர அவருக்கு பெரிதாக எந்த வேலையுமில்லை. துளி கூட கிளாமர் காட்டாமல் நடித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.


ஆஷ்னா காட்டத் தவறிய கிளாமரை தன் முதல் படத்தில் காட்டி யார் இவர் எனக் கேட்க வைக்கிறார் மசூம் சங்கர். நல்ல உடல்வாகுடன் இருக்கிறார், நடிப்பும் நன்றாகவே வருகிறது. பல இயக்குனர்களின் பார்வை மசூம் மீது விழுந்தால் முன்னணி நடிகையாக முன்னேற வாய்ப்புகள் உண்டு.


தற்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அதுல்யா ஆரம்பத்தில் நடிக்க சம்மதித்த படம் போலிருக்கிறது. தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆரி அம்மாவாக சித்தாரா. ஆரியின் நண்பனாக காளி வெங்கட், கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.


வில்லனாக யாரோ ஒரு புதுமுகம் நடித்திருக்கிறார், தயாரிப்பாளரோ அல்லது அவருடைய உறவினரோ தெரியவில்லை. தெரிந்த முகத்தை வில்லனாகப் போட்டிருந்தால் படத்திற்கு கொஞ்சம் பலம் கிடைத்திருக்கும்.


ஸ்ரீ என்கிற ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களை விட பின்னணி இசை பரவாயில்லை. பேய் இருக்கும் தியேட்டரைப் பார்த்தாலே பயப்படும் அளவிற்கு கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் கூடுதலாக வேலை செய்திருக்கலாம்.


மிக மெதுவாக நகரும் விதத்தில் திரைக்கதை அமைந்திருப்பது படத்திற்கு மைனஸ். திரையரங்கத்தில் இருக்கும் பேய் யார் என்பதைக் காட்டாமல் சஸ்பென்ஸ் ஆகவே கொண்டு சென்றிருக்கிறார்கள். மேக்கிங்கில் எந்த பிரமாதமும் இல்லை. பேய்ப் படங்களுக்கே உரிய சாமியார், கேரள மந்திரவாதி என பழைய சமாச்சாரங்களும் படத்தில் உண்டு. விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் இந்த நாகேஷ் திரையரங்கத்திற்கு கூட்டம் கூடியிருக்கும்.


நாகேஷ் திரையரங்கம் - ஹவுஸ் புல் அல்ல...!

 

பட குழுவினர்

நாகேஷ் திரையரங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓